இராமலிங்க வள்ளலார்

From Tamil Wiki
Revision as of 02:19, 23 January 2022 by Subhasrees (talk | contribs) (ராமலிங்க வள்ளலார் முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

In Progress

ராமலிங்க வள்ளலார் (ராமலிங்க அடிகள் / ராமலிங்க சுவாமிகள்) (அக்டோபர் 5, 1823 – ஜனவரி 30, 1874) ஒரு ஆன்மீகவாதி. சாதி மத வேறுபாடுகளை மறுத்து சமரச சன்மார்க்க நெறியை முன்வைத்தவர். சடங்குகளை மறுத்து அருட்பெருஞ்சோதி வழிபாட்டைத் தொடங்கி வைத்தவர். வடலூரில் சத்தியஞான சபையையும் சத்திய தர்ம சாலையையும் நிறுவியவர். திருவருட் பிரகாச வள்ளலார் என்றும், வடலூர் வள்ளலார் என்றும் குறிப்பிடப்படுபவர். இவர் எழுதிய பாடல்களில் திருவருட்பா முதன்மையான பக்தி நூல்.

பிறப்பு, கல்வி

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 1823ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி பிறந்தார். தந்தை ராமையா பிள்ளை கிராமக் கணக்கராக இருந்தவர், தாய் சின்னம்மையார். இவருக்கு நான்கு உடன்பிறந்தவர்கள். ராமலிங்கர் பிறந்து ஆறு மாதங்களில் தந்தை இறந்து விட்டார். தாயார் குழந்தைகளோடு அவர் பிறந்த ஊராகிய பொன்னேரி சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழுகிணறு பகுதியில் குடியேறினார்.

ராமலிங்கரின் அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார். இவரை நன்கு படிக்க வைக்க வேண்டுமென விரும்பினார். அக்கால முறைப்படி தமிழ்க் கல்வி கற்பிக்க திவாகரம், நிகண்டு, சதகம், அந்தாதி போன்றவற்றை தம்பிக்குக் கற்பித்தார். ராமலிங்கருக்கு ஆன்மீக நாட்டம் இருந்த அளவுக்குக் கல்வியில் நாட்டம் இருக்கவில்லை. சபாபதி தன் குருநாதரான காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார். இராமலிங்கர் அங்கும் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவதிலேயே ஈடுபாடு கொண்டிருந்தார். சென்னை நகரில் கந்தசாமி கோவில் என்றும் முத்துக்குமாரசாமி கோவில் என்றும் சொல்லப்படும் ஆலயமே கந்தகோட்டம்.

அவரது ஆசிரியரும் ராமலிங்கர் பாடிய பாடல்களைக் கேட்டு, இயல்பிலேயே புலமை கொண்டிருந்த ராமலிங்கருக்கு கல்வி தேவையில்லை என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு இராமலிங்க அடிகளார் தன் ஆன்மீகத் தேடலில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கி விட்டார். தான் கல்வியின் சிறப்பால் பாடத் தொடங்கவில்லை என்றும் கடவுளின் அருளால்தான் பாட முடிகிறதென்றும் அவரே தன் பாடல்களில் குறிப்பிடுகிறார்.

ஆன்மீக வாழ்க்கை

கந்தகோட்டதில் பல மணிநேரம் தியானத்திலும் வழிபாட்டிலும் ஈடுபடுவார்.

ராமலிங்கர் முதலில் இயற்றிய பாடல்களான தெய்வமணிமாலை இங்குதான் பாடப்பட்டது. எளிய சொற்கள் கொண்ட 31 பாடல்களைக் கொண்ட இத்தொகுப்பில் பாடல்தோறும் ஈற்றடி

“கந்த கோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே” என்று அமைந்திருக்கும்.

இவற்றுள் “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவு வேண்டும்” எனத் தொடங்கும் பாடல் மிகவும் புகழ் பெற்றது.

இலக்கிய வாழ்க்கை

.இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டன. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறைப் பதிப்பு வெளியிட்டுள்ளார்.

படைப்புகள்

வள்ளலார் எழுதிய நூல்களில் சில:

  • திருவருட்பா
  • மனுமுறைகண்ட வாசகம்
  • ஜீவகாருண்ய ஒழுக்கம்
  • சின்மய தீபிகை
  • ஒழிவிலொடுக்கம்
  • தொண்டைமண்டல சதகம்

சமூகப் பணி

சத்திய தரும சாலை

பசித்த மக்களுக்கு தினம்தோறும் உணவிட வேண்டும் என்று இராமலிங்க அடிகள் 23–மே–1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று சத்திய தரும சாலையை தொடங்கினார். இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. இன்றும் அங்கு வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவிடப் படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் இதேபோல பசியாற்றுகிறார்கள்.

சத்திய ஞான சபை

எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு ‘சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்’ என்று பெயரிட்டார். சாதிய பாகுபாடுகளை மறுத்தார். இந்து மதத்தில் இருந்த வந்த ஆசாரங்களை ஒப்புக்கொள்ளாமல், எந்த வழிபாட்டு சடங்குகளையும் கடைப்பிடிக்காமல் இறைவனை ஒளி வடிவமாக வணங்கும் ‘அருட்பெரும்சோதி’ வழிபாட்டை முன்வைத்தார். அதனால் பல உயர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார், இருப்பினும் தொடர்ந்து தன் வழியை கடைப்பிடித்தார்.

தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், அன்றிருந்த நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். உயரிய நோக்கங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டதால் மிகுந்த எதிர்ப்புகளை சந்தித்தார்.

”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய வள்ளலார் ஜீவகாருண்யம் என்ற கொள்கையை முன்வைத்து எவ்வுயிரையும் கொல்லுதல் கூடாது என்று சொன்னவர்.

மறைவு

வாழ்க்கை வரலாறு

ராஜ் கௌதமன் அவர்களின் ”கண்மூடிவழக்கம் எலாம் மண்மூடிப்போக”  [ முதல் பதிப்பு .தமிழினி . 2001] எனும் விமர்சன நூல் சமூக நோக்கில் வள்ளலாரை அவரது படைப்புகளையும் களப்பணி சூழலையும் விமர்சனபூர்வமாக அணுகிய ஆய்வு நூல்.

வள்லலாரின் அருட்பா மருட்பா வழக்கு சம்பந்தமாக மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் இருந்து  மூல ஆவணங்களை எடுத்து ப.சரவணன் மிக முக்கியமான ஆய்வு செய்துள்ளார்.

விவாதங்கள்

வள்ளலார் எழுதிய திருவருட்பாவுக்கு எதிராக பல கண்டன நூல்கள் வெளிவந்தன. வள்ளலார் மேற்கொண்ட சமய சீர்திருத்தத்தால் அவரை அன்றைய மரபார்ந்த சைவ வாதிகள் ஏற்கவில்லை. இதன் தொடர்ச்சியாக வள்ளலார் எழுதியவற்றை மறுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். வள்ளலார் முன்வைத்த மாற்றுப் பண்பாட்டையும் மறுத்தனர்.

1868 இல் சண்முகம் பிள்ளை என்பவரால் திருவருட்பா தூஷண பரிகாரம் என்னும் நூலின் வழி இவ்விவாதம் தொடங்கியது. 1869 இல் போலியருட்பா மறுப்பு என்ற நூல் எழுதப்பட்டது; இது அருட்பா அல்ல, போலி அருட்பா என்று பல காரணங்களைக் கூறி இந்நூல் மறுத்தது. இதற்கு எதிராக 12 கண்டன நூல்கள் வெளிவந்தன.

வடலூர் ராமலிங்க வள்ளலாரின் பாடல்களை அருட்பா என்று சொல்லலாமா என்ற விவாதம் கடுமையாக எழுந்தது. யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் இவ்விவாதத்தை எழுப்பினார். மிகக் கடுமையான சொற்களை பயன்படுத்தினார். அதற்கு வள்ளலாரின் சீடர் தொழுவூர் வேலாயுத முதலியார் முதலியோர் வசை பாதி விவாதம் பாதியாக பதிலுரைத்தார்கள். தொடர்ந்து மான நட்ட வழக்கும் நடந்தது.

பின்பு 1904ல் யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை அவ்விவாதத்தை முன்னெடுத்து அதி பயங்கரமான வசைக் கவிதைகளை எழுதினார். இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு என்ற நூலை எழுதி வெளியிட்டார். அதற்கு வடலூரைச் சேர்ந்த பானு கவி 1905 இல் இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பண கண்டன நியாய வச்சிர குடாரம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். கதிரை வேற் பிள்ளைக்கு உத்தரக் கிரியை நடத்தும் துண்டுப் பிரசுரங்கள் பல அடிக்கப் பட்டன.

சைவ சமயத்தில் சீர்திருத்தம் செய்த வள்ளலாரை பழைமை வாதிகள் ஏற்றுக் கொள்ள மறுத்த நிகழ்வுகளாகவே இக்கண்டன நூல் போக்குகளைப் பார்க்கலாம்

தமிழினி வெளியீடாக வந்த ‘அருட்பா மருட்பா விவாதம்’ என்ற முக்கியமான நூலை ஆய்வாளர் ப.சரவணன் எழுதியுள்ளார். அதில் அவர் ஆறுமுகநாவலருக்கும் வடலூர் வள்ளலாருக்கும் இடையே நடந்த அருட்பா மருட்பா விவகாரத்தை விரிவான ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறார்.