under review

தளவானூர் சமணர் குகை

From Tamil Wiki
Revision as of 14:08, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தளவானூர் குகைப்பாறை

தளவானூர் குகைப்பள்ளி (பொ.யு. 5-ம் நூற்றாண்டு) செஞ்சி அருகே உள்ள சமணர்களின் குகை. சமண கல்விநிலையமாக இருந்த இடம்.

இடம்

செஞ்சியிலிருந்து விழுப்புரம் செல்லும் பெருஞ்சாலையில் ஏறத்தாழ பதினைந்து கிலோ மீட்டர் சென்று, அங்கிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் கிளைச்சாலை வழியாக ஆறு கிலோ மீட்டர் சென்றால் தளவானூர் என்னும் சிற்றூரை அடையலாம். இவ்வூரை அடுத்துள்ள சிறிய மலை தளவானூர் மலை எனவும், பஞ்ச பாண்டவ மலை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த மலையில் தான் இயற்கையாக அமைந்த குகைப்பள்ளி காணப்படுகிறது. இப்பள்ளியில் பொ.யு. 5 அல்லது 6-ம் நூற்றாண்டில் சமணத் துறவியர் வசித்தனர்

அமைப்பு

தளவானூர் மலையின் கிழக்குப் பகுதியிலுள்ள செங்குத்தான பாறையில் பல்லவ மன்னனாகிய முதலாவது மகேந்திரன் காலத்தில் சைவ சமயக்குடை வரைக் கோயில் ஒன்று உள்ளது. பொ.யு. 7-ம் நூற்றாண்டைச் சார்ந்த இந்த குடைவரைக் கோயிலுக்கு மேலாக எண்பது அடி உயரத்தில் சமண சமயக் குகைக்கோயில் காணப்படுகிறது. குடை வரைக் கோயிலுக்குச் சற்று வடபுறத்தில் மலையின் கீழ்ப்பகுதியிலிருந்து குகைப் பள்ளியை அடைவதற்குச் சிறிய படிக்கட்டுக்களும் வெட்டப்பட்டிருக்கின்றன. இந்த படிக்கட்டுக்கள் பிற்காலத்தில் ஏற்படுதப்பட்டவை.

இயற்கையான பெரிய பாறையொன்று முன்னோக்கி நீண்டிருப்பதால் ஏற்பட்ட குகைதான் பண்டைக் காலத்தில் பள்ளியாகத் திகழ்ந்திருக்கிறது. இதில் சமணத் துறவியர் உறைந்ததைத் தெரிவிக்கும் வகையில் ஏறத்தாழ ஏழு அடி நீளத்தில் இரண்டு படுக்கைகள் வெட்டப்பட்டிருக்கின்றன. இவை காலப் போக்கில் தேய்வுற்றதனால் வழுவழுப்பானவையாகக் காணப்படுகின்றன. இந்த கற்படுக்கைகள் எப்போது தோற்றுவிக்கப்பட்டன என்பதனை வரையறை செய்வதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் இல்லையெனினும், இங்கு குடை வரைக்கோயில் ஏற்படுத்துவதற்கு முன்பு இவை வெட்டப்பட்டிருக்க வேண்டுமென்பதனை இவற்றின் எளிமையான அமைப்பிலிருந்து உணரலாம். அவ்வாறாயின் பொ.யு. 5 அல்லது 6-ம் நூற்றாண்டில் இவை செதுக்கப்பட்டிருக்கலாம்(தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் சமண சமயக் கற்படுக்கைகளைப் பொதுவாகப் பஞ்ச பாண்டவர் படுக்கைகள் எனக்கூறும் மரபு நெடுங்காலமாக உள்ளது)

சத்ருமல்லேஸ்வரம் குடைவரை கோயில்

இங்கே தளவானூர் சத்ருமல்லேஸ்வரம் குடைவரை என அறியப்படும் குடைவரைக்கோயில் உள்ளது. தொண்டை நாட்டின் பல பகுதிகளில் முன்பு சமண சமயத் துறவியர் வாழ்ந்த குகைப் பள்ளிகள் கொண்ட மலைகளில் அல்லது அவற்றையடுத்துள்ள இடங்களில் முதலாம் மகேந்திர பல்லவன் காலத்தில் இந்து சமயச் சார்பு கொண்ட குடைவரைக் கோயில்கள் தோற்றுவிக்கப்பட்டன. சீயமங்கலம், கண்ட நல்லூர், தளவானூர், திருச்சி முதலிய பல இடங்களில் சமணப் பள்ளிகளும், பல்லவர் காலக் குடைவரைக் கோயில்களும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். சமண சமய குகைப் பள்ளிகளைக் கொண்ட மலைகளில், பொ.யு. 7-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட சைவ, வைணவ மறுமலர்ச்சியினால் இந்த சமயக் குடை வரைக் கோயில்கள் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பொ.யு. 5 அல்லது 6-ம் நூற்றாண்டிலேயே சமண சமய முக்கியத்துவம் வாய்ந்த தளவானூர் மலையில் பொ.யு. 7-ம் நூற்றாண்டில் சைவ சமயக் குடைவரைக் கோயில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என ஆய்வாளர் ஏ.ஏகாம்பரநாதன் கருதுகிறார்.

உசாத்துணை

  • கே.ஆர்.ஸ்ரீனிவாசன் - Cave temples of the Pallavas
  • ஏ.ஏகாம்பநாதன் - தொண்டைமண்டல சமணக்கோயில்கள்
  • Thalavanur Caves



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:05 IST