under review

தூபகலசம் (நூல்)

From Tamil Wiki
Revision as of 23:53, 6 June 2024 by ASN (talk | contribs) (Page Created: Para Added and Edited: Link Created: Proof Checked)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தூபகலசம் (1892) கிறித்தவம் சார்ந்த பிரார்த்தனை நூல். காலை, மாலை வாசிக்கக்கூடிய ‘ஞான சங்கீதங்கள்’ எனப்படும் பிரார்த்தனைகளைக் கொண்டது. இந்நூலில் மொத்தம் 80 பிராத்தனைகள் இடம் பெற்றன. இதனை இயற்றியவர் ஞா. சாமுவேல்.

வெளியீடு

தூபகலசம் நூல், 1892-ல், தரங்கம்பாடியில் உள்ள லுத்தரன் மிஷன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது. இதன் மூன்றாம் பதிப்பு திருச்சியிலிருந்து 1934-ல் வெளியானது. தூபகலசம் நூலின் ஆசிரியர் ஞா. சாமுவேல்.

நோக்கம்

தூபகலசம் நூலின் நோக்கம் குறித்து ஞா. சாமுவேல், நூலின் முன்னுரையில் “இயேசுநாதர் உத்தம பிரதான ஆசாரியர். அவர் ஒரேவிசையாய்ப் பரிசுத்தத்துக்கும் பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து நித்திய மீட்குதலை உண்டுபண்ணினவர். அவர் தமது மீட்பினால் விசுவாசிகளை ராஜாக்களும் ஆசாரியருமாக்கினார். விசுவாசிகளாகிய ஞானச்சாரியாரின் ஜெபமும் தோத்திரமும் பரபரனுக்கு உகந்த தூபவர்க்கமாம். இத்தூபத்தில் கொஞ்சமடங்கிய இச்சிறு நூலைத் தூபகலசமென்கிறோம். இக்கலசம் புறதேச வேலையன்று. அதில் உள்ளது புறத்தேசச் சரக்குமன்று. தமிழ்நாட்டு வேலையும் சரக்குமாதலால் எம் போன்ற தமிழர் மனதுக்கும் நாவுக்கும் இசைந்திருக்குமென்று நம்புகிறோம். இவை தனிவாசிப்புக்கு உதவக் கருதி, இவற்றை ஒருமை நடையில் எழுதினோம்.” என்று குறிப்பிட்டார்

ஆசிரியர் குறிப்பு

தூபக்கலசம் நூலை எழுதிய ஞா. சாமுவேல், தமிழ், ஆங்கிலம், ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் மொழிகள் அறிந்த பன்மொழி அறிஞர். இவர், செப்டம்பர் 18, 1850 அன்று கும்பகோணத்தில் பிறந்தார். தரங்கம்பாடியில் உள்ள ஆங்கிலோ தமிழ்ப் பள்ளியில் கல்வி கற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். தாம் படித்த பள்ளியில் ஐந்தாம் படிவ வகுப்பிற்கு ஆசிரியராகவும், மாணவர் விடுதிக் காப்பாளராகவும் பணியாற்றினார். இறையியல் கல்லூரியில் பயிற்சி பெற்று,  தரங்கம்பாடி,  பொறையார் மற்றும் பெங்களூரில் உள்ள இறையியல் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். போதகராகப் பணியாற்றினார். தூபக்கலசம், நறுமலர்க் கொத்து, ஒரு சந்திநாள் தியானப் புத்தகம், சத்தியவேத பாயிரம், சுவிசேஷக் கீர்த்தனைகள், கிராமப் பிரசங்கப் புத்தகம், கள்ளுக்கும்மி எனப் பல நூல்களை இயற்றினார். மே 20, 1927 அன்று சென்னையில் காலமானார்.

நூல் அமைப்பு

தூபகலசம் நூல் காலை, மாலை ஜெபங்களை உள்ளடக்கியது. கீழ்க்காணும் பிரிவுகளில் அவை அமைந்தன. .

  • ஐந்து வார ஜெபங்கள்
  • பண்டிகை ஜெபங்கள்
  • நற்கருணை ஜெபங்கள்
  • குடும்ப விசேஷ ஜெபங்கள்

தூபகலசம் நூலில் மொத்தம் 80 பிரார்த்தனைகள் இடம் பெற்றன.

காலை, மாலை வாசிக்கக் கூடிய ஞான சங்கீதங்கள் கீழ்க்காணுமாறு வரிசைப்படுத்தப்பட்டன.

காலை, மாலை வாசிக்கக் கூடிய ஞான சங்கீதங்கள் (ஜெபங்கள்)
  • ஏழு ஜெபகீதங்கள்: 25, 31, 54, 56, 71, 85, 90.
  • ஏழு சகாய கீதங்கள்: 23, 27, 42, 46, 62, 73, 91.
  • ஏழு போதக கீதங்கள்: 1, 15, 60, 68, 101, 127, 133.
  • ஏழு தோத்திர கீதங்கள்: 34, 65, 67, 103, 104, 11, 117

இவை முதல் வாரம் வாசிக்க வேண்டிய ஜெபங்கள், இரண்டாம் வாரம் வாசிக்க வேண்டிய ஜெபங்கள், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் வாரம் வாசிக்க வேண்டிய ஜெபங்கள் என்று வரிசைப்படுத்தப்பட்டன.

இவற்றுடன் குடும்ப விசேஷங்களில் வாசிக்கக் கூடிய ஞானசங்கீதங்கள் பின்வருமாறு வரிசைப்படுத்தப்பட்டன.

குடும்ப விசேஷங்களில் வாசிக்கக் கூடிய ஞானசங்கீதங்கள்
  • விவாகம்: 128
  • ஞானஸ்நானம்: 127
  • இக்கட்டுக்காலம்: 77
  • கொள்ளை நோய்: 91
  • பிரயாணம்: 121
  • துக்கம்: 90

உள்ளடக்கம்

தூபகலசம் நூலில், 80 பிரார்தனைகள் இடம் பெற்றன. அவற்றுள் ஒன்று கீழ்க்காணுவது.

இரண்டாம் வாரம் திங்கள் காலை ஜெபம்:

அன்புள்ள கர்த்தராகிய பராபரனே, உமது பிதாவுடையதான தயவுகள் சொல்லிமுடியாதவைகளென்று நான் திரும்பத் திரும்பக் கண்டு உம்மை மகிமைப்படுத்துகிறேன். என்னைப் பெற்று வளரக்கத் தாய் தகப்பன்மாரையும், என்னைப் போதிக்கப் போதகமாரையும், என்னை ஆண்டு நடத்தும் அதிகாரிகளையும், எனக்கு வேலை கொடுத்துப் பராமரிக்கும் எசமான்களையும் கட்டளையிட்ட உமது பெரிய உபகாரத்துக்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். தேவரீர் எனக்கு மேலாக வைத்திருக்கும் யாவரையும்ஆசீர்வதியும். அவரவர் தம் அழைப்பில் உண்மையாயிருந்து, அதைச் சரியாய் நிறைவேற்றுவதற்கான வரத்தையும் பலத்தையும் தந்தருளும். திருச்சபையிலுள்ள தாய் தகப்பன்மார் யாவரும் தங்கள் பிள்ளைகளை உமக்குப் பயப்படுகிற பயத்திலும், உம்மை சிநேகிக்கிற சிநேகத்திலும் வளர்க்க உமது ஆவியின் ஒத்தாசையைக் கட்டளையிடும். கர்த்தாவே, நான் இன்றைக்குச் செய்யப்போகிற வேலையில் தேவரீர் என்னோடிரும். நான் எந்தக் காரியத்தைச் செய்தாலும், அதிலெல்லாம் தேவரீருடைய மகிமையையும், பிறத்தியாருடைய நன்மையையும் தேடப்பண்ணியருளும். என் உட்சீர் புறச்சீர் யாவும் அறிந்த கர்த்தாவே, என்னை நன்மைக்கென்று நினைத்தருளும் சுவாமி, ஆமேன்.

மதிப்பீடு

தூபகலசம் நூல், கிறித்தவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிரார்த்தனை நூல்களுள் ஒன்றாக அறியப்படுகிறது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.