under review

மாகறல் கார்த்திகேய முதலியார்

From Tamil Wiki

மாகறல் கார்த்திகேய முதலியார் (1857 -1916 ) தமிழ் அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர். மொழி நூல், தமிழ்ச் சொல் விளக்கம், வேளிர் வரலாறு மாண்பு, ஆத்திசூடி முதல் விருத்தியுரை போன்ற நூல்களை எழுதினார். தமிழ் மொழியிலிருந்து பஞ்ச திராவிடம், பாலி, காண்டி ஆகிய மொழிகள் தோன்றின என்பதை தமது ஆராய்ச்சி முடிவுகளாக வெளிப்படுத்தினார்.

வாழ்க்கைக் குறிப்பு

மாகறல் கார்த்திகேய முதலியார் 1857-ல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேட்டூரில் பிறந்தார். சபாபதி நாவலரிடம் தமிழ் கற்றார். சைதாப்பேட்டை கண்டி வெஸ்லேனியன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

மாகறல் கார்த்திகேய முதலியாரின் குறிப்பிடத்தக்க படைப்பு மொழிநூல் (PHILOLOGY) 1913-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. பாயிரவியல், இலக்கணவியல், முதனிலையியல் ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது இந்நூல். பாயிரவியல் தமிழின் தொன்மை, தமிழ் வடமொழிக்கு காலத்தால் முந்திய தன்மை, தமிழின் தோற்றம், நாவின் இயற்கையை ஒட்டியே தமிழில் ஒலிகள் அமைந்த தன்மை, சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள், இலக்கண விதிகள் ஆகியவை ஆராயப்படுகின்றன. இலக்கணவியலில் எழுத்துக்கள் மற்றும் ஒலிகளின் தொடக்கமும், அவை உருவான விதமும், புணர்ச்சி விதிகளும் கூறப்பட்டுள்ளன.

கதிரவனை அடிப்படையாய்க்‌ கொண்ட 'சுல்‌' என்பதே இயற்கைப்‌ பொருளோசைக்கு மூலமானது. என்றும்‌, அக்கதிரவனுக்கு அணுக்கமுடைய குறிஞ்சிக்‌ கருப்பொருளான மூங்கிலைக்‌. குறிக்கும்‌ சொற்களின்‌ வழியாகவும்‌ இயற்கைப்‌ பொருளோசைச்‌ சொற்கள்‌ பிறக்கின்றன என்ற கோட்பாட்டை முதனிலையியலில் விளக்குகிறார்.

தமிழில்‌ சொற்கள் இடுகுறியாகச்‌ அமையவில்லையென்பதும்‌ எல்லாச்‌ சொற்களும் பொருள்‌ குறிக்கும்‌ காரணச்‌ சொற்களே என்றும் கருதினார்.

மாகறலார்‌ மொழியாராய்ச்சியின்‌ சில முக்கியக் கூறுகள்

  • தமிழிலுள்ள ஐ, ஒள நீங்கலான பத்து உயிர்‌ எழுத்துகளும்‌, மொழிக்கு முதவில்‌ வரும்‌ உயிர்‌ மெய்யெழுத்துகளின்‌ மெய்யெ முத்துகளான க, ச, த, ந, ப,ம,வ,ய, ஞ, ங, ஆகிய பத்தும்‌ இயற்கை எழுத்தோசைகள்‌. ஏனையவாகிய, ஐ, ஒள, ஆகிய உயிரெழுத்துகளிரண்டும்‌, ல, ர, ள, ழ. ட, ண, ற, ன, என்னும்‌ மெய்‌ எட்டெழுத்தும்‌ செயற்கை எழுத்தோசைகள்‌.
  • குமரிக்கண்டக்‌ கொள்கையையும்‌ தமிழரை முதன்‌ மாந்தரெனவும்‌ தமிழை முதன்‌ மொழியெனவும்‌ ஒப்பிக்‌ கூறுதல்‌.
  • தமிழ்‌ இலக்கணக்‌ கூறுகளை அடியொற்றி மொழியாய்வு செய்யப்பட்டிருத்தல்‌
  • இடுகுறி அல்லாமல் எல்லாச்‌ சொல்லும்‌ காரணச்‌ சொல்லே என்பதை ஏற்று நூலின்‌ முதனிலையியல்‌ என்னும்‌ பகுதியில்‌ சில சொற்களை உதாரணம் காட்டியுள்ளார்.

மாகறல் கார்த்திகேய முதலியார் மதுரைத் தமிழ்ச் சங்க இதழான செந்தமிழில் தமிழ் மொழி பற்றிய கட்டுரைகளை எழுதினார். வேர்ச் சொல் ஆய்விலும் ஈடுபட்டார்.

விவாதங்கள்

மாகறல் கார்த்திகேய முதலியாரின் மொழியியல் ஆய்வில் விவாதத்துக்குரியவையாக அறிஞர்களால் கருதப்படுபவை

  • இயற்கை, செயற்கை ஓசைகள் என வகுத்ததற்கு உறுதியான காரணம் காணப்படவில்லை.
  • சு என்னும்‌ ஒன்றே இயற்கைப்‌ பொருளோசையென்றும்‌ கட்புலனாம்‌ வடிவு வட்டமொன்றே யென்றும்‌ மீண்டும் மீண்டும் தக்க சான்றுகளின்றி வலியுறுத்தல்
  • மொழிகளை ஆண்மொழி, பெண்மொழி என வகுத்தலும், தமிழை ஆண்மொழி எனக் கூறலும்
  • மொழியின்‌ பல்வேறு படிநிலை வளர்ச்சியைக்‌ காலவரையறையுடன்‌ குறிப்பிடாமை
  • மொழியின்‌ செயற்கை வளர்ச்சி நிலைகளையும்‌ இலக்கணத்‌ தோற்ற நிலை களையும்‌ குறிப்பிடாமை

நூல்கள்

  • மொழி நூல்
  • தமிழ்ச் சொல் விளக்கம்
  • வேளிர் வரலாறு மாண்பு
  • ஆத்திசூடி முதல் விருத்தியுரை

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.