under review

புதுவாழ்வு (இதழ்)

From Tamil Wiki
Revision as of 13:53, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
புதுவாழ்வு இதழ், ஜனவரி 1948

புதுவாழ்வு (1948) திராவிட இயக்கம் சார்பாக வெளிவந்த இதழ். க. அன்பழகன் இதன் ஆசிரியர். கே.ஜி. இராதாமணாளன் துணை ஆசிரியர். திராவிட இயக்கத் தலைவர்களின் மேடைப்பேச்சுக்கள், செய்திக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், தமிழ் இலக்கியக் கட்டுரைகளைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்தது.

பதிப்பு, வெளியீடு

புதுவாழ்வு இதழ், ஜனவரி 1948 முதல் சென்னையிலிருந்து வெளிவந்தது. திராவிட இயக்கச் சார்பு இதழான இதன் ஆசிரியர் க. அன்பழகன். கே.ஜி. இராதாமணாளன் துணை ஆசிரியர். 46 பக்கங்களுடன் வெளிவந்த புதுவாழ்வு இதழின் தனிப்பிரதி விலை நான்கணா. வெளிநாடுகளுக்கு ஐந்தணா. ஆண்டுச்சந்தா: உள்நாடு- மூன்று ரூபாய்; வெளிநாடு-நான்கு ரூபாய். ஆண்டினைக் குறிக்க 'மாலை' என்பதையும் மாதத்தைக் குறிக்க 'மலர்' என்பதையும் இவ்விதழ் கையாண்டது. பொங்கல் மலர்களைப் புதுவாழ்வு வெளியிட்டது.

புதுவாழ்வு - பொங்கல்மலர்

உள்ளடக்கம்

புதுவாழ்வு இதழை வரவேற்று பாரதிதாசன், முதல் இதழில்,

புதுவாழ்வு வந்ததுகாண்
பொங்கல் நாளில்!
புன்வாழ்வு தீர்ந்ததுகாண்
திராவிடத்தில்!
எதுவாழ்வு மேற்கொள்ளும்
நெறிதான் என்ன?
என்பவற்றை அழகாக
விளக்க மாக
இதுநாளில் எழுதவந்த
அறிஞன் தன்னை
என்நாவால் மனமார
வாழ்த்து கின்றேன்”

-என்று வாழ்த்தியிருந்தார்.

இதழின் தலையங்கத்தை க. அன்பழகன் எழுதினார். 'புத்தாண்டும் புதுவாழ்வும்' , 'இமயம் சரிந்தது' , 'தீர்ப்பு கூறுங்கள்' , 'தூத்துக்குடி அழைப்பு' , 'இன்பத் தமிழும் இந்துத் தானியும்' , 'தூத்துக்குடி அறிவிப்பு', 'போர்க்களம் புகுமுன்', 'வீட்டுக்கொரு பிள்ளை' , 'ஈரோடு மாநாடு ஓர் எச்சரிக்கை' , 'பொங்குக புதுமை' - எனும் தலைப்புகளில் அவை அமைந்தன.

சங்க இலக்கியம் , சிலப்பதிகாரம் ஆகியவற்றை எளிமையான வடிவில் கூறும் தொடர்கள் சில புதுவாழ்வில் வெளிவந்தன. 'அறிவியல் தந்தை ரோஜர் பேகன்', 'மாதரசி கியூரி', 'ஜான்பிரௌன்', 'புரட்சிவீரன் புரூனோ', 'கிரேக்கத்தின் கீர்த்தி' போன்ற தலைப்புகளில் மொழியாக்கக் கட்டுரைகள் வெளியாகின. ‘உரைகல்’ என்ற பகுதியில் நூல் விமர்சனங்கள் வெளிவந்தன. அண்ணாவின் சொற்பொழிவுகள், மேடைப்பேச்சுக்கள், வானொலி உரைகள் இடம் பெற்றன. சிறுகதைகளுக்கும் புதுவாழ்வு இடமளித்தது. கே.ஜி. இராதாமணாளனின் 'உறைந்த இரத்தம்', 'புதுவெள்ளம்', சரசா நாதனின், 'அவள்', தி.கி.நாகம்மாளின் 'நிர்மலா', அண்ணாவின் 'ஜெபமாலை' போன்றவை அச்சிறுகதைகளில் குறிப்பிடத்தகுந்தவை. கே.ஜி.இராதாமணாளனின், ‘பொற்சிலை’ புதினம் புதுவாழ்வில் தொடராக வெளியானது. பின்னர் அது நூலாகவும் வெளிவந்தது.

திரைப்படம் பற்றிய செய்திகள் அவ்வப்போது இடம்பெற்றன. திறனாய்வுக் கட்டுரைகளும் வெளியாகின. விளம்பரங்களுக்கும் இவ்விதழ் இடமளித்தது. தமிழ்த் திரைப்பட விளம்பரங்களும், புத்தக விளம்பரங்களும், மாநாட்டு விளம்பரங்களும் இடம் பெற்றன.

பங்களிப்பாளர்கள்

  • அண்ணா
  • இரா. நெடுஞ்செழியன்
  • கே.ஏ. மதியழகன்
  • மு. வரதராசன்
  • க. அன்பழகன்
  • அரங்கண்ணல்
  • தமிழ்ஒளி
  • கே.ஜி. இராதாமணாளன்
  • இரா.குழூஉத்தலைவனார்
  • தமிழ்ப்பித்தன்
  • அப்துல்அஜிஸ்
  • நலங்கிள்ளி
  • எழிலன்
  • இளவழகன்
  • மு. குழந்தைவேல்
  • நாரா. நாச்சியப்பன்
  • அ. மீனாம்பாள்
  • கருணானந்தம்
  • அறிவழகன்
  • நா. சகந்நாதன்

நிறுத்தம்

புதுவாழ்வு இதழ் இடைவெளிவிட்டு 10 மாதங்கள் வெளிவந்தது. பொருளாதாரப் பிரச்சனைகளால் ஜனவரி 1949-ல் நின்று போனது.

ஆவணம்

புதுவாழ்வு இதழ்கள் தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

வரலாற்று இடம்

புதுவாழ்வு இதழ் திராவிட இயக்கம் சார்ந்த கட்டுரைகளை, தமிழ் உணர்வு, இனவுணர்வைத் தூண்டும் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டது. புதிய எழுத்தாளர்களைத் திராவிட இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த இதழாக புதுவாழ்வு மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Aug-2023, 07:16:26 IST