மணக்கால் ரங்கராஜன்

From Tamil Wiki
Revision as of 21:28, 18 February 2024 by ASN (talk | contribs) (Para Added and Edited: Image Added;)
மணக்கால் எஸ். ரங்கராஜன்
மணக்கால் ரங்கராஜன் (படம் நன்றி: தி இந்து இதழ்)

மணக்கால் ரங்கராஜன் (மணக்கால் எஸ். ரங்கராஜன்) (செப்டம்பர் 13, 1922 - பிப்ரவரி 26, 2019) கர்நாடக இசைக் கலைஞர். ராகங்கள் மற்றும் பல்லவிகளில் நிபுணத்துவம் பெற்ற இசையறிஞர். லண்டன் உள்பட பல வெளிநாடுகளுக்குச் சென்று இசைக் கச்சேரிகளை நிகழ்த்தினார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார். மணக்கால் ரங்கராஜனின் வாழ்க்கையை எழுத்தாளர் அம்ஷன்குமார் ஆவணப்படமாகத் தயாரித்தார்.

பிறப்பு, கல்வி

மணக்கால் ரங்கராஜன், திருச்சி லால்குடியை அடுத்துள்ள மணக்காலில், செப்டம்பர் 13, 1922 அன்று, இசைக் கலைஞர் சந்தான கிருஷ்ண பாகவதர் - சீதாலக்ஷ்மி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். மணக்காலில் பள்ளி படிப்பை நிறைவு செய்தார். உயர்கல்வியை லால்குடி அரசுப் பள்ளியில் படித்தார்.

தனி வாழ்க்கை

மணக்கால் ரங்கராஜன் மணமானவர். எழுத்தாளர் துமிலனின் மகளான மனைவி பத்மா ரங்கராஜன், வாய்ப்பாட்டுக் கலைஞர். மகள் பானுமதி ஹரிஹரன் வயலின் கலைஞர். மகன் மணக்கால் ஸ்ரீராம் மிருதங்க வித்வான். மருமகள், விஜி ஸ்ரீராம் தம்புராக் கலைஞர்.

மணக்கால் ரங்கராஜனுக்கு விருது (படம் நன்றி: தி இந்து இதழ்)
மணக்கால் ரங்கராஜனுக்கு விருது (படம் நன்றி: தி இந்து இதழ்)

இசை வாழ்க்கை

தொடக்கம்

மணக்கால் ரங்கராஜன் தன் தந்தையிடம் இசை கற்றார். முதல் இசைக் கச்சேரி மணக்கால் ரங்கராஜனின் 15ம் வயதில் நிகழ்ந்தது. தொடர்ந்து மணக்காலைச் சுற்றி உள்ள பல கோவில் விழாக்களில் ரங்கராஜனின் இசை நிகழ்ச்சிகள் நடந்தன.

சென்னை வாழ்க்கை

வாழ்க்கைச் சூழல்களால் மணக்கால் ரங்கராஜனின் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. சென்னைக் கச்சேரி ஒன்றில் மணக்கால் ரங்கராஜன் பாடிய, ‘நின்னுவினா’ அவருக்கு மிகப் பெரிய புகழைப் பெற்றுத் தந்தது. அதன் மூலம் இசை ரசிகர்கள் பலரது கவனத்தைச் சென்றடைந்தார். தொடர்ந்து கச்சேரி வாய்ப்புகள் பெருகின.

கச்சேரிகள்

மணக்கால் ரங்கராஜன் தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, பெங்களூர் எனப் பல இடங்களுக்கும் சென்று கச்சேரிகள் செய்தார். மைசூர் டி சௌடையா, கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்பிரமணிய பிள்ளை போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

மணக்கால் ரங்கராஜன் அரிய வகை ராகங்களைப் பாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அரிதான பல்லவிகளை அநாயசமாகப் பாடும் திறன் மிக்கவர். சென்னை வானொலி நிலையம் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து பாடிவந்தார். தான் செய்த வானொலி இசைக் கச்சேரிகளில் ஒரு பாடலைக் கூடத் திரும்பப் பாடியதில்லை என்ற சிறப்பைப் பெற்றார். தொடர்ந்து இடைவிடாமல் ஆறு மணி நேரம் கச்சேரிகள் செய்யும் அளவுக்கு ஆற்றல் மிக்கவராக இருந்தார். விமர்சகர் சுப்புடு, ரங்கராஜனின் இசைத் திறமையைக் கண்டு வியந்து பாராட்டியதுடன், கச்சேரி ஒன்றில் ஹார்மோனியம் வாசித்துச் சிறப்புச் செய்தார்.

வெளிநாடுகளில் கச்சேரிகள்

ரங்கராஜனின் திறமையை அறிந்த லண்டன் வாழ் இலக்கியவாதி இ. பத்மநாப ஐயர், லண்டனில் இவர் கச்சேரி நிகழ்த்த ஏற்பாடு செய்தார். அப்போது மணக்கால் ரங்கராஜனுக்கு வயது 84. க்ளீவ்லாண்ட் வி.வி. சுந்தரம் அவர்களது அழைப்பின் பேரில் க்ளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை விழாவில் கலந்துகொண்டு பாடினார்.

விருதுகள்

  • செம்பை வைத்தியநாத பாகவதர் அளித்த ‘சங்கீத சிம்மம்’ பட்டம்
  • மியூசிக் அகாதமி வழங்கிய மூத்த இசைக் கலைஞர் விருது
  • மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அறக்கட்டளை விருது
  • நாதக்கனல் விருது
  • சங்கீத கலாசிகாமணிvஇருது
  • ஞானகலா ரத்னா
  • காயக சாம்ராட்
  • ஞான கலா சாகரா
  • தியாக பிரம்ம நாத விபூஷன்
  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • யுகாதி புரஸ்கார் விருது

மணக்கால் ரங்கராஜனின் கச்சேரிகள்

ஆவணம்

மணக்கால் ரங்கராஜனின் இசை வாழ்க்கையை அம்ஷன் குமார் ஆவணப்படமாகத் தயாரித்து வெளியிட்டார் [1].

மறைவு

மணக்கால் ரங்கராஜன், பிப்ரவரி 26, 2019 அன்று சென்னையில் காலமானார்.

மதிப்பீடு

மணக்கால் ரங்கராஜன், தனது தனித்துவமிக்க குரலால் இசை ரசிகர்களின் மனதை வசீகரித்தார். சக கலைஞர்களால் விரும்பப்பட்டார். பிருகாக்களில் நிபுணராகவும், விளம்பம் மற்றும் த்ருத கலசங்களில் வல்லவராகவும் இருந்தார். ராகங்கள் மற்றும் பல்லவிகளில் நிகரற்ற நிபுணத்துவம் பெற்றவர். மணக்கால் ரங்கராஜன் கர்நாடக சங்கீத உலகின் குறிப்பித்தகுந்த முன்னோடி இசைக் கலைஞர்களுள் ஒருவராக மதிப்பிடத்தக்கவர்.

உசாத்துணை