under review

சக்தி விகடன்

From Tamil Wiki
Revision as of 11:49, 11 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (category and template text moved to bottom of text)
சக்தி விகடன் இதழ்

சக்தி விகடன் (2004), ஆன்மிக இருமுறை மாத இதழ். ஆனந்த விகடன் குழுமத்தைச் சேர்ந்த இவ்விதழை எஸ். பாலசுப்பிரமணியன் தொடங்கினார்.


வெளியீடு

ஆன்மிகத்தையும் பக்தியையும் வாசகர்கள் தெளிவாக அறிய வேண்டும் என்ற நோக்கத்தில், ஏப்ரல், 2004-ல் சக்தி விகடன் இதழ் தொடங்கப்பட்டது. ஆனந்த விகடன் குழுமத்தைச் சேர்ந்த எஸ். பாலசுப்பிரமணியன் இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளராக இருந்தார். தொடக்க காலத்தில் சுகி சிவம் இதழின் கௌரவ ஆசிரியராகச் செயல்பட்டார். பி. சுவாமிநாதன், செங்கோட்டை ஸ்ரீராம், ரவிபிரகாஷ் உள்ளிட்டோர் சக்தி விகடன் இதழின் பொறுப்பாசிரியர்களாகச் செயல்பட்டனர். தொடக்க காலத்தில் 64 பக்கங்களுடன் வெளிவந்த சக்தி விகடன் இதழின் விலை பத்து ரூபாய். கால மாற்றத்திற்கேற்ப பக்கங்கள் மற்றும் விலை அதிகரித்தன.

சக்தி விகடன் இதழ் முகப்பு அட்டை

உள்ளடக்கம்

ஆன்மிகத்தை, அதன் புனிதமும், முழுமையும் குறைவுபடாமல் வாசகர்களுக்குத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் சக்தி விகடன் இதழ் செயல்பட்டது. ’ஆன்மிகம் மணக்கும் ஆனந்த ஆலயம்’ என்ற வாசகம், சக்தி விகடன் இதழின் முகப்பு அட்டையில் இடம்பெற்றது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தோறும் இவ்விதழ் வெளியானது. பின் ஒன்றுவிட்ட செவ்வாய்க்கிழமை தோறும் வெளிவந்தது.

சக்தி விகடனின் முதல் இதழ்,

“மாதவம் செய்த மங்கையர் சக்தி
அழிவே இல்லாத அறத்தின் சக்தி
அருள்மழை பொழியும் ஆலய சக்தி
அலை புரண்டோடும் ஆன்மீக சக்தி
பக்தர்கள் சக்தி சித்தர்கள் சக்தி
இந்தியா கொடுத்த இறையருள் சக்தி
இந்து தர்மத்தின் இணையற்ற சக்தி
சங்கமம் ஆகும் சக்தி வெள்ளமே!”

-என்னும், சக்தி விகடனின் கௌரவ ஆசிரியர் சுகிசிவம் வாழ்த்துக் கவிதையோடு வெளியானது.

தொடக்க காலத்தில் கேரளாவின் புகழ்பெற்ற ஜோதிடர் உன்னிகிருஷ்ணப் பணிக்கரின் தயாரிப்பில் ‘சக்தி ஜோதிடம்’ என்ற இணைப்பிதழ் வெளிவந்தது. பின்னர் மகான்களின் வரலாறுகள் இணைப்பிதழில் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து அந்தந்த மாதத்தின் சிறப்புகள் தொகுப்பில் இடம்பெற்றன. நவராத்திரி, தீபாவளி, பொங்கல் போன்ற நிகழ்வுகளின்போதும் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, வருடப் பிறப்பு போன்ற தருணங்களிலும் சிறப்பிதழ்கள், இணைப்பிதழ்கள் வெளியாகின.

ஆன்மிக, புராணக் கதைகள், துதிகள், ஆலயம், மகான்கள், சித்தர்கள் பற்றிய கட்டுரைகள், வரலாறுகள், படக்கதைகள், சமயம் சார்ந்த கேள்வி-பதில்கள், நகைச்சுவைத் துணுக்குகள், ஆன்மிக அருளுரை, தன்னம்பிக்கைக் கட்டுரைகள் போன்றவை சக்தி விகடன் இதழில் இடம்பெற்றன.

ஜோதிடப் பலன்கள், வாஸ்து, எண் கணிதம், கைரேகை சாஸ்திரம் குறித்த விளக்கங்கள் வெளியாகின. வாசகர்களை ஒருங்கிணைக்கும் புத்தகத் தேடல் விளக்கப் பகுதி, தெய்வ சிந்தனைகள் பகுதி இடம் பெற்றன. வாசகர்களுக்காக பல்வேறு ஆலயங்களில் திருவிளக்குப் பூஜைகள், பரிகாரங்கள், பிராத்தனைகள், ஹோமங்கள், வழிபாடுகள் செய்யப்பட்டன. நிகழ்வுக்குப் பதிவு செய்துகொண்ட வாசகர்களுக்கு பிரசாதங்களை சக்தி விகடன் இதழ் அனுப்பி வைத்தது.

மாத ராசி பலன்கள், குருப்பெயர்ச்சி, ராகு-கேதுப் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சிப் பலன்களை மிக விரிவாக சக்தி விகடன் இதழ் வெளியிட்டது. ஆலயங்களில் அதற்கான பரிகார நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து நடத்தியது. 2012 முதல், ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில மாதப் பிறப்பையொட்டி தினசரி நாட்காட்டியை சக்தி விகடன் இதழ் வாசகர்களுக்கு அளித்தது. சித்திரை தமிழ் மாதப் பிறப்பையொட்டி பஞ்சாங்கத்தையும் வருடா வருடம் தந்தது.

தொடர்கள்

சக்தி விகடன் இதழ் புகழ்பெற்ற பல எழுத்தாளர்களின் தொடர்களை வெளியிட்டது. சுகி சிவம், பாலகுமாரன், இந்திரா சௌந்தர்ராஜன், பி. சுவாமிநாதன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களின் ஆன்மிகத் தொடர்கள் சக்தி விகடன் இதழில் வெளியாகின. ரமண மகரிஷி, மகா பெரியவா, சதுரகிரி யாத்திரை, ரங்க ராஜ்ஜியம் போன்ற தொடர்கள் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றன.

மதிப்பீடு

சக்தி விகடன் இதழ், பாழ்பட்டுக் கிடக்கும் பண்டைக்கால ஆலயங்கள் குறித்த கட்டுரைகளை வெளியிட்டு அவை பொலிவு பெற உதவியது. சக்தி விகடனில் வெளியான ஆன்மிகம் சார்ந்த தன்னம்பிக்கைக் கட்டுரைகள் வாசக வரவேற்பைப் பெற்றன. ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம், ஞானபூமி வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஓர் ஆன்மிக இதழாக சக்தி விகடன் இதழ் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page