being created

சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 12:25, 31 May 2024 by Saalini (talk | contribs) (Created page with "thumb|316x316px|''பள்ளி சின்னம்'' தேசிய வகை சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி சிலாங்கூர் மாநிலத்தில் இயங்கும் தமிழ்ப்பள்ளியாகும். சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பள்ளி சின்னம்

தேசிய வகை சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி சிலாங்கூர் மாநிலத்தில் இயங்கும் தமிழ்ப்பள்ளியாகும். சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி சிலாங்கூரின் கோல சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பள்ளியின் பதிவு எண் BBD5062.

வரலாறு

1925ஆம் ஆண்டு சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி தோட்ட நிர்வாகத்தினரால் தோற்றுவிக்கப்பட்டது. 1939ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் காரணத்தால் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு 1946இல் மீண்டும் திறக்கப்பட்டது. ஆரம்பக்காலத்தில் சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி ‘Standard Type Primary School (T), Sungai Tinggi Estate’ என்ற பெயரில் அறியப்பட்டது. 1925ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரை சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முதல் தலைமை ஆசிரியராக முத்துமாடப்பிள்ளை பணியாற்றினார்.

1957ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை 153ஆக உயர்வு கண்டது. 1959ஆம் ஆண்டு, சுங்கை திங்கி தோட்டத்தின் அருகாமையில் அமைந்திருந்த மேரி தோட்டத் தமிழ்ப்பள்ளியிலிருந்தும் மிஞ்ஞாக் தோட்டத் தமிழ்ப்பள்ளியிலிருந்தும் மாணவர்கள் ஆறாம் ஆண்டு கல்வியைத் தொடர சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு வருகை தந்தனர்.

பள்ளியின் இன்றைய கட்டடம்

1959ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியில்  192 மாணவர்கள் கல்வி பெற்றனர்.முழு நேர மலாய் மொழி ஆசிரியரும் பகுதி நேர ஆங்கில ஆசிரியரும் பள்ளியில் போதித்தனர். பள்ளியின் பெயர் மீண்டும் 1960ஆம் ஆண்டு ‘National Type Primary School (T) Sungai Tinggi Estate' என்ற பெயருக்கு மாற்றம் கண்டது.

கட்டடம்

1933ஆம் ஆண்டு சுங்கை திங்கி தோட்டத்தின் சாலை ஓரத்தில் பலகையாலும் தகரக் கூரையாலும் அடிப்படை வசதிகளின்றி பள்ளிக்கான கட்டடம் அமைந்திருந்தது. பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் 1960ஆம் ஆண்டு வாக்கில் பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை பிரச்சனையின் காரணமாக மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை மாலை வேளையில் செயல்பட்டது.

1962ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 269ஆக உயர்ந்தது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினால் 1968ஆம் ஆண்டு  இணைக்கட்டடம் கட்டுவதற்கான முயற்சி பள்ளி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு, புதிய இணைக்கட்டம் பள்ளிக்குக் கிடைத்தது.

1987ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டு வரை பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றிய எஸ். முனியாண்டி பணிக்காலத்தில் புதியதாகக் கட்டப்பட்ட இணைக்கட்டடம் தீவிபத்தால் சேதமடைந்தது. தற்காலிகமாகப் பள்ளி, தோட்டத்தில் உள்ள மண்டபத்தில் சிறிது காலம் செயல்பட்டது. தலைமையாசிரியர் எஸ்.முனியாண்டியின் தொடர் முயற்சியில் மீண்டும் பள்ளிக் கட்டடம் சீரமைக்கப்பட்டுப் பள்ளி செயல்படத் தொடங்கியது.

மாணவர் எண்ணிக்கை குறைவு

பள்ளியின் ஆரம்பக்கால கட்டடம் (1933)

1980ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தோட்டத்தில் வேலை செய்தவர்கள் தோட்டத்தைவிட்டு நகரத்திற்குக் குடிப்பெயரத் தொடங்கியவுடன் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது.

இன்றைய நிலை

தொடக்கக்காலத்தைக் காட்டிலும் குறைவான மாணவர்கள் சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இன்றும் பயின்று வருகின்றனர். குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளி என்ற பிரிவில் சுங்கை திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி இயங்கி வருகின்றது.

உசாத்துணை

  • க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).
  • மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.