first review completed

ம.வே. மகாலிங்கசிவம்

From Tamil Wiki
ம.வே. மகாலிங்கசிவம்
ம.வே மகாலிங்க சிவம்

ம.வே. மகாலிங்கசிவம் (1891 - மார்ச் 13, 1941) ஈழத்து தமிழ்ப்புலவர், பேச்சாளர், தமிழாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

ம.வே. மகாலிங்கசிவம் இலங்கை யாழ்ப்பாணம் மட்டுவில்லில் தமிழறிஞர் ம.க. வேற்பிள்ளை, மகேசுவரி இணையருக்கு 1891-ல் பிறந்தார். தந்தையிடம் இலக்கண இலக்கியங்கள் கற்றார். வே. மாணிக்கவாசகர், ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை, கந்தசாமி, நடராசா ஆகியோர் இவரின் உடன்பிறந்தவர்கள். புலோலியில் தாயாரின் உறவினர் வீட்டில் தங்கி வேலாயுதபிள்ளை பாடசாலையில் ஆத்திசூடி முதல் பழமலை அந்தாதி வரை கல்வி கற்றார். சாவகச்சேரி ஆங்கிலப்பாடசாலையிலும் கல்வி கற்றார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, உருது, ஹிந்துஸ்தானி ஆகிய மொழிகளைக் கற்றார்.

தனி வாழ்க்கை

ம.வே. மகாலிங்கசிவத்திற்கு நான்கு பிள்ளைகள். மகள் பிரபாவதி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். சிறு வயதிலேயே இறந்து விட்டார். நான்காவதாகப் பிறந்த ம. பார்வதிநாத சிவம் புலவர், பத்திரிகையாளர்.

ஆசிரியப்பணி

மட்டுவிலில் தந்தை ஆரம்பித்த நாவலர் காவியப் பாடசாலையில் இலக்கியம், இலக்கணம் கற்பித்தார். மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், மருதன்மடம் இராமநாதன் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராக 1923 முதல் இறக்கும்வரை பணியாற்றினார்.

மாணவர்கள்

இலக்கிய வாழ்க்கை

ம.வே. மகாலிங்கசிவம் பன்னிரண்டு வயதில் 'பழனிப் பதிகம்' என்னும் நூலை இயற்றினர். ’குருகவி' என்னும் பட்டப்பெயர் பெற்றார். சொற்பொழிவுகள் செய்தார். 'காமாட்சி அன்னை', 'புன்னெறி விளக்கு' ஆகியன இவர் பாடிய தனிப்பாடல்களில் சில.

1939-ல் ஈழகேசரி ஆண்டு மலரில் ’அன்னை தயை’ என்ற சிறுகதையை எழுதினார். 'ஈழ மண்டல சதகம்', 'இராமநாத மான்மியம்', 'கணேசையர் மலர்', 'ஈழகேசரி மலர்' ஆகியவற்றில் மகாலிங்கசிவம் இயற்றிய சிறப்புப்பாயிரங்களும், தனிப்பாடல்களும் உள்ளன. தனது தந்தை எழுதிய ஈழமண்டலசதகத்திற்கு சிறப்புக்கவி பாடினார். ஈழகேசரி பத்திரிக்கை நிறுவனர் நா. பொன்னையா வேண்டுதலின் பேரில் சி. கணேசய்யரின் தொல்காப்பியத்திற்கு உரை எழுதினார். இதன் சொல்லதிகார உரைக்கு சிறப்புப்பாயிரம் பாடினார்.

ம.வே. மகாலிங்க சிவம் சுவாமி விபுலானந்தருக்கு அணுக்கமானவராக இருந்தார்.

பட்டப் பெயர்கள்

  • குருகவி
  • கற்பனைச் சுருக்கம்

மறைவு

ம.வே மகாலிங்கசிவம் மார்ச் 13, 1941 அன்று காலமானார்.

நூல் பட்டியல்

  • பழனிப் பதிகம்
  • காமாட்சி அன்னை
  • புன்னெறி விளக்கு
இவரைப்பற்றிய நூல்கள்
  • குருகவி ம.வே. மகாலிங்கசிவம் வரலாறும் ஆக்கங்களும்: பா. மகாலிங்க சிவம்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.