பொற்கோ
பொற்கோ (பொன்.கோதண்டராமன்) (1941 ) கல்வியாளர், தமிழறிஞர். சென்னை பல்கலை கழகத் துணைவேந்தராக இருந்தவர். மொழியியல் ஒப்பிலக்கணம் ஆகியவற்றில் ஆய்வுகள் செய்தவர்
பிறப்பு,கல்வி
பொன் கோதண்டராமன் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் இரும்புலிக் குறிச்சி என்னும் ஊரில் 9 ஜூன் 1941 ல் பிறந்தவர். ரும்புலிக்குறிச்சியில் தொடக்கக் கல்வியைப் பயின்ற பொற்கோ மேல்நிலைக் கல்வியைப் பொன்பரப்பி என்னும் ஊரில் நிறைவு செய்தவர்.திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ்ப்புலவர் படிப்பை நிறைவு செய்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல்,முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.மொழியியல் துறையில் முனைவர் ச.அகத்தியலிங்கம் அவர்களின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றார்.மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் புலவர் பட்டமும்,சென்னைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டமும் பெற்றார்
கல்விப்பணி
முனைவர் பொற்கோ அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1969 முதல் 70 வரை, பின்னர் 1972 முதல்1973 வரை பணியாற்றிய பின்னர் லண்டன் பல்கலைக்கழகதில் உள்ள கீழையியல் மற்றும் ஆப்பிரிக்க ஆய்வியல் பகுதியில் 1970 முதல் 1972 வரை பணிபுரிந்தார். சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை அறிஞராக 1973 முதல் 74 வரை பணியாற்றினார். இணைப் பேராசிரியராக 1974 முதல் 1977 வரை பணியாற்றினார்
நியூயார்க் ஸ்டோனிபுரூக் (1973) நார்த்வெஸ்டன் பல்கலைக்கழகங்களிலும் ஜப்பானில் டோக்கியோ காக்கூஷின் பல்கலைக்கழகத்திலும் (1990,1993,1996) பணிபுரிந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத் துறையில் இணைப்பேராசிரியராக 1977 இல் பணியில் இணைந்தார். பணியுயர்வு பெற்று பேராசிரியராகவும்(1985) துறைத்தலைவராகவும் விளங்கினார். கீழைக் கலையியல் ஆய்வுப் பிரிவுக்கு இயக்குநராகவும், மொழியியல் ஆய்வுகளுக்கு இயக்குநராகவும் இருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 24-06-1999 முதல் 23-06.2002 வரை பணியாற்றினார்.
ஆய்வுப்பணி
பொற்கோ மொழியியல்,தமிழ் இலக்கணம், தமிழிலக்கியக் கொள்கைகள், திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம், யாப்பியல் ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர். ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இதுவரை எழுதியுள்ளார்.250 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். அண்ணாபல்கலைக்கழகம்,மருத்துவப்பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தில் தமிழ்வழிக்கல்வி குறித்தும் கலைச்சொல்லாக்கம் தொடர்பாகவும் கருத்துரை வழங்கியிருக்கிறார்.
இதழியல்
பொற்கோ ’புலமை’ என்னும் ஆராய்ச்சி இதழை நடத்திவருகிறார்.
விருதுகள்
- தமிழக அரசின் கலைமாமணி விருது(1997)
- மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரவைச் செம்மல்(2007) உள்ளிட்ட பல பெருமைப் பரிசில்