under review

ம. தில்லைநாதநாவலர்

From Tamil Wiki
Revision as of 12:04, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ம. தில்லைநாதநாவலர் (1854 - 1939) ஈழத்து தமிழ் எழுத்தாளர், சொற்பொழிவாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ம. தில்லைநாதநாவலர் இலங்கை யாழ்ப்பாணம் தென்புலோலியூரில் மயில்வாகனனுக்கு மகனாக 1854-ல் பிறந்தார். உடுப்பிட்டிச் சிவசம்புப்புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்கள், நீதி நூல்கள், புராணங்கள் ஆகியவற்றை முறையாகப் பயின்றார்.

சொற்பொழிவாளர்

ம. தில்லைநாதநாவலர் இளமைக் காலத்தில் இந்தியாவுக்குச் சென்று சொற்பொழிவுகள் ஆற்றினார். பாண்டித்துரைத் தேவர் அவரைத் தமிழகத்திற்கு வரவேற்று உரையாடச் செய்தார். இராமநாதபுரம், கொத்தமங்கலம், தேவகோட்டை ஆகிய இடங்களில் செட்டிமார்களால் ஆதரிக்கப்பட்டு சைவ சமரசப் பிரசங்கங்கள் நிகழ்த்தினார். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் தங்கியிருந்த போது சமய விரிவுரைகள் ஆற்றினார். கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராண படனங்களுக்கு விரிவுரைகள் செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

திருவிளையாடற் புராணத்தின் வேதப்பொருள் எழுதப்பட்ட படலத்துக்கு அகவுரை எழுதி வெளியிட்டார். ’திருவள்ளுவர் சமணர் என்னும் கொள்கை மறுப்பு’ என்னுமொரு நூலும் இவரால் எழுதி வெளியிடப்பட்டது.

பட்டம்

குன்றக்குடி திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர், மதுரை ஆதீனம் திருஞானசம்பந்த தேசிகர், திருவண்ணாமலை ஆதீனம் தாண்டவராய தேசிகர் ஆகியோர் இணைந்து ம. தில்லைநாதருக்கு ’நாவலர்' பட்டம் வழங்கினர்.

மறைவு

ம. தில்லைநாதநாவலர் 1939-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • திருவள்ளுவர் சமணர் என்னும் கொள்கை மறுப்பு

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Oct-2023, 01:07:57 IST