under review

மு.கு. ஜகந்நாத ராஜா

From Tamil Wiki
Revision as of 14:06, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மு. கு. ஜகந்நாத ராஜா

மு. கு. ஜகந்நாத ராஜா (ஜூலை 26, 1933 - டிசம்பர் 2, 2008) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். பிராகிருதம், பாலி, சமஸ்கிருத மொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். இந்திய மொழிகளில் தமிழ் இலக்கியங்களின் சிறப்பை அறியத் தந்தார். தமிழ் இலக்கியம் மற்றும் தத்துவத் தளங்களில் பல நூல்களை எழுதினார். ‘பன்மொழிப் புலவர்’ என்று போற்றப்பட்டார். ஜகந்நாத ராஜாவின் ‘ஆமுக்தமால்யதா’ மொழிபெயர்ப்பு நூல், தமிழில், மொழிபெயர்ப்புக்காக முதன் முதலில் சாகித்ய அகாதெமி விருது பெற்றது.

பிறப்பு, கல்வி

மு.கு. ஜகந்நாத ராஜா தமிழ்நாட்டில் ராஜபாளையத்தில், ஜூலை 26, 1933 அன்று, குருசாமிராஜா-அம்மணியம்மாள் இணையருக்குப் பிறந்தார். ஆந்திராவில் இருந்து வந்து ராஜபாளையத்தில் குடியேறிய ராஜுக்களின் வம்சாவழியைச் சார்ந்த குடும்பம். மு. கு. ஜகந்நாத ராஜா, ராஜபாளையத்தில் உள்ள தெலுங்குப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். மேற்கல்வியைத் தொடரவில்லை. சுய ஆர்வத்தால் தமிழ், பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், துளு எனப் பல மொழிகளைக் கற்றார்.

தனி வாழ்க்கை

மு. கு. ஜகந்நாத ராஜா, மணமானவர். தந்தை பார்த்து வந்த ஏலக்காய் மொத்த வணிகத்தில் ஈடுபட்டார். மனைவி பூவம்மா. இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள்.

மு.கு. ஜகந்நாத ராஜா நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

மு.கு. ஜகந்நாத ராஜா, தெலுங்கு, பிராகிருதம், பாலி போன்ற மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்த சிறந்த படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்தார். மன்னர் கிருஷ்ணதேவராயர் தெலுங்கில் இயற்றிய காவியம் ’ஆமுக்த மால்யத’ (சூடிக் கொடுத்தவள்). இதனை, 1988-ம் ஆண்டு மு.கு.ஜகந்நாதராஜா தமிழாக்கம் செய்தார். கபிலரின் குறிஞ்சிப்பாட்டைத் தெலுங்கில் மொழிபெயர்த்தார். ‘கற்பனைப் பொய்கை’ மு. கு. ஜகந்நாத ராஜாவின் குறிப்பிடத்தகுந்த கவிதைத் தொகுப்பு. கவிதை, கட்டுரை, சிறுகதை, ஒப்பாய்வு எனப் பல களங்களில் இயங்கினார். 80-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

‘ஆதர்ஸ் கில்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பின் மாநாடுகள், புதுதில்லி, லக்னோ, ஹைதராபாத் போன்ற நகரங்களில் நடந்தபோது, அங்கிருந்த தமிழ்ச் சங்கங்களில் பங்கேற்று பல ஆய்வுரைகளை நிகழ்த்தினார்.

நூலகம்

மு. கு. ஜகந்நாத ராஜா, பல்வேறு மொழிகளின் அரிய நூல்களைக் கொண்ட ஒரு நூலகத்தை உருவாக்கினார். அதைப் பராமரிப்பதற்காக ‘ஜகந்நாத ராஜா இலக்கிய, தத்துவ ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவன அறக்கட்டளை’ (J.R.L.R. Trust) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. மு. கு. ஜகந்நாத ராஜாவின் மருமகனும், பேராசிரியருமாகிய கே.ஜி.ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்நூலகம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் 10000-த்துக்கும் மேற்பட்ட நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பொறுப்புகள்

  • 1958-ல், ராஜபாளையத்தில் மணிமேகலை மன்றத்தை நிறுவி அதன் தலைவராகப் பணியாற்றினார்.
  • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வருகைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

விருதுகள்/பரிசுகள்

மறைவு

மு. கு. ஜகந்நாத ராஜா, டிசம்பர் 2, 2008-ல், தமது 75-ம் வயதில், உடல் நலக் குறைவால் காலமானார்.

இலக்கிய இடம்

மு. கு. ஜகந்நாத ராஜா, இலக்கிய உலகில் தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயங்கியவர். சுயமாக முயன்று பல்வேறு மொழிகளைக் கற்று, அவற்றின் வளங்களைத் தனது மொழிபெயர்ப்பின் மூலம் பல மொழிகளுக்கு அளித்த அறிஞர். ‘தமிழும் பிராகிருதமும்', ‘இந்திய மொழிகளின் ஒப்பிலக்கியம்’, ’தமிழக - ஆந்திர வைணவத் தொடர்புகள்' போன்ற ஆய்வு நூல்கள் குறிப்பிடத்தக்கவை. தமிழிலிருந்து பல நூல்களைப் பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்தார். தெலுங்கு, பிராகிருதம், பாலி போன்ற மொழிகளில் உருவான பல இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்த முன்னோடித் தமிழறிஞராக மு.கு. ஜகந்நாத ராஜா மதிப்பிடப்படுகிறார்.

மு. கு. ஜகந்நாத ராஜாவைப் பற்றி ஜெயமோகன், “முறையான பெரிய கல்வி ஏதும் இல்லாதவரான ஜகன்னாத ராஜா ஏலக்காய் தோட்டம் வைத்திருந்தார். அதன் வருவாயில் வாழ்ந்தபடி மொழிகளைக் கற்றும் மொழியாக்கங்கள் செய்தும் வாழ்ந்தார். அவருக்கு தமிழ், பாலி, பிராகிருதம், தெலுங்கு, சம்ஸ்கிருதம் போன்ற பலமொழிகள் தெரிந்திருந்தன. உண்மையில் அவர் மறைவுடன் பாலியும் பிராகிருதமும் தெரிந்த கடைசித் தமிழரும் இல்லாமலாகிவிட்டார் என்று சொல்லலாம். எல்லாவகையிலும் ஜெகன்னாதராஜாவை ஒரு மொழியியல் பேராசிரியர் எனலாம்” [1] என்கிறார்.

நூல்கள்

கவிதை நூல்கள்
  • கற்பனைப் பொய்கை
  • தரிசனம் (வசன கவிதை)
  • காவிய மஞ்சரி (குறுங் காவியங்கள்)
  • ஆபுத்திர காவியம்
  • தெரு - புதுக் காவியம்
  • பிஞ்சுக் கரங்கள்
  • கவித்தொகை
  • கதா சப்த சதி (பிராகிருத மொழிக் கவிதைகள்)
ஆய்வு நூல்கள்
  • தமிழக - ஆந்திர வைணவத் தொடர்புகள்
  • வடமொழி வளத்திற்குத் தமிழரின் பங்கு
  • இந்திய மொழிகளின் ஒப்பிலக்கியம்
  • தமிழும் பிராகிருதமும்
  • சிலம்பில் சிறுபிழை
  • மணிமேகலை
  • திராவிட மொழிகளில் யாப்பியல்
  • கந்துகூரி வீரேசலிங்கம் கட்டுரைகள்
  • ஔசித்ய விசாரசர்ச்சா - வடமொழித் திறனாய்வு நூல்
  • ராஜுக்கள் சரித்திரம்
மொழிபெயர்ப்பு நூல்கள்
  • கன்யா சுல்கம்
  • சேரி
  • வேமனா
  • தேய்பிறை
  • சுமதி சதகம்
  • களாபூரணோதயம் - தெலுங்கு காவியம்
  • பம்ப்ப பாரதம் - கன்னட காவியம்
  • ஆமுக்தமால்யதா - தெலுங்கிலிருந்து தமிழுக்கு
  • கதாசப்தசதி - பிராகிருதத்திலிருந்து தமிழுக்கு
  • வஜ்ஜாலக்கம் - பிராகிருதத்திலிருந்து தமிழுக்கு
  • தீகநிகாயம் - பாலியிலிருந்து தமிழுக்கு
  • கர்பூர மஞ்சரி - பிராகிருத மொழி நாடகம்
  • சன்மதி சூத்திரம் - சமண தத்துவம்
  • உதானம் - பௌத்த தத்துவம்
  • மிலிந்தா பண்ஹா - பௌத்த தத்துவம்
  • விக்ஞப்தி மாத்ரதா சித்தி - பௌத்த தத்துவம்
  • மகாயான மஞ்சரி - பௌத்த நூல்
  • நாகானந்தம் - வடமொழி நாடகம்
  • குந்தமாலா - வடமொழி நாடகம்
  • சாணக்ய நீதி - வடமொழி நீதிநூல்
  • சாருசர்யா - வடமொழி நீதிநூல்
  • சாதன ரகசியம் - வேதாந்த நூல்
  • சிவசரணர் வசனங்கள்
  • பிரேம கீதம் - மலையாளக் கவிதை நூல்

தமிழிலிருந்து தெலுங்குக்கு:

  • சைல கீதமு (குறிஞ்சிப்பாட்டு)
  • முத்யால ஹாரமு (முத்தொள்ளாயிரம்)
  • பாரதி - சமகாலீன பாவமுலு
  • திருக்குறள் தேடகீதுலு
  • தமிழ் காவியாம்ருதம்
  • வெளி நானூறு (புறநானூறு)
  • முத்தொள்ளாயிரம் (தமிழிலிருந்து மலையாளத்துக்கு)
  • முக்த ஹார (தமிழிலிருந்து கன்னடத்துக்கு)

மற்றும் பல

உரை நூல்
  • வான் கலந்த வாசகங்கள் - வானொலி உரை
  • அறிவுக் கதம்பம் - வானொலி உரை

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Nov-2023, 13:53:42 IST