under review

சரணாஞ்சலி

From Tamil Wiki
Revision as of 20:24, 27 May 2024 by ASN (talk | contribs) (Page Created: Para Added: Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சரணாஞ்சலி (1995), கிறிஸ்தவச் சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்று. ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ தொகுப்பு நூலில் இந்நூல் இடம்பெற்றது. இந்நூலின் ஆசிரியர் சூ. தாமஸ்.

வெளியீடு

சரணாஞ்சலி பாடல்களின் தொகுப்பு, ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள் நூலில் இடம்பெற்றது. இந்நூல் ஜனவரி 1, 1995 அன்று தஞ்சாவூரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிடப்பட்டது. புலவர் நாக. சண்முகம் இந்நூலைப் பதிப்பித்தார். நூலின் ஆசிரியர்: சூ. தாமஸ்.

ஆசிரியர் குறிப்பு

சூசை உடையார் தாமஸ் என்னும் சூ. தாமஸ், ஆகஸ்ட் 04, 1910 அன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோட்டாரப்பட்டி என்னும் கோட்டூரில், சூசை உடையார் - சூசையம்மாள் என்னும் பாப்பு இணையருக்குப் பிறந்தார். திருக்காட்டுப்பள்ளி சிவசாமி அய்யர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். தொடர்ந்து இல்லத்திலிருந்தே தமிழ் படித்தார். 1932-ல், மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய பிரவேசப் பண்டிதத் தேர்வில் வெற்றிபெற்றார். 1936-ல் திருவையாறு தமிழ்க் கல்லூரியில் பயின்று தமிழில் வித்துவான் பட்டம் பெற்றார். தஞ்சை தூய இருதய மகளிர் உயர்நிலைப்பள்ளியில், 22 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வேளாங்கண்ணித் திருத்தலத்தின் மீதும் அங்குக் கோயில் கொண்டுள்ள ஆரோக்கிய மாதா மீதும் மிகுந்த பக்தி கொண்டு பல சிற்றிலக்கிய நூல்களைப் படைத்தார். அவை தொகுக்கப்பட்டு ’ஏசுவின் அன்னைக்கு ஏற்றிய தீபங்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன.

நூல் அமைப்பு

சரணாஞ்சலி நூலில் 100 பாடல்கள் இடம்பெற்றன.

உள்ளடக்கம்

சரணாஞ்சலி நூல், புலவர் சூ. தாமஸ், ஆரோக்கிய அன்னையைத் தம் மனதில் நினைத்துப் போற்றியும் புகழ்ந்தும் தனக்கு வேண்டிய அருள்தனைக் கேட்டும் பாடப்பட்ட நூல். அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் திருவடிகளைப் பூங்கழல், இணையடி, அடிமலர், தாள்மலர், மலரடி, திருவடி, சேவடி, மென்கழல், துணையடி, பதமலர், குவிகழல், வியன்கழல், நற்கழல், வார்கழல், நிறைகழல், முதிர்கழல் என்றெல்லாம் பலவாறாக சரணாஞ்சலில் நூலில் புகழ்ந்துரைத்துள்ளார் சூ. தாமஸ்.

பாடல் நடை

அன்னையின் சிறப்பு

தனிமையால் உலகைத் தாங்கும்

தற்பர னெனுஞ்சே யோடு

புனிதையாம் உனையும் கண்டு

போற்றியே வணங்கப் பெற்றால்

மனிதராய்ப் பிறந்து புவியில்

மகிழ்ந்து வாழ்ந் திருத்தல் போலும்

இனிமையா னதுவே றுண்டோ

இணையடி சரணம் அம்மா

அன்னையிடம் வேண்டுதல்

பாரினில்‌ உனையே நம்பிப்‌

பக்திசெய்‌ திருக்கும்‌ ஏழை

ஆரிடம்‌ புகுவேன்‌ என்னை

அணுகிய துயரை நீக்கிக்‌

கோரிய பொருளை என்றும்‌

குறைவிலா திருக்கும்‌ வாழ்வைச்‌

சீரினில்‌ தருவாய்‌ உந்தன்‌

திருவடி சரணம்‌ அம்மா


கண்ணினால்‌ அருளைச்‌ சிந்திக்‌

கரத்தினால்‌ அபயம்‌ நல்கி

நண்ணினார்ப்‌ புரக்கும்‌ உன்னை

நம்பினார்‌ கெடுவ துண்டோ

மண்ணினான்‌ கொடியன்‌ என்று

மனத்தினால்‌ வெறுத்துத்‌ தள்ள

எண்ணினால்‌ கதிவே றில்லை

இணையடி சரணம்‌ அம்மா


அஞ்சிடேன்‌ எதற்கும்‌ தீய

அலகையின்‌ அடிமை யாகத்‌

வஞ்சிடேன்‌ உலக வாழ்வின்‌

இயர்கெடப்‌ பிறரை மாடிக்‌

கெஞ்சிடேன்‌ தவிர்க்க வொண்ணாக்‌

கேடுவந்‌ துறினும்‌ உள்ளம்‌

நஞ்சிடேன்‌ உறுதி ஈவாய்‌

நற்கழல்‌ சரணம்‌ அம்மா

பாத வணக்கம்

பிறந்தநாள் மணநாள் சேயைப்

பெற்றநாள் பெருகி ஆண்டு

நிறைந்தநாள் பிறநாள் தன்னில்

நிலத்திலோர் ஏழை வாழப்

புரிந்துநான் உனது சேவை

புரிந்தநா ளெதிலும் மிக்க

சிறந்தநா ளலவோ உந்தன்

சேவடி சரணம் அம்மா

மதிப்பீடு

சரணாஞ்சலி, அன்னை வேளாங்கண்ணியிடம் வேண்டுதலாகப் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. ஆரோக்கிய அன்னையின் சிறப்பை, பெருமையை எளிய தமிழில் இலக்கியச் சுவையுடன் கூறும் நூலாக அறியப்படுகிறது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.