being created

கு.ப.சேது அம்மாள்

From Tamil Wiki
கு.ப.சேது அம்மாள்
கல்கியில் வெளிவந்த கதை

கு.ப.சேது அம்மாள் (1908- 2002) தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதியவர். தமிழில் சிறுகதை தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் என அறியப்படுகிறார். புகழ்பெற்ற எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் தங்கை.

பிறப்பு, கல்வி

கு.ப.சேது அம்மாள் (கும்பகோணம் பட்டாபிராமையர் சேது அம்மாள்) 1908ல் கும்பகோணத்தில் பட்டாபிராமையர் - ஜானகியம்மாள் இணையருக்கு பிறந்தார். இவருடைய மூத்தவர் கு.ப.ராஜகோபாலன். 11 வயதில் திருமணமாகியது. கணவர் இல்லத்தில் இருந்து பள்ளியிறுதி வரை படித்தார்.

திரைவாழ்க்கை

கு.ப.சேது அம்மாள் 1949 ல் பி.யூ.சின்னப்பா நடித்து நியூடோன் ஸ்டுடியோ தயாரித்த கிருஷ்ணபக்தி என்னும் படத்திற்கு சாண்டில்யன், ச.து.சு.யோகியார் ஆகியோருடன் இணைந்து கதைவசனத்தில் பங்களிப்பாற்றினார்.

இலக்கியவாழ்க்கை

கு.ப.சேது அம்மாள் கு.ப.ராஜகோபாலனுக்கு உதவியாக இருந்தார். ராஜகோபாலனுக்கு கண்புரை நோய் வந்து பார்வை மங்கலான போது அவர் கதைகளைச் சொல்ல சேது அம்மாள் எழுதினார். அவ்வாறாக இலக்கியப் பயிற்சி பெற்று தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். 1937ல் செவ்வாய்தோஷம் என்னும் முதல் சிறுகதை காந்தி இதழில் வெளிவந்தது. கு.ப.சேது அம்மாள் மணிக்கொடி இதழில் கருகிய காதல், சாவித்ரியின் கடிதம், லலிதா, குணவதி ஆகிய கதைகளை எழுதியிருக்கிறார். . 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ஒளி உதயம் என்னும் முதல் சிறுகதைத் தொகுதி 1946ல் வெளியாகியது. 13 சிறுகதைகள் கொண்ட இத்தொகுதியை தன் அண்ணன் கு.ப.ராஜகோபாலனுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். 1962 ல் இவருடைய முதல் நாவல் அம்பிகா வெளியாகியது.

கு.ப.சேது அம்மாள் வீணைக்கலைஞர். சமையல்கலை நூல்களை எழுதியிருக்கிறார். சுஜாதா ஆசிரியராக இருந்த அம்பலம் மின்னிதழில் சமையல் தொடர் ஒன்றை எழுதினார்.

மறைவு

கு.ப.சேது அம்மாள் 2002ல் சென்னையில் காலமானார்.

விருதுகள்

கு.ப.சேது அம்மாளின் படைப்புகள் 2002ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

இலக்கிய இடம்

கு.ப.சேது அம்மாள் பொதுவாசகர்களுக்குரிய எழுத்துக்களில் பெண் எழுத்தாளர்கள் எழுதிய அதே கதைக்கருக்களையே எழுதினார். பெண்கள் மீதான அடக்குமுறை, குடும்ப அமைப்பின் இறுக்கமான பிடியில் அவர்கள் சிக்கி அழிவது ஆகியவை. ஆனால் மிகையில்லாத நம்பகமான சித்தரிப்பினால் அவை இலக்கியத்தன்மை கொள்கின்றன. தமிழில் நவீன இலக்கியச் சூழலின் முதற்கட்ட பெண் இலக்கியவாதி என அவரைச் சொல்லமுடியும். அவர் ஆர்.சூடாமணி போன்ற பிற்கால எழுத்தாளர்களுக்கு முன்னோடியானவர்

இலக்கிய விமர்சகர் அ.ராமசாமி ’தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் முக்கியமானவர் கு.ப.சேது அம்மாள். தமிழ்ப்புனைகதை வரலாற்றில் பெண்ணெழுத்து என ஒன்றை உருவாக்கிப் பேசும் நூலில் கட்டாயம் இடம்பெற வேண்டிய பெயர் அவருடையது. கு.ப.சேது அம்மாளின் சிறுகதைகள் வடிவச்செம்மையும், தூக்கலாக எதையும் சொல்லாமல் உரையாடல்கள் வழி நடப்பதைக் காட்டிவிட்டு ஒதுங்கிவிடும் தன்மையும் கொண்டவை’ என்கிறார். அன்றைய பெண் எழுத்தாளர்களுக்கு இருந்த குடும்ப எல்லைகளை கடந்து சினிமா உள்ளிட்டதுறைகளிலும் அவர் ஈடுபட்டது முன்னோடியான முயற்சி

நூல்கள்

நாவல்கள்
  • அம்பிகா
  • மைதிலி
  • உஷா
  • தனி வழியே
  • ஓட்டமும் நடையும்
  • கல்பனா
  • குரலும் பதிலும்
  • உண்மையின் உள்ளம்
சிறுகதை
  • ஒளி உதயம்
  • தெய்வத்தின் பரிசு
  • வீர வனிதை
  • உயிரின் அழைப்பு
கட்டுரைகள்
  • சமையற்கலை (இருபாகங்கள்)
  • பாரதப்பெண்
  • போதி மாதவன் (புத்தர் வரலாறு)

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.