under review

ஜனநாயகச் சோதனைச்சாலையில் (கட்டுரைத் தொகுப்பு)

From Tamil Wiki
Revision as of 16:19, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஜனநாயகச் சோதனைச்சாலையில் (கட்டுரைத் தொகுப்பு) - ஜெயமோகன்

ஜனநாயகச் சோதனைச்சாலையில் (கட்டுரைத் தொகுப்பு) என்ற இந்தப் புத்தகம் ஜனநாயகத்தைப் பற்றியும் இந்திய வாக்காளர்களின் மனநிலையைப் பற்றியும் எளிமையாக விளக்குகிறது. புதிய வாக்காளர்களுக்கு இந்தப் புத்தகம் ஜனநாயகத்தைப் பற்றிய விரிவான கையேடு. வாக்காளரிடம் இருக்கும் அறியாமையை, அலட்சியத்தை, சுயநலங்களை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. அரசியல் சாராத ஆனால், இந்திய அரசியல்வாதிகள், வாக்காளப் பெருமக்கள் ஆகியோரின் மனநிலைகளை விவரிக்கும் முக்கியமான புத்தகம் இது.

பதிப்பு

தினமலர் நாளிதழில் 2016 சட்ட சபைத் தேர்தலை முன்னிட்டு எழுத்தாளர் ஜெயமோகன் தொடர்ந்து எழுதிய நாற்பது கட்டுரைகளைத் தொகுத்து, 'ஜனநாயகச் சோதனைச்சாலையில்’ என்ற பெயரில் நூலாக்கியுள்ளனர். இதன் முதல் பதிப்பு-2016. வெளியிட்டோர் - தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிட்டெட், மதுரை.

நூல் சுருக்கம்

எழுத்தாளர் ஜெயமோகன்

இந்த நூல் 40 கட்டுரைகளை உள்ளடக்கியது. இவை ஜனநாயகம் என்பதன் அடிப்படைகள் எவை, அது செயல்படும் விதிகள் எவை, அவற்றை வெற்றிகரமாகக் கையாள்வது எப்படி என்பதைப் பற்றிப் பேசுகின்றன- வரையறுக்கின்றன. நம்முடைய அறியாமை, நம்முடைய அலட்சியம், நம்முடைய சுயநலம் போன்றவைதான் ஜனநாயகத்தை நம்மால் சரியாகப் பயன்படுத்த முடியாமைக்குரிய காரணம் என்பதை அழுத்தமாகச் சொல்வதே இந்தக் கட்டுரைகளின் நோக்கம்.

"ஜனநாயகத்தின் அடிப்படை இரண்டே. ஒன்று, பன்முகத் தன்மை. அனைவருக்கும் இடமளிக்கும் இயல்பு. அனைவருக்கும் நடுவே ஒரு சமரசமாக, ஒத்திசைவாகச் செயல்படும் தன்மை. இரண்டு, முரணியக்கம். பல்வேறு சக்திகள் ஒன்றோடொன்று மோதி விவாதித்து முன்னகரும் இயல்பு. அவற்றைப் புரிந்துகொண்டால் மட்டுமே ஜனநாயகத்தை நம்மால் கையாள முடியும்" - எழுத்தாளர் ஜெயமோகன்

மதிப்பீடு

தனிநபர்கள் தங்களின் அனைத்துத் தோல்விகளுக்கும் சிக்கல்களுக்கும் அரசியல்வாதிகளையும் இந்திய நாட்டின் ஜனநாயக முறையையும் நமது தேசவிடுதலைக்காகப் பாடுபட்டோரையும் தேச முன்னேற்றத்துக்காக உழைத்தவர்களையும் குறைசொல்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் இதில் தங்களின் குறை என்ன? என்பதைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை. அவர்களை அவ்வாறு சிந்திக்கத் தூண்டும் புத்தகம் இது என்ற வகையில் இது ஜனநாயகத்துக்கான கையேடாக மிளிர்கிறது."இந்தக் கட்டுரைகள் வாக்குரிமை உள்ள அனைவருக்கும் அத்தியாவசிய கல்வி" - கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு, துணை ஆசிரியர், தினமலர்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:34:25 IST