யோகம் (தரிசனம்)

From Tamil Wiki
பதஞ்சலி, மேலக்கடம்பூர் ஆலயச்சுவர்

யோகம் (தரிசனம்) (யோக தர்ஸனம்) இந்திய ஞானமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று. சாங்கிய தரிசனத்தின் துணைத் தரிசனம். சாங்கியம் முன்வைக்கும் பிரகிருதி புருஷ ஞானம் என்னும் உயர்நிலையை அடைவதற்கான பயிற்சிகளை முன்வைக்கும் மரபு. சாங்கியத்தில் இருந்து பிரிந்து தனி தரிசனமாக பின்னாளில் வளர்ந்தது. இந்து மதப்பிரிவுகள், பௌத்தம், சமணம் ஆகிய மதங்களிலும் ஏற்படைந்தது, நவீன யோகப்பயிற்சி முறையாக மறுமலர்ச்சி அடைந்து உலகமெங்கும் பரவியுள்ளது

( பார்க்க யோகம்)

பிரகிருதி புருஷன்

தோற்றுவாய்

யோக தரிசனம் இந்தியாவின் பண்பாட்டின் தொடக்க காலம் முதலே இருந்துவந்துள்ளது என ஆய்வாளர் கூறுகின்றனர். மொகஞ்சதாரோ ஹரப்பா சுடுமண் இலச்சினைகளில் யோகத்திலமர்ந்த ஒரு சிலை கிடைக்கிறது. அது யோகம் என்னும் கருத்து இருந்திருப்பதற்கான சான்றாகும். சாங்கியம் போலவே யோகமும் வேதமரபு அல்லாத மரபில் இருந்து வந்தது என்பதற்கு இது சான்று.

தரிசனம்

யோகம் இந்திய ஞானமரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று. சாங்கிய தரிசனத்தின் துணைத் தரிசனமாக அது சொல்லப்படுகிறது. பலநூல்களில் சாங்கியயோகம் என்றே குறிப்பிடப்படுகிறது. சாங்கிய தரிசனம் வேதமரபுக்கு புறம்பானதாக இருந்தாலும் யோகப்பயிற்சிகளைப் பற்றி ஸ்வேதாஸ்வேதர உபநிடதம் விரிவாகப் பேசுகிறது (ஸ்வேதாஸ்வேதரம் பகுதி 2- பாடல் 10)

தனக்கென ஒரு பிரபஞ்சப்பார்வை கொண்டிருந்த சாங்கியம் யோக முறையை தன்னுடைய பயிற்சியாக விரிவாக்கம் செய்துகொண்டது. யோகம் தனக்கான தத்துவத்தை சாங்கியத்திலிருந்து பெற்றுக்கொண்டது. யோகம் சாங்கியத்தில் இருந்து உருவாகவில்லை.

ஆசிரியர்கள்

முதலாசிரியர்

யோகதரிசனத்தின் முதன்மையாசிரியர் பதஞ்சலி . இவருடைய காலகட்டம் பொமு 4 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் என பொதுவாக ஊகிக்கப்படுகிறது. பதஞ்சலி இயற்றிய யோக சூத்திரம் என்னும் நூலே யோகத்தின் முதன்மைநூலாகும். இந்நூல் இன்றும் ஒரு முதன்மையான நூலாக பயிலப்படுகிறது. ஏராளமான உரைகளும் விளக்கங்களும் இந்நுலுக்கு உள்ளன.

பதஞ்சலி யோகத்தை உருவாக்கியவர் அல்ல, அவர் அதுவரையிலான யோக மரபின் பல்வேறு கருத்துக்களை ஒருங்கிணைத்தவர். பதஞ்சலி அன்றிருந்த வெவ்வேறு யோகமரபுகளை ஒருங்கிணைத்தவர் என்றும், யோகத்தின் தரிசனத்தை சாங்கிய தரிசனத்துடன் இணைத்து தத்துவரீதியாக வலுவான அடித்தளம் அமைத்தவர் என்றும் எஸ்.என். தாஸ்குப்தா கருதுகிறார்.

உரையாசிரியர்கள்

பதஞ்சலி யோகத்திற்கு பிற்கால உரையாசிரியர்கள் எழுதிய விளக்கங்களே மேலதிக நூல்களாக கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமானவை

  • யோகபாஷ்யம் -வியாசர் (இந்நூல் வேதவியாசரால் எழுதப்பட்டது என தொன்மம். ஆனால் பொயு 4 ஆம் நூற்றாண்டில், பதஞ்சலி யோகசூத்திரம் எழுதப்பட்டு எண்ணூறாண்டுகளுக்கு பின்னர் இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர் கூறுகிறார்கள்.
  • தத்வ வைசாரதி - யோக பாஷ்யம் : வாசஸ்பதி மிஸ்ரர் பதஞ்சலி யோகசூத்திரத்திற்குப்பின் யோகமரபின் முக்கியமான நூல் இது என கருதப்படுகிறது. அதுவரையிலான எல்லா யோகவிவாதங்களையும் தொகுத்துக்கொண்டு, விரிவான சொல்லாய்வுடன் எழுதப்பட்ட கலைக்களஞ்சியத்தன்மை கொண்ட நூல் இது
  • ராஜமார்த்தாண்ட யோக பாஷ்யம் : போஜராஜன் யோகசூத்திரங்களுக்கு எழுதிய விரிவுரை
  • யோகசார சம்கிரக :விக்ஞானபிக்ஷு. யோகமரபின் முதன்மையான விளக்கங்களிலொன்று
  • யோகசிந்தாமணி - ராமனந்த சரஸ்வதி .யோகத்தின் நாதபந்தி மரபை முன்னெடுத்த உரையாக இது கருதப்படுகிறது

தத்துவம்

யோகத்தின் தரிசனம், அதன் தத்துவ விளக்கம் இரண்டுமே ஏறத்தாழ சாங்கியத்திற்குரியவை. பதஞ்சலி சாங்கிய மரபின் பிரகிருதி, புருஷன் என்னும் இரண்டு அடிப்படைக் கருதுகோள்களையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார். பிரகிருதி தன்னுணர்வு அற்ற பருப்பொருள். புருஷன் அதில் உறையும் அறியும்தன்னிலை. இரண்டுமே முதல்முடிவற்றவை. பிரகிருதி சத்வம், தமஸ், ரஜஸ் என்னும் மூன்று குணங்கள் கொண்டது. புருஷன் அக்குணங்களை உணர்வதனால் அதன் சமநிலைகுலைந்து செயல்நிலை உருவாகியது. முடிவிலாத இணைவுகள் மற்றும் பிரிவுகளால் பிரபஞ்சம் உருவாகியது. உயிர்கள் உருவாயின. புருஷன் பன்மையாகி உயிர்களிலுறையும் முடிவிலாக்கோடி தன்னிலைகளாக ஆனான்.

பிரகிருதி பிரபஞ்சமாக ஆவதன் படிநிலைகளையும் யோகம் அப்படியே சாங்கியத்திலிருந்து எடுத்துக்கொள்கிறது. பிரகிருதியில் இருந்து மஹத் பிறந்து அதிலிருந்து அகங்காரம் உருவாகி அது ஐந்து தன்மாத்திரைகள், பத்து புலன்கள், ஐந்து பருப்பொருட்கள், மனம் என இருபத்துநான்கு தத்துவங்களாகியது. இருபத்துநான்கு தத்துவங்களை அறிவதன் வழியாக பிரகிருதி புருஷ உறவை அறியலாம், அதுவே சாங்கிய ஞானம். அந்த அறிதலை அடையும் ஒருவன் அதை தன் உடலால், உணர்வால், அறிவால், உள்ளுணர்வால் தனதாக ஆக்கிக்கொள்வதற்கான பயிற்சிகளே யோகம் முன்வைப்பவை.

இருபத்து நான்கு தத்துவ வரையறை

கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என ஐந்து ஞான இந்திரியங்கள்(அறிபுலன்கள்), கைகள், கால்கள், உண்ணும் உறுப்பு, கழிவுறுப்புகள், பாலுறுப்புகள், என ஐந்து கர்ம இந்திரியங்கள் (செயற்புலன்கள்), ஒளி, ஓசை, மணம்,சுவை, தொடுதல் என்னும் ஐந்து தன்மாத்திரைகள் (நுண்ணறிதல்கள்) மனம் ஆகிய பதினாறும் ஷோடஸ கணம் என சாங்கியத்தால் அழைக்கப்படுகின்றன. இவற்றுடன் தீ, வானம், நிலம், நீர், காற்று என்னும் ஐந்து பூதங்கள் (பருப்பொருட்கள்) அகங்காரம், மகத் ஆகியவற்றுடன் பிரகிருதியையும் இணைத்தால் 24 தத்துவங்கள் உள்ளன என்று சாங்கியம் வரையறை செய்கிறது.

இந்த 24 தத்துவங்களையும் பதஞ்சலி விசேஷம், அவிசேஷம், லிங்கமாத்ரம், அலிங்கம் என நான்காகப் பிரிக்கிறார்.

  • விசேஷம்: ஐந்து பருப்பொருட்கள், ஐந்து அறிபுலன்கள், ஐந்து செயற்புலன்கள், உள்ளம். இவை சத்வம், தமஸ், ரஜஸ் ஆகிய குணங்களின் தனித்தன்மைகள் (விசேஷங்கள்) உணரப்படுகின்றன.
  • அவிசேஷம் : ஒளி, ஓசை, மணம்,சுவை, தொடுதல் என்னும் ஐந்து தன்மாத்திரைகள் மற்றும் அகங்காரம் ஆகியவை அவிசேஷம் எனப்படுகின்றன.
  • லிங்கமாத்ரம்: பிரகிருதி முதன்முதலாக அறியப்படுவதாக ஆவது, அடையாளங்களை கொள்ளத்தொடங்குவது மகத் வழியாக. ஆகவே அது லிங்கமாத்ரம்
  • அலிங்கம்: பிரகிருதி முக்குணங்களில்லாத நிலையில் அறியப்பட முடியாதது. ஆகவே அது அலிங்கம். அடையாளங்களற்றது

புருஷ பிரகிருதி உறவு

புருஷனுக்கும் பிரகிருதிக்குமான உறவே யோக தரிசனத்தின் அடிப்படை. நாம் காணும் இயர்கையானது ஒளி, செயல், இருப்புநிலை ஆகிய மூன்று இயல்புகள் கொண்டதும், புலன்களால் அறியப்படும் பருப்பொருள்தன்மை கொண்டதும், புருஷனுக்கு நுகர்வனுபவமும் அதன் வழியாக வீடுபேறும் அளிக்கும் பயன்பாடு கொண்டதுமாகும் என்று பதஞ்சலியோகம் சொல்கிறது (பதஞ்சலி யோகசூத்திரங்கள் II-18) பிரகிருதியின் இருப்பே புருஷனுக்காகத்தான். (யோகசூத்திரம் II-21)

பிரகிருதி இருப்பதனால்தான் புருஷன் அதை அறிபவனாக இருக்கிறான், பிரகிருதி இல்லையேல் அவன் இல்லை, பிரகிருதிக்கு வெளியே அவனுக்கு இருப்பில்லை. புருஷன் இப்பிரபஞ்சத்தில் பலவாக இருக்கிறான். ஆகவேதான் புருஷர்கள் கைவல்யமடைந்து இல்லாமலானாலும் பிரகிருதி நீடிக்கிறது (யோகசூத்திரம்II -22)

புருஷனுக்கும் பிரகிருதிக்கும் இடையேயான உறவுக்குக் காரணம் அவித்யை (அறியாமை). அவித்யை இல்லாமலானால் புருஷனுக்கும் பிரகிருதிக்குமான தொடர்பு இல்லாமலாகும். புருஷன் என்னும் அந்த அறிநிலை மறைகிறது. பிரகிருதி எஞ்சுகிறது. இந்த நிலைக்கு கைவல்யம் (வெறும்நிலை, தூயநிலை) என்று பெயர். கைவல்யமே யோகத்தின் இலக்கு. ஆனால் அந்த வீடுபேறை அடையவேண்டும் என்றால் ஓர் உயிரில் திகழும் புருஷன் தான் இயற்கையில் இருந்து விடுபட்டவன் என்னும் தன்னுணர்வை அடையவேண்டும். இயற்கை அவனுக்களிக்கும் அடையாளங்களைக் கடந்து அவன் தன் தூயநிலையை உணரவேண்டும் (யோகசூத்திரம் II 23-26).

ஈஸ்வரன்

நடைமுறை

புருஷன் தான் இயற்கையிலிருந்து விடுபட்ட தூய இருப்பு என உணர்ந்து அதுவாக தன்னை ஆக்கிக்கொள்வதே வீடுபேறு என்னும் கைவல்யநிலை. ஆனால் அதற்கு அந்த உண்மையை அறிதல் மட்டும் போதாது அவ்வுண்மையாகவே தன் இருத்தலை ஆக்கிக்கொள்ளவேண்டும். அதற்காகவே பதஞ்சலி விரிவான செய்முறைப் பயிற்சிகளை அளிக்கிறார்.

சித்தவிருத்தி நிரோதம்

அஷ்டாங்கம்