கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தம் சிதம்பரம் நடராசப் பெருமானைப் போற்றி எழுதப்பட்ட, பதினொன்றாம் திருமுறையில் இடம்பெறும் நூல்.
ஆசிரியர்
கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தத்தை இயற்றியவர் நம்பியாண்டார் நம்பி. சைவ திருமுறைகளைத் தொகுத்தவர்.
நூல் அமைப்பு
பண்ணியர் என்ற சொல் பொதுவாக சிதம்பரம் கோயிலில் பணி செய்யும் பூசகர்கள், துப்புரவுப் பணி செய்பவர், கோயில் பணியாளர்கள், கோயில் புரவலர்கள், அனைவரையும் குறிக்கும். ராஜராஜசோழன் காலத்தில் ஆடுநர், பாடுநர், திருமுறை விண்ணப்பிப்போர், தச்சர், கல் தச்சர், ஓவியவாணர்கள் போன்ற பலர் திருக்கோயில் பணிகளுக்கென நியமிக்கப்பட்டனர். பண்ணியர் என்ற சொல் சிறப்புப் பெயராக கோயிலில் பண் பாடுவோரைக் குறிக்கும். கோயிலில் இசைத் தமிழும் இயற்றமிழும் நாடகத் தமிழும் வளர்க்கப்பெற்றுவந்தன. இவற்றில் இசைத்தமிழான பண் இசைத்தல் பற்றிய சிற்றிலக்கியம் திருப்பண்ணியர் திருவிருத்தம்.பண்ணியர் என்பதை தில்லைப் பெருமான் என்று பொருள் கொண்ட உரையாளர்களும் உண்டு.
இந்நூல் திருப்பண்ணியரின் சிறப்பைப் பாடும் 70 கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆனது.
நூலின் பெயர் 'விருத்தம்' என இருந்தாலும் இதில் உள்ள பாடல்கள் கட்டளைக்கலித்துறைப் பாடல்கள். கட்டளைக்கலித்துறைப் பாடல்களும் ஐந்து சீர் கொண்ட விருத்த வகையாகவே கருதப்பட்டன.
ஒவ்வொரு பாடலிலும் சிவபெருமானின் பெருமை விதந்து ஓதப்படுகிறது. அதனுடன் கோயில் சார்ந்த பணிகள், பணியாளர்கள், கோயில் சார்ந்த சமுதாயம் போன்றன பற்றிய செய்திகளும் காட்டப்பெற்றுள்ளன. தில்லையில் நடைபெற்ற திருக்கோயில் பணிகளைப் பட்டியலிட்டு, அதனைத் தான் செய்யவில்லையே, எங்களைத் தில்லைக்காவலன் காக்கட்டும் என்று பல பாடல்களில் குறிக்கிறார் நம்பியாண்டார் நம்பி.
பாடல் நடை
அருள் பெற எண்ணார்
சிந்திக் கவும்உரை யாடவும்
செம்மல ராற்கழல்கள்
வந்திக் கவும்மனம் வாய்கரம்
என்னும் வழிகள்பெற்றும்
சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண்
ணார்தில்லை அம்பலத்துள்
அந்திக் கமர்திரு மேனிஎம்
மான்தன் அருள்பெறவே. 22
பிழை பொறுத்தருளாய்
கதியே அடியவர் எய்ப்பினில்
வைப்பாக் கருதிவைத்த
நிதியே நிமிர்புன் சடைஅமிர்
தேநின்னை என்னுள்வைத்த
மதியே வளர்தில்லை அம்பலத்
தாய்மகிழ் மாமலையாள்
பதியே பொறுத்தரு ளாய்கொடி
யேன்செய்த பல்பிழையே. 33
உசாத்துணை
- கோயில் திருப்பண்ணியர் விருத்தம், சைவம்.ஆர்க்
- கோயில் திருப்பண்ணியர் விருத்தமும் சமுதாய முன்னேற்றமும், சிறகு.காம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Sep-2023, 09:43:34 IST