under review

லட்சுமி ராஜரத்னம்

From Tamil Wiki
Revision as of 15:55, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எழுத்தாளர் லட்சுமி ராஜரத்னம்

லட்சுமி ராஜரத்னம் (மார்ச் 27, 1942 - பிப்ரவரி 8, 2021) எழுத்தாளர், நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர், ஆன்மிக உபன்யாசகர், இசைக்கலைஞர். பொது வாசிப்புக்குரிய பல சிறுகதைகளை, நாவல்களை எழுதினார். ஆன்மிக நூல்கள் பலவற்றை எழுதினார். 'சொற்சுவை நாயகி' விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார். 40 வரலாற்றுக் கதைகளை எழுதிய ஒரே பெண் எழுத்தாளராக அறியப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

லட்சுமி ராஜரத்னம், மார்ச் 27, 1942 அன்று திருச்சி சிந்தாமணியில், அனந்தசுப்ரமணியன் – ராஜலக்ஷ்மி இணையருக்குப் பிறந்தார். திருச்சியில் பள்ளிக் கல்வி கற்றார். பி.யூ.சி. வரை படித்தார்.

தனி வாழ்க்கை

லட்சுமி ராஜரத்னம் மணமானவர். கணவர் ஜி.எஸ். ராஜரத்னமும் ஓர் எழுத்தாளர். மகள் ராஜசியாமளா பிரகாஷ் நாட்டியக் கலைஞர், எழுத்தாளர். மருகமன் பிரியா கல்யாணராமன் என்னும் பிரகாஷ் (அமரர்) குமுதம் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

லட்சுமி ராஜரத்னம் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

லட்சுமி ராஜரத்னம், தந்தை வாங்கி வந்த கல்கி, கலைமகள், ஆனந்த விகடன் போன்ற இதழ்களை வாசித்து இலக்கிய ஆர்வம் பெற்றார். லட்சுமி ராஜரத்னத்தின் முதல் படைப்பு ’மட்டுவார் குழலி’ என்னும் நாடகம். இது அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது. முதல் சிறுகதை, ’அஜ்மல்கான் ரோட்’, சாவி, தினமணி கதிர் ஆசிரியராக இருந்தபோது இயக்குநர் கே. பாலசந்தரின் விமர்சனக் குறிப்புடன் வெளியானது. தொடர்ந்து ஆனந்தவிகடன், கல்கி, மங்கையர் மலர், அமுதசுரபி, தினமலர், தினத்தந்தி, இதயம் பேசுகிறது. குங்குமம் எனப் பல இதழ்களில் பல சிறுகதைகளை, நாவல்களை, தொடர்களை எழுதினார்.

தினமணி கதிரில் அதிகம் சிறுகதைகள், தொடர்கதைகளை எழுதினார். தினமணி வெளியிட்ட கதைக்கதிர் மாத இதழிலும் பல நாவல்களை எழுதினார். தினமணி கதிரின் ஆசிரியர்களாக இருந்த கே.ஆர். வாசுதேவன், நா. பார்த்தசாரதி, கி. கஸ்தூரிரங்கன் ஆகியோர் லட்சுமி ராஜரத்னத்தின் எழுத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவித்தனர்.

லட்சுமி ராஜரத்னம் நூல்கள்
நாவல் போட்டிப் பரிசுகள்

லட்சுமி ராஜரத்னம் எழுதிய ‘இதயக்கோயில்’ நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி அய்யர் நாவல் போட்டியில் பரிசு பெற்றது. பல நாவல்களுக்கிடையே சிறந்த நாவலாக இதனை எல்லார்வி தேர்ந்தெடுத்தார். இந்த நாவல், மாயாவி, நா.பா. அகிலன், கி.வா.ஜ. சாண்டில்யன் உள்ளிட்ட சக எழுத்தாளர்களால் பாரட்டப்பட்டதுடன் லட்சுமி ராஜரத்னத்திற்குச் சிறந்த புகழைத் தேடித் தந்தது.

லட்சுமி ராஜரத்னத்தின் ’அகலிகை காத்திருந்தாள்’, ’பாட்டுடைத் தலைவி’, ’அவள் வருவாளா’ போன்ற நாவல்கள் சிறந்த வரவேற்பைப் பெற்றன. குடும்பக் கதைகள் தான் என்றில்லாமல் துப்பறியும் கதைகளும், க்ரைம் கதைகளும், வரலாற்றுக் கதைகளும் எழுதினார்.

லட்சுமி ராஜரத்னம், 1,500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை, 300-க்கும் மேற்பட்ட சமூக நாவல்களை எழுதினார். ஆண் எழுத்தாளர்களுக்கு நிகராக 40 வரலாற்றுக் கதைகளை எழுதிய ஒரே பெண் எழுத்தாளராக லட்சுமிராஜரத்னம் அறியப்படுகிறார்.

நாடகம்

லட்சுமி ராஜரத்னம் நாடகங்கள் பலவற்றை எழுதினார். லட்சுமி ராஜரத்னத்தின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகின. சென்னைத் தொலைக்காட்சியிலும் பல நாடகங்கள் ஒளிபரப்பாகின. இவரது கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளிவந்தன.

இசை

லட்சுமி ராஜரத்னம் முழுமையாக இசை கற்றவர். திருச்சி, கோவை, தஞ்சை போன்ற இடங்களில் இசைக் கச்சேரிகள் செய்தார். திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவில் கலந்துகொண்டு பாடினார். எழுத்தாளரும், நாட்டியக் கலைஞருமான மகள் ராஜஷ்யாமளா பிரகாஷின் நடனங்களில் பாடினார்.

ஆன்மிகம்

லட்சுமி ராஜரத்னம் 1500-க்கும் மேற்பட்ட ஆன்மிகக் கட்டுரைகளை எழுதினார். பல ஆலய நிகழ்வுகளில் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார்.

விருதுகள்

  • 1991 மற்றும் 1993-ல் எழுத்துக்காகவும், ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்காகவும் காஞ்சி சங்கர மடத்தின் பாராட்டு.
  • ‘செந்தமிழ்ச் செல்வி’ விருது - 1999
  • கொழும்பில் உள்ள இந்து மகா சபை அளித்த ‘சொற்சுவை நாயகி’ பட்டம் – 2002
  • இலங்கையில் தொடர் சொற்பொழிவாற்றியதற்காக வாரியார் விருது
  • கலைமகள் இதழ் அளித்த வாழ்நாள் சாதனையாளர் விருது - 2018
  • கலைமகள் இதழின் சிறந்த எழுத்தாளருக்கான விருது – 2019
  • அமெரிக்க டக்ஸன் அரிசோனா பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம்
  • இலக்கியப் பீடத்தின் சிவசங்கரி விருது (மறைவுக்குப் பின்)

மறைவு

லட்சுமி ராஜரத்னம், பிப்ரவரி 8, 2021 அன்று காலமானார்.

மதிப்பீடு

லட்சுமி ராஜரத்தினம், பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதினார். தனது படைப்புகளில் தவறான சொற்பிரயோகங்களோ, எதிர்மறை விஷயங்களோ இடம்பெறாத வகையில் எழுதினார். குடும்பக் கதைகள் தான் என்றில்லாமல் துப்பறியும் கதைகளும் வரலாற்றுக் கதைகளும் எழுதினார். ஆண் எழுத்தாளர்களுக்கு நிகராக 40 வரலாற்றுக் கதைகளை எழுதிய ஒரே பெண் எழுத்தாளராக அறியப்படுகிறார்.

நூல்கள்

நாவல்கள்
  • இதயக்கோயில்
  • அகலிகை காத்திருந்தாள்
  • பாட்டுடைத் தலைவி
  • அவள் வருவாளா?
  • மதுர நிலா
  • ஆகாயப் பூக்கள்
  • அபியும் அழகனும்
  • ஆன்மிக அமுதம் - மூன்று பாகங்கள்
  • என்னோடு வா நிலா
  • என்னைக் கொன்றவன் நீ
  • ஏழு ஸ்வரங்களுக்குள்
  • இசைத் தமிழ் வளர்த்த சான்றோர்கள்
  • அக்னியின் புதல்வி
  • காதல் என்பது எதுவரை?
  • காற்றில் கலையாத மேகங்கள்
  • காற்றில் கலந்தவளே!
  • கனவு மின்னல்கள்
  • கனவு கண்டேன் துரோகி
  • கனவு ஊர்வலங்கள்
  • கண்ணாலே ஒரு காதல் கவிதை
  • கவிதாவின் காதலன்
  • கொலையே நீ வணங்காய்
  • கொஞ்சிப் பேசக் கூடாதா
  • அன்பே வா
  • அன்புள்ள அம்மாவுக்கு
  • அற்புத அதிசய ஆலயங்கள்
  • அஷ்டலட்சுமி
  • அவள் வருவாளா?
  • பவிஷ்ய புராணம்
  • பிரம்ம முடிச்சு
  • தெய்வம் தந்த பூவே
  • என் அன்னை – என் மனைவி
  • மகிழ மலையா, மர்ம மலையா?
  • மண்ணில் விழுந்த மழைத் துளிகள்
  • மறக்குமா நெஞ்சம்
  • மழை கூட தேனாகலாம்
  • முல்லைப் பூக்கள்
  • முல்லை ரோஜா
  • நான் உன்னோடு தான்
  • நானே வருவேன்
  • நடிகனின் காதலி
  • நவக்ரகங்கள்
  • நீ இல்லாத நான்
  • நீர் மேல் ஆடும் தீபங்கள்
  • நீ தானே அந்தக் குயில்
  • நெஞ்சம் எங்கே?
  • என் காதலி என்னைக் காதலி
  • என் வானம்
  • என் இதய நிலா
  • எனக்குள் நீ
  • வான ஊஞ்சல்
  • வானம் விட்டு வா நிலவே
  • யாருக்கு மாப்பிள்ளை யாரோ

மற்றும் பல.

குறுநாவல்கள்
  • லட்சுமி ராஜரத்னம் குறுநாவல்கள் (தொகுப்பு)
சிறுகதைத் தொகுப்பு
  • லட்சுமி ராஜரத்னம் சிறுகதைகள் (தொகுப்பு)
கட்டுரைத் தொகுப்பு
  • இறைத் தமிழ் வளர்த்த சான்றோர்கள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-May-2024, 09:14:08 IST