புருஷன்

From Tamil Wiki

புருஷன் (புருடன்) இயற்கையின் பிரக்ஞைநிலை. இயற்கையின் உள்ளுறைந்துள்ள தன்னிலை. பிரகிருதியின் மறுநிலையாக அமைபவன். பிரகிருதி என்னும் இயற்கையை அறிபவன். அதன் வழியாக இயற்கையில் குணங்களை உருவாக்குபவன். இயற்கையை இயக்கம் கொள்ளச் செய்பவன். சாங்கியதரிசனம் புருஷன் என்னும் கருத்துருவை உருவாக்கியது. வேதாந்தம் உட்பட பிற தரிசனங்கள் அதை விரிவாக்கம் செய்துகொண்டன.

சொற்பொருள்

தொன்மையான சம்ஸ்கிருத அகராதியான யாஸ்கரின் நிருக்தம் புருஷ என்னும் சொல்லை புரு என்னும் வேர் கொண்டதாக வரையறை செய்கிறது. புரு என்றால் இருப்பது. புர என்றால் இருக்கும் இடம். புருஷ என்னும் சொல்லுக்கு உறைவது, இருந்துகொண்டிருப்பது, இருப்பை உணர்வது என்று பொருள்.

தோற்றுவாய்

புருஷன் என்னும் உருவகத்தின் தோற்றுவாய் கற்காலத்தைய நீத்தோர் வழிபாடு, மூத்தோர் வழிபாடு, உடல் வழிபாடு போன்ற தொடக்கநிலையில் இருந்தே உருவாகி வருவது. புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்கால பாறைக்குடைவு ஓவியங்களில் மிகப்பெரிய மானுட உருவங்கள் வரையப்பட்டுள்ளன. படுத்திருப்பதுபோலவோ நிற்பதுபோலவோ. சில ஓவியங்களில் அவை வான்முகில்களையோ மலைகளையோ சுமந்துகொண்டிருப்பதுபோல் வரையப்பட்டுள்ளன. அந்த மானுட உடல்களின் உள்ளே பல்வேறு விலங்குகளின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்த உருவங்களுக்கு பலவகையான விளக்கங்கள் உள்ளன. ஒரு விளக்கம்., உயிர்நீத்த பெருந்தந்தைகள் அல்லது தலைவர்கள் அவ்வாறு வரையப்பட்டிருக்கலாம். அவர்களுக்காகவே நெடுங்கற்கள் நாட்டப்பட்டிருக்கின்றன. அவர்களை ஒரு சமூகமாக, ஒரு தொகையுருவமாக பார்ப்பதையே அந்த ஓவியங்களுக்குள் உள்ள உருவங்கள் காட்டுகின்றன. விலங்குகள் உள்ளிட்ட இயற்கையின் வடிவமாகவே அவர்கள் உருவகிக்கப்பட்டனர். இரண்டாவது விளக்கம், மனிதர்களை தெய்வசக்திகளுக்குப் பலிகொடுக்கும் வழக்கம் தொன்றுதொட்டே இருந்தது என பழங்குடிச் சடங்குகள் காட்டுகின்றன. அப்படிப் பலிகொடுக்கப்பட்டவர்கள் பல்வேறு பலிவிலங்குகளுக்கு நிகரானவர்கள். அவர்களின் உருவங்கள் அப்படிச் செதுக்கப்பட்டிருக்கலாம்.

உலகமெங்கும், மானுடனை, மானுட உடலை தெய்வ வடிவமாக வழிபடும் வழக்கம் உள்ளது. மானுட உடலை இயற்கையாகவும், பூமியாகவும் உருவகம் செய்துகொண்டிருந்தார்கள். இந்திய நிலத்தில் இருந்த அந்த உருவகங்களே பின்னர் புருஷன் என்னும் கருத்துருவமாக ஆயின.

வேதம்

புருஷன் என்னும் உருவகம் முதன்முதலாக ரிக்வேதத்தில் கிடைக்கிறது. ரிக்வேதத்தில் சாதாரணமாக மனிதன் என்னும் பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனித உடல் என்னும் பொருளிலும், மனித உடலுக்குள் உறையும் தன்னுணர்வு என்னும் பொருளிலும் பின்னர் பயன்படுத்தப்பட்டது. மெல்ல மெல்ல அவ்வுருவகம் அனைத்து மனிதர்களையும் இணைத்துக் கொண்ட ஒற்றை மனித உருவமாக வளர்வதை வேதங்கள் காட்டுகின்றன. கணம் அல்லது வேதகாலச் சமூகத்தின் அடையாளமாக ஒற்றைமனிதனை உருவகித்து அவனை புருஷன் என்றனர். பின்னர் பிரபஞ்சமனிதன் ஒருவனின் உருவகம் உருவாகி வந்தது. ரிக்வேதத்தின் இறுதியில், புருஷ சூக்தம் என்னும் பாடலில் இந்த பிரபஞ்சமானுடன் என்னும் புருஷ உருவகம் முழுமையடைந்தது.

வேதங்களிலும், வேதவிளக்கமாக அமையும் பிராமணங்கள் மற்றும் ஆரண்யகங்களிலும் புருஷன் என்னும் கருத்துருவம் பொதுவாகவும் தத்துவார்த்தமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது

பொதுப்பொருள்

புருஷன் என்னும் சொல் ரிக்வேதத்திலும் பிற்காலத்திலும் ‘மனிதன்’ என்பதற்கான பொதுவான சொல். அதர்வ வேதத்தின்படி புருஷன் ஐந்து பகுதிகள் கொண்டவன். ஐதரேய பிராமணத்தின் படி ஆறு பகுதிகள் கொண்டவன். வெவ்வேறு நூல்களில் வெவ்வேறு வகைகளில் இது வரையறுக்கப்படுகிறது.

புருஷா என்பது ஒரு மனிதனின் ஆயுட்காலம், 'தலைமுறை' ஆகியவற்றைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.'மாணவர்' என்னும் பொருளிலும் ஒரு வினைச்சொல்லில் அதை ஆற்றும் நபர் என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.

தத்துவப்பொருள்

புருஷசூக்தம்

வேதங்களில் உள்ள புருஷசூக்தம் (ரிக்வேதம் 10 - 90) பிரபஞ்ச மனிதன் ஒருவனை உருவகிப்பது. படைப்புக்கு முந்தைய, படைப்புக்குக் காரணமான, படைக்கப்பட்ட பிரபஞ்சமாகவும் நீடிக்கும் ஒரு மானுடப்பேருவவம் இப்பாடலில் வருகிறது. புருஷனை பலி கொடுப்பதைப் பற்றியும் இப்பாடல் சொல்கிறது. இப்பாடலில் அந்தப் பலி கவியுருவகமாக உள்ளதென்றாலும் உண்மையான மனிதபலி இருந்திருப்பதை, அந்த மனிதன் புனிதமானவனாகவும், தெய்வமாகவும் கருதப்பட்டான் என்பதை இந்த உருவகம் காட்டுகிறது. தொன்மையான பல கவித்துவ உருவகங்கள் பின்னிப்பிணைந்த இப்பாடல் பல்வேறு குறியீட்டுப்பொருட்களும் மறைஞான உள்ளடக்கமும் கொண்டதாகக் கருதப்படுகிறது ( பார்க்க புருஷ சூக்தம்)

ஆத்மசூக்தம்

வேதங்கள் கூறும் தொன்மையான ஆதிபுருஷனாக அல்லது கடவுளுருவாக தன்னை உருவகித்துக்கொள்ளும் வேதமந்திரம் இது. இதை பின்னர் வைகானஸ மரபு இறைச்சக்தியை ஒரு பூசகர் தன்னுள் வரவழைத்துக்கொள்ளும் சடங்குக்குப் பயன்படுத்திக் கொண்டது ( ஆத்ம சூக்தம்)

இருபறவைகள்

இணைப்பறவைகள் ஒரு மரக்கிளையில் அமர்ந்துள்ளன, ஒன்று பழம் உண்கிறது, இன்னொன்று பார்த்திருக்கிறது என்னும் உவமை ரிக்வேதத்தில் வருகிறது. இது புருஷனின் இயல்பைச் சொல்லும் உருவகமாக பின்னர் தைத்ரிய உபநிடதம் போன்றவற்றில் விரிவாக்கம் செய்யப்பட்டது. புருஷன் இயற்கையின் நுகர்வோன் (ஃபோக்தா) ஆகவும் வெறும் சாட்சியாகவும் ஒரே சமயம் திகழ்கிறான். (ரிக்வேதம் 1.164.20 )

சாங்கியம்

இந்து மெய்யியல் மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்றாகிய சாங்கியம் அதன் முதன்மைக் கருத்துருவாக பிரகிருதி என்பதை முன்வைக்கிறது. பிரகிருதியிலுள்ள குணங்களை அறியும் தன்னிலையை புருஷ நிலை என்கிறது. புருஷனின் அறிதலால் அவியக்தம் (வெளிப்பாடற்ற) நிலையில் இருக்கும் பிரதானம் (முதன்மை) என்னும் மூலப்பிரகிருதியானது சத்வம், தமஸ், ரஜஸ் என்னும் மூன்று குணங்களை அடைந்து வியக்தம் (வெளிப்பாடுள்ள) என்னும் பிரகிருதியாக ஆகிறது. அதுவே பிரபஞ்சமாகும். பிரபஞ்சம் என்பது பிரகிருதி தன்னுடைய மூன்றுகுணங்களின் சமநிலை இழப்பால் செயல்வடிவமாக ஆகி, முடிவிலாத இணைவு மற்றும் பிரிவுகளாக விரிந்து நிகழ்ந்துகொண்டிருப்பதாகும்.

பிரகிருதி தன்னுணர்வு, நோக்கம், செயலூக்கம் ஆகியவை அற்றது. அவற்றை பிரகிருதிக்கு அளிப்பவன் புருஷனே. புருஷனால் பிரகிருதி செயலூக்கம் பெற்று பெருகிப்பிரிகையில் புருஷனும் அவ்வண்ணமே பெருகிப்பிரிந்து முடிவிலாத தனிப்பிரக்ஞைகளாக ஆகி அப்பிரகிருதியை தனித்தனி துளிகளாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

ஆத்யாத்மிகம் (மனிதனால் விளைவது), ஆதிபௌதிகம் (இயற்கையால் விளைவது), ஆதிதெய்வீகம் (அடிப்படை விதிகளால் விளைவது) என மூன்று துயர்களுக்கு மானுடன் ஆளாகிறான் என்று சொல்லும் சாங்கியம் அத்துயர்களைப் புரிந்துகொள்வதே அதைக் கடக்கும் வழி என அறிவிக்கிறது. அத்துயர்களுக்கான காரணம் பிரகிருதி புருஷன் ஆகியவற்றுக்கிடையேயான உறவை புரிந்துகொள்ளாமலிருக்கும் அவித்யை (அறியாமை)யாகும். அதை சாங்கிய ஞானம் நீக்கும் என்று கூறுகிறது. (சாங்கிய காரிகை 44)

புருஷன் இயற்கையை உருவாக்கவில்லை, அதை மாற்றியமைப்பதில்லை, அவன் இருப்பை இயற்கை அறியாது, அவன் வெறும் சாட்சி மட்டுமே, அவனுடைய அறிதலால் இயற்கையில் முக்குணங்கள் உருவாகி இயற்கை அவனுக்காக குணங்கள் கொண்டதாக தோற்றம்கொள்கிறது. புருஷனால் மாற்றம் கொள்ளும் பிரகிருதி மஹத் என்னும் அறிதலின் நுண்ணலகை உருவாக்குகிறது. அது தன்னிலையின் தொடக்கமாகிய அகங்காரத்தை உருவாக்குகிறது. அகங்காரம் ஐந்து தன்மாத்திரைகள்,ஐந்து பருப்பொருட்கள், பத்து புலன்கள், மனம், புத்தி என பிரிந்து பிரபஞ்சத்தைச் சமைக்கிறது. இவை இருபத்துநான்கு தத்துவங்கள் என சாங்கியத்தால் சொல்லப்படுகின்றன.

புருஷன் தன்னுடைய மனம், புத்தி மற்றும் பத்து புலன்களால் அறியப்படும் பிரபஞ்சத்தை பிரகிருதி என்றும், அந்த பிரபஞ்சத்துடன் கொண்ட புலனறிவால் அறியப்படும் தன்னை புருஷன் என்றும் பிழையாக எண்ணிக்கொள்கிறான். அந்தப் பிழை மூலப்பிழை. அதைக் களைந்து புருஷனும் பிரகிருதியும் தங்கள் உண்மைப்பெருநிலையை உணர்வதே சாங்கிய ஞானமாகும்.

உசாத்துணை