நாஞ்சில் பி.டி.சாமி

From Tamil Wiki
பி.டி.சாமி

நாஞ்சில் பி. டி. சாமி (1930- 12 செப்டெம்பர் 2004) பி.டி.சாமி. தமிழ் எழுத்தாளர்,இதழாளர். பேய்க்கதைகள் மற்றும் திகில்கதைகள் எழுதுவதில் புகழ்பெற்றிருந்தார். பொதுவாசிப்புக்கான ஏராளமான கதைகளை எழுதியிருக்கிறார். திரைக்கதை எழுதுவதிலும் ஈடுபட்டிருந்தார்

பிறப்பு, கல்வி

நாகர்கோயில் அருகே மறவன்குடியிருப்பு என்னும் ஊரில் 1930ல் பி.டி.சாமி பிறந்தார். முழுப்பெயர் பி.தங்கசாமி நாடார். பள்ளியிறுதி வரை பயின்றார்

தனிவாழ்க்கை

பி.டி.சாமி நாகர்கோயில் கோட்டாறில் தையல்கலைஞராக வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் தினத்தந்தியின் முகவரும் செய்தியாளருமாக ஆனார். தினத்தந்தியில் இருந்து வெளியேறிய பின்னர் முழுநேர எழுத்தாளராகவே வாழ்ந்தார். தன் படைப்புகளை தானே வெளியிட பதிப்பகம் ஒன்றையும் நடத்தினார். பி.டி.சாமியின் மனைவி இலட்சுமி. தங்கம், சித்ரா என இரண்டு மகள்கள்.

எழுத்துவாழ்க்கை

தினத்தந்தியில் செய்திகள் எழுதிக்கொண்டிருந்த பி.டி.சாமி நாகர்கோயிலில் வெளிவந்துகொண்டிருந்த சிறிய இதழ்களில் நாஞ்சில் .பி.டி.சாமி என்னும் பெயரில் பேய்க்கதைகள் எழுதினார். சிறிய சந்தைப்பதிப்புகளாக இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை வெளியிட்டார். தினத்தந்தி ராணி வார இதழை தொடங்கியபோது அதில் கதைகளை எழுதத்தொடங்கினார். விரைவிலேயே அவருடைய பேய்க்கதைகள் எளியவாசகர்கள் நடுவே புகழ்பெற்றன. அவருடைய பேய்க்கதைகள் எளிமையான சொற்களும், ஓரிரு வார்த்தைகள் மட்டும் கொண்ட சொற்றொடர்களும், சுருக்கமான விவரணைகளும் கொண்டவை.குறைவான கல்வி கொண்ட வாசகர்கள் வாசிக்கத்தக்கவை. பெரும்பாலான கதைகளில் நடமாடும் எலும்புக்கூடு, சூனியக்காரக் கிழவி ஆகிய கதாபாத்திரங்கள் வரும். அவருடைய கதைகளில் மெழுகுமாளிகை அவருக்கு பெரும்புகழை ஈட்டித்தந்தது.

வெளியீட்டாளர்

பி.டி.சாமி தொடக்கம் முதலே தங்கம் பிரசுரம் போன்ற பல பெயர்களில் தன் நாவல்களை வெளியிட்டு வந்தார். அவை வழக்கமான புத்தக விற்பனைக் கடைகள் வழியாக விற்கப்படவில்லை. மலிவுவிலை நூல்களாக அச்சிடப்பட்டு சந்தைப்பதிப்புகளாக வெளியிடப்பட்டு சிறுவியாபாரிகளால் விற்கப்பட்டன். பி.டி.சாமி பங்குதாரர்களைச் சேர்த்துக்கொண்டு 1981ல் மீனா காமிக்ஸ் என்னும் பதிப்பகத்தை தொடங்கி தன் கதைகளை படக்கதைகளாக வெளியிட்டார்.

திரைவாழ்க்கை

1970 முதல் சென்னையில் வெவ்வேறு திரைப்படங்களின் கதைவிவாதங்களில் பி.டிசாமி பங்கெடுத்தார். ஜெய்சங்கர் நடித்து ராமகிருஷ்ணா இயக்கத்தில் 1975ல் வெளிவந்த ஹோட்டல் சொர்க்கம் படத்திற்கு கதைவசனம் எழுதினார். படம் வெற்றிபெறவே தொடர்ந்து எட்டு படங்களுக்கு கதைவசனம் எழுதினார். நாஞ்சில் துரை இயக்கத்தில் 1977ல் வெளிவந்த புனித அந்தோனியார் என்னும் படத்திற்கு கதை,வசனம் எழுதியதுடன் இணை இயக்குநராகவும் பணியாற்றினார். அதைத்தொடர்ந்து 1979ல் பாடும் பச்சைக்கிளி என்றபடத்தை தானே தயாரித்து இயக்கினார். கதை வசனமும் தானே எழுதினார். அப்படம் வெளிவராமல் போகவே சேர்த்த பணத்தை முழுமையாகவே இழந்தார்.

விருதுகள்

நாஞ்சில் பி.டி.சாமி 2003ல் நாடகத்துகான கலைமாமணி விருதை பெற்றார்.

மறைவு

12 செப்டெம்பர் 2004 ல் பி.டி.சாமி மறைந்தார்.

உசாத்துணை