விட்டகுதிரையார்

From Tamil Wiki
Revision as of 12:06, 14 April 2024 by Ramya (talk | contribs)

விட்டகுதிரையார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறிந்தொகையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

விட்டகுதிரையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடலில் இடம்பெற்ற ”விட்டகுதிரை” என்னும் வார்த்தையைக் கொண்டு இப்பெயரை அறிஞர்கள் இட்டனர்.

இலக்கிய வாழ்க்கை

விட்டகுதிரையார் குறுந்தொகையில் 74வது பாடலைப்பாடினார். குறிஞ்சித்திணையில் இடம்பெற்ற இப்பாடல் தோழி தலைவன் நிலையைக் கூறித் தலைவியை தலைவனுக்கு உடன்படுமாறு கூறும் செய்தியைக் கொண்டது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • யானை மூங்கிலை உண்ணுவதற்காக வளைத்தலும் எதற்காகவாவது அஞ்சி மூங்கிலை விடுவதும் குறிஞ்சி நிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சி.
  • வெயிலின் வெம்மையால் துன்பமடைந்த ஆனேறு காமநோயால் துன்புற்ற தலைவனுக்கு உவமை.
  • வளைக்கும் பொழுது வளைந்தாலும் இயல்பாகவே விண்ணை நோக்கி வளரும் உயர்ந்த தன்மையை உடைய மூங்கிலைப்போல, தலைவன் தலைவியிடம் அன்பாகவும் பணிவாகவும் பழகினாலும் அவன் இயல்பாகத் தலைமைப் பண்பு உடையவன்
  • தலைவன் விசைத்தெழுந்த மூங்கிலைப் போல் தலைவியோடு தனக்குள்ள தொடர்பை நீக்கிவிட்டு வேறொருபெண்ணைக் காதலிக்கத் தொடங்கிவிடுவான் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.

பாடல் நடை

  • குறுந்தொகை 74 (குறிஞ்சித்திணை)

விட்ட குதிரை விசைப்பி னன்ன
விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்
யாம்தற் படர்ந்தமை அறியான் தானும்
வேனில் ஆனேறுபோலச்
சாயினன் என்பநம் மாணலம் நயந்தே

உசாத்துணை