க. குமாரசுவாமி முதலியார்

From Tamil Wiki

க. குமாரசுவாமி முதலியார் ( 11.ஆகஸ்ட்.1791) ஈழநாட்டின் தமிழறிஞர். மரபுக்கவிஞர். சைவ சமயத்திற்கும் தமிழர் கல்விக்கும் பணியாற்றியவர்

பிறப்பு, கல்வி

க.குமாரசுவாமி முதலியார் 11.ஆகஸ்ட் 1791 ல் கதிர்காமப்பூபதி வள்ளியம்மை இணையருக்கு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிறந்தார்

குமாரசாமி தனது தாய்மாமன்களான குமாரசாமிப் புலவர் மற்றும் முத்துக்குமார முதலியார் ஆகியோரிடம் தமிழ் இலக்கணம் இலக்கியம் சங்கீதம் ஆகியவற்றைக் கற்றார்

தனிவாழ்க்கை

உடுப்பிட்டி கோவில்பற்றின் மணியகாரராக விளங்கிய வேலாயுதம் புண்ணியமூர்த்தியின் மகள் சிவகாமியை மணந்தார். இவருடைய மகன் சபாபதி முதலியார் ( மறைவு1884) யாழ்ப்பாணம் பிஸ்கால் கந்தோரில் முதலியாராக விளங்கியவர். இன்னொரு மகன் கு. கதிரவேற்பிள்ளை (வைமன் கதிரவேற்பிள்ளை). மீனாட்சிப்பிள்ளை என்னும் மகளும் உண்டு.

கல்விப்பணி

குமாரசுவாமி முதலியார் யாழ்ப்பாணப்பகுதியில் கல்விப்பணி செய்து வந்த வட்டுக்கோட்டை குருமடம் அமைப்பை நிறுவிய இலங்கை அமெரிக்க மிஷன் அமைப்புடன் அணுக்கமானவராக இருந்தார். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் அமைந்திருந்த “நிருவத்தம்பை” என்னும் தென்னஞ்சோலையுடன் கூடிய நிலத்தை 1846 ஆம் ஆண்டு அவர்களுக்கு கொடையாக வழங்கினார். அங்கே கட்டப்பட்ட கட்டிடம் பாதிரியார்பங்களா என அழைக்கப்பட்டு வந்தது. 1961 ஏப்ரல் மாதம் 18 சிறிமாவே பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் அதை ஸ்ரீலங்கா ராணுவம் தன் முகமாக எடுத்துக்கொண்டது.