under review

பாமா

From Tamil Wiki
Revision as of 16:48, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பாமா (நன்றி: விகடன்)

பாமா (ஃபாஸ்டினா பாத்திமா மேரி) (பிறப்பு: மார்ச் 14, 1958) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். வாழ்வியல் எதார்த்தங்களை, சமூக அவலங்களை எதார்த்தமாக பதிவு செய்த எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

பாமா ( நன்றி: சொல்வானம்)

பாமாவின் இயற்பெயர் ஃபாஸ்டினா பாத்திமா மேரி. பாமா விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டி என்னும் ஊரில் சூசைராஜ், செபாஸ்தியம்மா இணையருக்கு மார்ச் 14, 1958-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் அண்ணன் ராஜ் கௌதமன். கிரிங்கால் நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். பி.எஸ்.ஸி; பி.எட் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பாமா சில வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றினார். கன்னியாஸ்த்ரீ ஆனார். அங்கிருந்து பின் விலகி மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகை தரு இலக்கிய ஆளுமையாக இருந்தார். உத்திரமேரூர் அருகிலுள்ள ஓங்கூரில் ஆசிரியையாகப் பணியாற்றினார். பாமா திருமணம் செய்து கொள்ளவில்லை.

இலக்கிய வாழ்க்கை

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் எழுத ஆரம்பித்தார். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதினார். 1992-ல் முதல் நாவலான 'கருக்கு' வெளியானது. 1994-ல் சங்கதி வெளியானது. இவரது கருக்கு நாவலை லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் ஆங்கிலத்தில் மேக்மிலன் வெளியீடாக மொழிபெயர்த்துள்ளார். இம்மொழிபெயர்ப்புக்காக லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் 2000-ல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான க்ராஸ்வேர்ட் விருதைப் பெற்றார். 'கருக்கு' நாவல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. பாமாவின் 'சங்கதி' நாவல் ஆங்கிலத்திலும், பிரஞ்சிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தியா டுடே இதழில் வெளியான 'அண்ணாச்சி’ சிறுகதை பதினாறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

இலக்கிய இடம்

"பாமாவின் கருக்கு நாவல் தலித் இலக்கியத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று" என வெங்கட் சாமிநாதன் மதிப்பிடுகிறார்.

"செவ்வியல் பண்புகளைக் கொண்ட 'கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். மனத்தைக் குத்துபவற்றை அவை இல்லாதவைபோல் பாவனை செய்துகொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க, அவர்களை முட்டிமுட்டித் தொல்லை தர, அவர்களின் தடித்துப்போன தோல்களைக் கீறிவிடக் கருக்கு தேவைப்படுகிறது. உருவகமாகவும் புத்தகமாகவும்." என கருக்கு நாவலை அம்பை மதிப்பிடுகிறார்.

ஆவணப்படம்

2024-ல் பாமாவிற்கு வழங்கப்பட்ட வேர்ச்சொல் தலித் இலக்கிய விருதையொட்டி விஜயின் இயக்கத்தில், நீலம் இயக்கத்தின் தயாரிப்பில் ‘தமிழ் இலக்கியத்தின் திசை வழி’ என்ற ஆவணப்படம் வெளியானது.

விருது

  • குரல் விருது
  • தலித் முரசு விருது
  • தமிழக அரசின் ஒளவையார் விருது 2024
  • வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது 2024

நூல்கள் பட்டியல்

நாவல்
  • கருக்கு (1992)
  • சங்கதி (1994)
  • வன்மம் (2002)
  • மனுசி
சிறுகதைகள் தொகுப்பு
  • கிசும்புக்காரன் ( (1996)
  • கொண்டாட்டம்
  • ஒரு தாத்தாவும் எருமையும்
  • தவுட்டுக் குருவி

இணைப்புகள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Oct-2023, 12:39:56 IST