under review

மயன் (கவிஞர்)

From Tamil Wiki
Revision as of 20:56, 6 March 2024 by ASN (talk | contribs) (Page Created: Para Added: Images Added: Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கவிஞர் மயன் (படம் நன்றி: அமுதசுரபி, மார்ச், 2024 இதழ்)

மயன் (ரெ. சுப்பிரமணியன்) (பிறப்பு: ஜூலை 1, 1928) கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், ஓவியர். ஓவிய ஆசிரியராகப் பணியாற்றினார். ஆயிரக்கணக்கான மரபுக் கவிதைகளை எழுதினார். ஆன்மிக இதழ்களில் ஆன்மிகக் கட்டுரைகளை எழுதினார். பாரதி கலைக்கழகம் வழங்கிய கவிமாமணி பட்டம் உள்பட பல்வேறு விருதுகளும் பட்டங்களும் பெற்றார்.

பிறப்பு, கல்வி

ரெ. சுப்பிரமணியன் என்னும் இயற்பெயர் கொண்ட மயன், நாகப்பட்டினம் மாவட்டம் செம்போடை கிராமத்தில், ஜூலை 1, 1928-ல் பிறந்தார். உள்ளூரில் பள்ளிக் கல்வி பயின்றவர், கும்பகோணம் கலைப்பயிற்சிக் கூடத்தில் ஓவியப் பயிற்சி பெற்றார். தஞ்சாவூரில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

மயன் செம்போடை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி போன்ற ஊர்களில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். 1958-ல், சென்னை கோபாலபுரம் பள்ளியில் ஓவியம் மற்றும் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மணமானவர். மனைவி: விசாலம். மகன்: ரவிச்சந்திரன். மகள்கள்: ராஜேஸ்வரி, ரேவதி, உமா.

மயன் கவிதை

இலக்கிய வாழ்க்கை

மயன் மரபுக் கவிதைகள் மீது ஆர்வம் கொண்டு பல மரபுக் கவிதைகளை எழுதினார். பாரதி கலைக்கழகத்துடன் இணைந்து பல கவியரங்க நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். ஆயிரக்கணக்கான கவிதைகளை எழுதினார். சந்த நயங்களுடன் எழுதுவதில் தேர்ந்தவராக இருந்தார்.

மேனாள் கர்நாடக முதல்வர் வீரப்ப மொய்லி கன்னடத்தில் எழுதிய ராமாயண நூலை, தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், ’ஸ்ரீ ராமாயணப் பெருந்தேடல்’ என்ற தலைப்பில், 6000 பாடல்கள் கொண்ட நூலாக எழுதினார்.

மயனின் கவிதை மற்றும் கட்டுரைகள் கோபுர தரிசனம், திருமால், இலக்கியப்பீடம், அமுதசுரபி உள்ளிட்ட இதழ்களில் வெளியாகின. ‘மந்திர கீதம்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். நூற்றுக்கணக்கான ஆன்மிகக் கட்டுரைகளை எழுதினார்.

ஓவியம்

மயன் தனது வலது கையில் ஏற்பட்ட பாதிப்பால் ஓவிய ஆசிரியர் பணியிலிருந்து விலகினார். சுதந்திர ஓவியராகச் செயல்பட்டார். வரைகலை நிபுணராகப் பணிபுரிந்தார். ஏரிஸ், அட்வேவ் உள்ளிட்ட பல தனியார் விளம்பர நிறுவனங்களுக்கு ஓவிய வடிவமைப்பாளராகப் பணிபுரிந்தார். பல நூற்றுக்கணக்கான விளம்பரங்களை வடிவமைத்தார்.

இசை

மயன் இசைப் பாடல்கள் இயற்றினார். மயனின் பாடல்களை சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்டவர்கள் பாடினர். டி.ஆர். பாப்பா, குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோர் இசையமைக்க மயனின் பாடல்கள் இசைத் தட்டுக்களாக வெளிவந்தன.

சமூகப் பணி

மயன் சிறு வயது முதலே தேசப்பற்று கொண்டவராக இருந்தார். வினோபாவின் பூமிதான இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். அது குறித்து விழிப்புணர்வு ஊட்டும் நாடகங்களில் நடித்தார். வினோபாவுடன் திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் பாத யாத்திரையில் கலந்துகொண்டார்.

பதிப்பு

பதிப்பகத் தொழில் மீது நாட்டம் கொண்ட மயன், ஜெயா பதிப்பகம் என்ற பதிப்பகத்தை நிறுவினார். பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். பொள்ளாச்சி மகாலிங்கம் மூலம் வெளியான திருவருட்பா மூன்று தொகுதிகளை ஜெயா பதிப்பகம் பதிப்பித்தது. சட்ட நிபுணர் பத்மநாபனின் நூல்களை ஜெயா பதிப்பகம் வெளியிட்டது.

அச்சகம்

மயன், ஸ்ரீ ஆப்செட் என்ற அச்சகத்தை நிறுவினார். அதன் மூலம் பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். ஸ்ரீ ஆப்செட் நிறுவனத்தில் தான் பகீரதன் ஆசிரியராக இருந்த ‘சத்திய கங்கை’ இதழ் அச்சிடப்பட்டது.

விருதுகள்

  • பாரதி கலைக்கழகம் வழங்கிய கவிமாமணி பட்டம்
  • இந்தூர் ஆன்மிக சமிதி வழங்கிய விருது
  • திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய விருது
  • சென்னை வானவில் பண்பாட்டு மையம் வழங்கிய விருது
  • நுங்கம்பாக்கம் இளைஞர் சங்கம் வழங்கிய விருது

மதிப்பீடு

மயன் சந்த நயங்களுடன் கூடிய மரபுக்கவிதைகளை எழுதினார். ஆன்மிக இதழ்களில் கவிதைகளை, கட்டுரைகளை எழுதினார். ஆயிரக்கணக்கான கவிதைகளை எழுதியிருக்கும் மயன், தமிழின் மூத்த மரபுக் கவிஞர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

நூல்கள்

  • மந்திர கீதம்
  • ஸ்ரீ ராமாயணப் பெருந்தேடல்

மற்றும் பல

உசாத்துணை

  • தொண்ணூற்றாறு வயதிலும் தொடரும் சாதனை: பா. வீராகவன் கட்டுரை: அமுதசுரபி இதழ், மார்ச் 2024.

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.