being created

திருப்பல்லாண்டு (சைவம்)

From Tamil Wiki

திருப்பல்லாண்டு சேந்தனாரால் இயற்றப்பட்டு, ஒன்பதாம் திருமுறையில் இடம்பெறும் பிரபந்தம். சிவபெருமானை பக்தி மிகுதியால் பல்லாண்டு வாழ வாழ்த்தும் 13 பாடல்களினால் ஆனது.

ஆசிரியர்

திருப்பல்லாண்டை இயற்றியவர் சேந்தனார். திருவெண்காட்டிற்கு அருகில் உள்ள திருநாங்கூரைச் சேர்ந்தவர். பட்டினத்தாரின் தலைமைக் கணக்கராக இருந்தவர்.

நூல் தோற்றம்

பட்டினத்தார் துறவு பூண்டபின் சேந்தனார் சிதம்பரத்தில் வாழ்ந்தார். தினமும் விறகு வெட்டி வந்து, விற்ற பணத்தில் தினமும் ஒரு சிவனடியார்க்கு உணவு அளித்துப் பின்பு தான் உணவருந்தும் வழக்கம் கொண்டிருந்தார்.

ஒரு மழை நாளில் ஈர விறகுகௐஐ விறக முடியாமல் இரவு இல்லம் வந்து, களியைத் தயாரித்து, அதையாவது ஒரு சிவனடியாருக்குக் கொடுக்க வேண்டி காத்திருந்தார். நள்ளிரவில், சிவனடியாராக நடராஜப் பெருமான் சேந்தனாரின் வீட்டிற்குச் சென்று களியை உண்டார். அடுத்த நாள் அதிகாலையில், கருவறையத் திறந்து பார்த்தபோது நடராஜரின் மேனியில் களி சிந்தியிருப்பதைக் கண்டு தெய்வக் குற்றம் நடந்ததோ என அரசருக்குத் தெரிவித்தனர். அரசனின் கனவில் சேந்தனார் அளித்த களிதான் தன் மேனியில் சிந்தியது என ஈசன் உரைத்தார்.

சிதம்பரத்தில் மார்கழி ஆருத்ரா தரிசன தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. சேந்தனாரின் சிவபக்தியை உலகுக்கு உணர்த்த, திருத்தேரினை தரையில் அழுந்தச் செய்தார் சிவபெருமான். தேர் தரையை விட்டு எழவில்லை. அசரீரீ "சேந்தன் பாட தேர் கிளம்பும்" என்றது. சேந்தன் "மன்னுக தில்லை.... பல்லாண்டு கூறுதுமே" என்ற பாடலோடு பதின்மூன்று பாடல்களைப் பாடினார். தேர் தானாகவே நகர்ந்து வலம் வந்து நிலையை அடைந்தது.

சேந்தனார் திருவிடைக்கழிக்கு வந்து ஒரு மடத்தை ஏற்படுத்தினார். மன்னன் அவருக்கு நிலங்கள் அளித்தான். இப்பொது அந்த இடம் சேந்தமங்கலம்(சேந்தன் மங்கலம்) என்று அழைக்கப்படுகிறது.

நூல் அமைப்பு

சேந்தனார் எழுதிய திருப்பல்லாண்டு அறுசீரடிகளாலான 13 பாடல்களைக் கொண்டது. எனினும்,  சீர்நிலைமை வரையறையின்றியும்,  சில  அடி  சீர்மிக்கும் குறைந்தும்  வரப்பெற்றுள்ளது.   சிதம்பரம் ஸ்தலத்தைப் புகழ்ந்து பாடுவதாக அமைந்தது.

சிவவரலாறும், அடியார்கள் வரலாறும், திருநீற்றின் சிறப்புகளும் இடம் பெற்றுள்ளன.

சிவ ஸ்தலங்களில் கால பூஜைகளின் இடையில் தீபாராதனைக்கு முன்னதாக, தமிழ் வேதமாகிய பன்னிரு திருமுறைகளிலுருந்து பாடல்களைத் தொகுத்து, பஞ்சபுராணம் (1. தேவாரம், 2. திருவாசகம், 3.திருவிசைப்பா, 4. திருப்பல்லாண்டு, 5. பெரிய புராணம் ஆகிய தொகுதிகளிலிருந்து பெறப்பட்ட பாடல்களை) எனும் ஐந்து பாசுரங்களைப் பாடுவார்கள்.

மிகக் குறைந்த பாடல்கள் கொண்டதாக இருந்தாலும், பஞ்சபுராணத்தில் திருப்பல்லாண்டு மிக முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.


இன்றைக்கும் சயாம் நாட்டில் அரச குடும்பத்து நிகழ்ச்சிகளில் இப்பதிகம் பாடப்பெற்று வருவதாகக் கூறப்பெறுகிறது.

சிறப்புகள்

பன்னிரு திருமுறைகளில் இடம்பெற்றதில் மிகக் குறைந்த பாடல்கள் கொண்ட பதிகம் திருப்பல்லாண்டு. சிவாலயங்களில் கால பூஜைகளின் இடையில் தீபாராதனைக்கு முன்னதாக, பன்னிரு திருமுறைகளிலுருந்து பாடல்களைத் தொகுத்து, பஞ்சபுராணம் ( தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம்) என்னும் தொகுப்பில் இருந்து ஐந்து பாசுரங்கள் பாடப்படும். இன்றைக்கும் சயாம்(தாய்லாந்து) நாட்டில் அரச குடும்பத்து நிகழ்ச்சிகளில் இப்பதிகம் பாடப்பெற்று வருவதாகக் கூறப்பெறுகிறது.சிதம்பரத்தின் தேர் உத்ஸவத்தின் போது ஓதுவார் பெருமக்கள் ஆகிரி ராகத்தில் திருப்பல்லாண்டு இசைப்பர்.

பாடல் நடை

கோயில்

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
   வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
   புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
   யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
   பல்லாண்டு கூறுதுமே. (1)

ஆதிரைநாள்

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
   அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி
   இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
   திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
   பல்லாண்டு கூறுதுமே. (12)

உசாத்துணை

திருப்பல்லாண்டு மூலமும் உரையும், தமிழ் இணைய கல்விக் கழகம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.