கு. அழகிரிசாமி

From Tamil Wiki

கு. அழகிரிசாமி ( 23 செப்டெம்பர் 1923 - 5 ஜூலை 1970)) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகளில் சாதனை புரிந்தவர் என அறியப்படுகிறார். இதழாளர், இசையிலும் நாட்டாரியலிலும் ஆய்வுகள் செய்தவர்.

பிறப்பு, கல்வி

திருநெல்வேலி மாவட்டத்தில் கோயில்பட்டி அருகே இடைச்செவல் என்னும் ஊரில் 23 செப்டெம்பர் 1923 ல் குருசாமி-தாயம்மாள் ஆகியோருக்கு முதல் மகனாகப் பிறந்தார். தெலுங்கு பேசும் பொற்கொல்லர் குடியைச் சேர்ந்தவர்கள். இடைச்செவலில் கி.ராஜநாராயணன் வீடு இருந்த அதே தெருவில்தான் அழகிரிசாமியின் வீடும் இருந்தது. அவர்கள் இளமைக்கால நண்பர்கள். (தமிழகத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவர் சாகித்ய அக்காதமி விருது பெற்றது இடைச்செவலில்தான்).

அழகிரிசாமியின் குடும்பத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வழக்கம் இருக்கவில்லை. இளமையிலேயே தொழில் பயிற்றுவிப்பார்கள். ஆனால் சிறுவனாக இருந்தபோது வீட்டுமுன் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஒரு மாட்டுவண்டிச் சக்கரத்தில் ஏறிவிளையாடியபோது அது சரிந்து விழுந்து அழகிரிசாமியின் கை ஒடிந்தது. அதற்கு சரியான கட்டு போடாமையால் ஒருகை செயலிழந்தது. ஆகவே அவரால் தொழில்செய்ய முடியாது என பள்ளிக்கு அனுப்பினார்கள். பல்வேறு உதவிகளால் பள்ளி இறுதி வரை அழகிரி சாமி படித்தார். இடைச்செவல் ஊரில் முதலில் பள்ளியிறுதிப் படிப்பை முடித்தவர் அவரே

தனிவாழ்க்கை

கு.அழகிரிசாமி கோயில்பட்டி அருகே ஒரு சிற்றூரில் அரசு உதவிபெறும் பஞ்சாயத்துபோர்டு பள்ளியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியராகச் சேர்ந்தார். சார்பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தர் வேலை கிடைத்தது. முப்பத்தைந்து ரூபாய் ஊதியம் அளித்த அந்த வேலை அன்று மதிப்பு மிக்கது. ஆனால் அவரால் அவ்வேலையில் ஈடுபட முடியவில்லை. வேலையில் இருக்கையிலேயே கதைகளை எழுதிக்கொண்டிருந்தார். அவருடைய கதைகளை வெளியிட்ட ஆனந்தபோதினி இதழின் ஆசிரியர் நாரண துரைக்கண்ணன் அவரை சென்னைக்கு வரும்படி அழைத்தார்.சென்னைக்குச் சென்ற அழகிரிசாமி அங்கே இதழாளர்களுக்கு அளிக்கப்பட்ட மிகச்சிறிய ஊதியத்தில் வாழமுடியாமல் மீண்டும் கோயில்பட்டிக்கே வந்து சார்பதிவாளர் அலுவலக வேலையை ஏற்றார். ஆனால் அந்த வேலையில் அவர் உள்ளம் செல்லவில்லை. எனவே மீண்டும் வேலையை துறந்து ஆனந்தபோதினி இதழில் சென்று சேர்ந்தார்.

1952ல் அழகிரிசாமி மலேசியா தமிழ்நேசன் இதழின் ஆசிரியராக சென்றார். 1955 ல் மலேசியாவில் வில்லிபாரதம், முக்கூடற்பள்ளு இசைநாடகங்களை அவர் தயாரிக்கும் பணியில் இருந்தபோது இசையிலும் நடிப்பிலும் ஆர்வம் கொண்டிருந்த சீதாலட்சுமியை சந்தித்து காதல்கொண்டு மணந்துகொண்டார்.1957ல் மனைவியுடனும் மகனுடனும் தமிழ்நாட்டுக்கு திரும்பிய அழகிரிசாமி காந்தி நூல்வெளியீட்டு கழகத்தில் மூன்றாண்டுகள் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். 1960 முதல் நவசக்தி இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1965ல் அப்பணியில் இருந்து விலகி 1970ல் மறைவது வரை சுதந்திர எழுத்தாளராக வாழ்ந்தார்.

அழகிரிசாமியின் மகன் சாரங்கன் ஒலிப்பதிவு நிபுணராக பணியாற்றுகிறார்.

இதழியல்

1944 ல் ஆனந்தபோதினி இதழில் பணிக்குச் சேர்ந்த அழகிரிசாமி அதை உதறிவிட்டு வந்து சில மாதங்களில் மீண்டும் சேர்ந்தார். 1952 வரை ஆனந்தபோதினி, பிரசண்ட விகடன், தமிழ் மணி, சக்தி ஆகிய இதழ்களில் உதவியாசிரியராக பணியாற்றினார். இக்காலகட்டத்தில் கி.ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதத்தில் எட்டு ஆண்டு உழைப்பில் 125 ரூபாய் சம்பளத்தைக்கூட எட்டமுடியவில்லை என்றும் தனக்கு திருப்தியான எதையும் எழுதாததனால் 1952 வரை எவருக்கும் தன் பெயர் தெரியாது என்றும் அழகிரிசாமி வருந்துகிறார்.

1952 ல் அழகிரிசாமி மலேசியாவில் தமிழ்நேசன் இதழின் ஆசிரியராக சென்றார். அவர் வாழ்க்கையில் இருந்த வறுமை மறைந்தது. 1952 முதல் 1957 வரை அவர் மலேசியாவில் வாழ்ந்த காலகட்டத்தில் மலேசிய இலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கினார். 1957ல் அழகிரிசாமி மலேசிய தமிழர்களின் உரிமைகளை வலியுறுத்தி எழுதிய தலையங்கம் அரசின் சீற்றத்துக்கு ஆளானபோது அழகிரிசாமியை தமிழ்நேசன் இதழ் பணிநீக்கம் செய்தது.

அழகிரிசாமி 1960 முதல் நவசக்தி இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். 1965ல் அப்பணியில் இருந்து விலகினார்.1970ல் சோவியத் லேண்ட் இதழ் அவருக்கு ஆசிரியர்பொறுப்பை அளித்தது. ஆனால் மூன்று மாதங்களே அங்கு அவர் பணிபுரிந்தார். அதற்குள் அவர் நோயுற்று மறைந்தார்.

இசைப்பணி

கு.அழகிரிசாமிக்கு மரபிசையில் ஆர்வமும் பயிற்சியும் இருந்தது. தமிழில் இசைப்பாடல்களை எழுதுவது, வழக்கொழிந்துபோன இசைப்பாடல்களை தேடித் தொகுப்பது ஆகியவற்றில் ஈடுபட்டதை அவருடைய கடிதங்கள் காட்டுகின்றன. அவர் மலேசியாவில் இருந்தபோது வில்லிபாரதம் முக்கூடற்பள்ளு ஆகிய இசைநாடகங்களை தயாரித்தார்.

இலக்கியவாழ்க்கை

அழகிரிசாமி 1942ல் தன் முதல் படைப்பான உறக்கம் கொள்ளுமா எனும் கதையை ஆனந்தபோதினியில் வெளியிட்டார். இதழ்களில் பணியில் சேர்ந்தபின் வெவ்வேறு பெயர்களில் இதழ்களில் எழுதினார்.

மொழியாக்கங்கள்

அழகிரிசாமி சென்னையில் இதழ்களில் வேலைபார்க்கும்போது ரஷ்ய இலக்கியம் மீது ஆர்வம்கொண்டு 1950ல் மாக்ஸிம் கார்க்கியின் அமெரிக்காவிலே, லெனினுடன் சில நாட்கள் ஆகிய நூல்களை மொழியாக்கம் செய்தார். பின்னர் காந்தி நூல்வெளியீட்டு நிலையத்தில் பணிபுரியும்போது மாக்சிம் கார்க்கியின் யுத்தம் வேண்டாம், விரோதி பணியாவிட்டால் ஆகிய கட்டுரைநூல்களை தமிழில் கொண்டுவந்தார். பலநாட்டுச் சிறுகதைகள் என்னும் பெயரில் கதைகளை மொழியாக்கம் செய்தார். லாரன்ஸ் பன்யனின் அக்பர், குடியரசுத்தலைவர் ராஜேந்திரபிரசாத்தின் இந்திய ஒருமைப்பாடு, ஆகியநூல்களை மொழியாக்கம் செய்தார்.

பதிப்புப்பணி

அழகிரிசாமிக்கு சிற்றிலக்கியங்கள், நாட்டாரிலக்கியங்களை முறையாகப் பதிப்பிக்கவேண்டும் என்னும் ஆர்வம் இருந்தது. பதிப்பிக்க எண்ணிய நூல்களைப்பற்றி அவர் கி.ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களில் குறிப்பிடுகிறார். சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் எழுதிய காவடிச்சிந்து நூலின் செம்மைசெய்யப்பட்ட பதிப்பை அழகிரிசாமி தொகுக்க சக்தி காரியாலயம் வெளியிட்டது. கம்பராமாயணத்தின் தேர்வுசெய்யப்பட்ட பகுதிகளை குறிப்புகளுடன் பதிப்பித்தார். ஆண்டான் கவிராயர் போன்ற அறியப்படாத கவிஞர்களின் தனிப்பாடல்களை திரட்டி நூலாக்குவதைப் பற்றி கி.ராஜநாராயணனுக்கு ஆர்வத்துடன் எழுதியிருக்கிறார்

நாடகங்கள்

கு.அழகிரிசாமிக்கு நாடகங்கள் மேல் தொடர் ஈடுபாடு இருந்தது. அவர் எழுதிய கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்னும் நாடகம் எஸ்.வி.சகஸ்ரநாமம் குழுவினரால் மேடையேற்றப்பட்டது.

புனைவிலக்கியங்கள்

952ல் அழகிரிசாமி எழுதிய ’கு.அழகிரிசாமியின் கதைகள்’ என்னும் நூல் சக்தி காரியாலயத்தால் வெளியிடப்பட்டது. அழகிரிசாமி நாவல்களை இதழ்களில் தொடராக எழுதினார். முழுநேர எழுத்தாளரானபிறகு சுதேசமித்திரன், கல்கி போன்ற இதழ்களில் தொடர்நாவல்கள் வெளிவந்தன. அவருடைய சிறந்த சிறுகதைகள் 1960 முதல் 1965 வரையிலான காலகட்டத்தில் அவர் நவசக்தி இதழில் பணியாற்றியபோது எழுதப்பட்டவை.

நூல்கள்

நாவல்

  • டாக்டர் அனுராதா
  • தீராத விளையாட்டு
  • புது வீடு புது உலகம்
  • வாழ்க்கைப் பாதை
  • சிறுவர் இலக்கியம்
  • மூன்று பிள்ளைகள்
  • காளிவரம்
மொழிபெயர்ப்பு
  • தர்மரட்சகன் (1950) (குஸ்தாவ் ப்ளாப்ர்ட் புதினம் ஜுலியஸ்)
  • மாக்சிம் கார்க்கியின் நூல்கள்
  • லெனினுடன் சில நாட்கள்
  • அமெரிக்காவிலே
  • யுத்தம் வேண்டும்
  • விரோதி
  • பணியவிட்டால்
  • பலநாட்டுச் சிறுகதைகள் (1961, தமிழ் புத்தகாலயம்)
நாடகங்கள்
  • வஞ்ச மகள்
  • கவிச்சக்கரவர்த்தி
சிறுகதைத் தொகுப்புகள்
  • அன்பளிப்பு
  • சிரிக்கவில்லை
  • தவப்பயன்
  • வரப்பிரசாதம்
  • கவியும் காதலும்
  • செவிசாய்க்க ஒருவன்
  • புதிய ரோஜா
  • துறவு
கட்டுரைத் தொகுப்பு
  • இலக்கியத்தேன்
  • தமிழ் தந்த கவியின்பம்
  • தமிழ் தந்த கவிச்செல்வம்
  • நான் கண்ட எழுத்தாளர்கள்

உசாத்துணை

https://solvanam.com/author/kalagirisamy/