ந.வெங்கடேசன்

From Tamil Wiki

வில்லியனூர்.ந.வெங்கடேசன் புதுவையைச் சேர்ந்த கல்வெட்டு அறிஞர் மற்றும வரலாற்றாய்வாளர். புதுவை அரசின் தொல்காப்பியர் விருது பெற்றவர்.

பிறப்பு,கல்வி

ந.வெங்கடேசன் புதுவை மாநிலம் வில்லியனூரில் அக்டோபர் 30.1940 இல் . சீ. நடராசன், சுப்புலட்சுமி ஆகியோருக்குப் பிறந்தவர். பள்ளிக் கல்வியைப் புதுவை வேதபுரீசுவரர்  வித்தியாநிலையத்தில் பெற்றார். தாமோதரன் என்ற தமிழாசிரியரின் வழிகாட்டலின் பேரில் 1958ல் புலவர் புகுமுக வகுப்பிற்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

கல்விப்பணி

சென்னை மாகாண முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி யின் தலைமையில் இயங்கிய வள்ளலார் குருகுலத்தில் தமிழாசிரியராக ஓராண்டு பணிபுரிந்தார். பிறகு  சென்னையில் அரசுப் பள்ளிகளில்  35 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1998 ல் வளவனூர் மேல்நிலைப்பள்ளியில் பணி நிறைவு செய்தார்.

கல்வெட்டாராய்ச்சிப்பணி

கல்வெட்டு ஆய்வறிஞர் வில்லியனூர் வெங்கடேசன் அவர்களது நூல்கள் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் உள்ள கல்வெட்டுகள் பற்றிய அரிய பெட்டகங்களாக விளங்குகின்றன. காலஞ்சென்ற பாகூர் குப்புசாமி அவர்களுடன் இணைந்து பல ஆய்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். புதுச்சேரியில், பாகூர், திருவாண்டார் கோயில், மதகடிப்பட்டு ஆகிய ஊர்களில் உள்ள பல்லவர்-சோழர்கால கல்வெட்டுகள், கோயில் மற்றும் சிலைகளின் அமைப்பு முறைகள், அதன் தனிச்சிறப்புகள் பற்றிய விளக்க உரை நுட்பமான பல தகவல்களை உள்ளடக்கியதாக இருந்தது.


திருமுடி சேதுராமன் செட்டியார் அவர்கள் வில்லியனூர் ந. வேங்கடேசனைப் புதுவையில் உள்ள பிரெஞ்சு நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று டாக்டர் பிலியோசா, டாக்டர் பிரான்சுவா குரோ, போன்ற பேராசிரியர்களிடம் அறிமுகப்படுத்தி,  பிரெஞ்சுப் பண்பாட்டுக் கழகத்துடன் தொடர்புகொள்ளச் செய்தார். திருமுடியாரின் நினைவாகத் தாம் நடத்தும் பதிப்பகத்திற்குத் திருமுடிப் பதிப்பகம் என்று பெயர்சூட்டித் தம் நன்றியறிதலைப் புலப்படுத்தி வருபவர்.

வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்களுக்கு 1958 முதல் விடுமுறை நாள்களில் பிரெஞ்சு நிறுவன நூலகத்துடன் தொடர்பு உண்டு. அது இன்றுவரை நீடிக்கின்றது.

வில்லியனூர் ந. வேங்கடேசன் அவர்கள் இதுவரை 26 நூல்களைத் தமிழில் வெளியிட்டுள்ளார். இதில் பெரும்பாலும் கல்வெட்டுகள், தமிழரின் தொன்மை, வரலாற்றுச் சிறப்பு விளக்கும் நூல்களாக அமைந்துள்ளன.