under review

பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு

From Tamil Wiki
Revision as of 12:02, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு, சங்க காலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்கநூல் தொகுப்பு நூலான புறநானூற்றில் 246- வது பாடலாக இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

பெருங்கோப்பெண்டு எனும் புலவரின் கணவர் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன். இவரும் ஒரு புலவர்.

போரில் வெற்றிகண்ட பூதப்பாண்டியன் வீரமரணம் அடைந்தான். பெருங்கோப்பெண்டு அவனது எரியும் சிதையில் விழுந்து உடன்கட்டை ஏறினாள். பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு, இப்படித் தீயில் விழப்போகும்போது பாடிய பாடல் புறநானூற்றில் 246-ஆவது பாடலாக இடம்பெறுகிறது.

பெருங்கோப்பெண்டு தீயில் பாய்ந்ததை நேரில் கண்ட புலவர் பேராலவாயார் என்னும் புலவர் பெருங்கோப்பெண்டு அப்போது இளமையுடன் இருந்ததை தனது புறநானூற்றுப் பாடலில் ( 247) குறிப்பிடுகிறார்.

பாடல்வழி அறியவரும் செய்திகள்

  • அரசன் பூதபாண்டியன் இறந்தான். அவன் மனைவி பெருங்கோப்பெண்டு இறந்த கணவனை எரிக்க மூட்டிய தீயில் தானும் விழுந்து சாகச்செல்லும்போது சான்றோர் தடுக்கின்றனர். தன் கணவனின் சிதை எரியும் தீ பொய்கையைப்போல் குளிர்ந்திருக்கும் எனக் கூறுகிறாள்
  • கைம்பெண்கள் இலையில் கைப்பிடி அளவு அரிசியில் வெள்ளை எள் சாந்தம் சேர்த்துப் புளி ஊற்றி வெந்த சோற்றை நெய் சேர்க்காமல் உண்டனர்.தரையின் மேல் மெத்தையில்லாமல் உறங்கினர். சமூகத்தில் கைம்மைநோன்பு மிகக் கடுமையாக வலியுறுத்தப்பட்டது.

பாடல் நடை

புறநானூறு 246

திணை: பொதுவியல் துறை: ஆனந்தப் பையுள்

பல்சான் றீரே; பல்சான் றீரே
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே;
துணிவரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது,
அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்என் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆகப்,
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Nov-2023, 09:59:49 IST