மண்டயம் மரபு

From Tamil Wiki
Revision as of 16:56, 17 November 2023 by Jeyamohan (talk | contribs)

மண்டயம் மரபு (பொயு 11 முதல்) ராமானுஜ மரபைச் சேர்ந்த தென்கலை வைணவர்களில் ஒரு பெருங்குடும்பம். மைசூர் அருகே மாண்ட்யா என்னும் ஊரைச்சேர்ந்தவர்கள். தமிழ்வரலாற்றில் இம்மரபைச் சேர்ந்த பலர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளனர்

வரலாறு

மண்டயம் பெருங்குடும்ப வரலாறு மைசூரை அடுத்துள்ள கிரங்கூர் என்னும் அக்ரஹாரத்தில் தொடங்குகிறது. பொயு 1053 ல் அங்கே கேசவாச்சாரியார் என்ற அறிஞரின் மகனாகப் பிறந்த திருஅனந்தாழ்வார் தமிழகம் வந்து ஶ்ரீரங்கத்தில் இருந்த ராமானுஜர் கற்பித்த விசிஷ்டாத்வைதம் சார்ந்த கருத்துக்களை அறிந்து அவரது மாணவரானார். ராமானுஜர் அன்று கைவிடப்பட்ட நிலையில் காட்டுக்குள் கிடந்த வேங்கடத்துக்கு( திருப்பதி) செல்ல விரும்பியபோது அனந்தாழ்வார் அவரை காடுவழியாக அழைத்துச்சென்றதாகவும் அவரை ஆசிரியர் 'ஆண்பிள்ளை' என்று பாராட்டியதாகவும் தொன்மம் உள்ளது.

ராமானுஜர் திருப்பதியை அன்றைய அரசரான விட்டலராயர் என்பவரின் உதவியுடன் மீட்டு திருப்பணி செய்தார். விட்டலராயர் பாலமண்டயம் அல்லது இளைய மாண்டயம் என்னும் ஊரை அனந்தாழ்வாருக்கும் கொடையாக அளித்தார். ராமானுஜரின் மாணவர்களான 30 வைணவர்கள் அங்கே குடியேறினர். அவர்களின் வழித்தோன்றல்களே மண்டயம் மரபு என அழைக்கப்படுகின்றனர்.

ராமானுனர் யாதவபுரி எனப்படும் மேல்கோட்டையில் யதிராஜ மடம் என இன்று அழைக்கப்படும் மடத்தை அமைத்தார். ஹொய்ச்சாள அரசர் விஷ்ணுவர்த்தனர் அந்த மடத்துக்கு மைசூரில் ஶ்ரீரங்கப்பட்டினம் அருகே அஷ்டகிராமம் என அழைக்கப்படும் எட்டு கிராமங்களை அளித்தார். அவை மண்டயம் மரபில் வந்த அனந்தாச்சாரியார் என்பவருக்கு 1117ல் நிர்வாகப்பொறுப்பாக அளிக்கப்பட்டன. மண்டயம் மரபினரில் ஒரு சாரார் ஶ்ரீரங்கப்பட்டினம் அருகே குடியேறினர்.

பொயு பதிமூன்றாம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மேல்கோட்டை மடத்தை கொள்ளையிட அது கைவிடப்பட்ட நிலையை அடைந்தது. விஜயநகரப்பேரரசு உருவானபோது 1380 ல் விஜயநகரப்பேரரசரின் தளபதியான ஶ்ரீரங்கராயர் 12 கிராமங்களை அனந்தாச்சாரியரின் வழித்தோன்றலாகிய திருமலை ஐயங்காருக்கு வழங்கினார். பொயு 15 ஆம் நூற்றாண்டில் இம்மரபில் வந்த திருமலாச்சாரியார் என்பவர் திம்மண்ண தண்டநாயகன் என்ற பேரில் நேரடியாக விஜயநகரப்பேரரசின் பிரதிநிதியாக நாகமண்டலா என்னும் ஊரில் இருந்து ஆட்சி செய்தார். மேல்கோட்டை மடத்தையும் நிர்வகித்தார்

மண்டயம் ஆளுமைகள்

உசாத்துணை