குணங்குடி மஸ்தான் சாகிபு

From Tamil Wiki
Revision as of 03:25, 22 January 2022 by Subhasrees (talk | contribs) (Format corrected, Citations added)

குணங்குடி மஸ்தான் சாகிப் (சுல்தான் அப்துல் காதிர்) (கி.பி. 1792 – 1838) ஓர் இஸ்லாமிய சூஃபி இறைஞானி. தமிழிலும், அரபியிலும் புலமை பெற்றவர். இளமையிலேயே துறவு பூண்டவர். பக்தி உணர்வு மிக்க இவரது பாடல்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானவை. குணங்குடியாருடைய பாடல்கள் இஸ்லாமியக் கருத்துக்கள் கொண்டவையாயினும் சமரச நோக்கம் கொண்டவை என்பதால் மதங்களைக் கடந்து புகழ் பெற்றவை. தமிழ் சித்த மரபினரில் ஒருவராக கருதப்படுகிறார்.

பிறப்பு, கல்வி

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு வடமேற்கில் பத்து மைல் தொலைவில் உள்ள குணங்குடி என்ற சிற்றூரில் 1792-ஆம் ஆண்டு நயினார் முகம்மது - பாத்திமா தம்பதியருக்குப் பிறந்தார்.

தாய்மாமன் மகள் மைமூனை மணமுடித்து வைக்க குடும்பத்தார் முடிவு செய்த போது, அதை மறுத்து 17ஆம் வயதில் குடும்பத்தைத் துறந்தார். கீழக்கரையில், தைக்கா சாகிபு என்றழைக்கப்பட்ட சய்கப்துல் காதிர் லெப்பை ஆலிம் என்னும் ஞானியிடம் மாணவராக இருந்து 1813-இல் துறவு பூண்டார்.

தரீக்கா (Thareeka) என்ற சொல்லுக்கு வழி பாதை என்று பொருள். இறைவனை அறியவும் அவனை அடையவும் வழிகாட்டும் வழிகள் என்று அர்த்தம். இஸ்லாமிய மார்க்கப் பிரிவுகளில் ஒன்றான காதிரிய்யா தரீக்காவின் ’தைக்கா சாஹிபு’ என்றழைக்கப்பட்ட செயகு அப்துல் காதிரிலெப்பை ஆலிமிடம் இஸ்லாமிய சமய ஞானத்தையும், தவ வழிமுறைகளையும் கற்றார்.

ஆன்மீக வாழ்க்கை

1813 ஆம் ஆண்டில் திரிசிரபுரத்து ஆலிம் மௌல்வி ஷாம் சாகிபுவிடம் இஸ்லாமிய யோக நெறியில் தீட்சை பெற்றார். இதன் பின்னர் “சிக்கந்தர் மலை” என்று அறியப்படும் திருப்பரங்குன்றத்திற்குப் போய் அங்கு நாற்பது நாட்கள் ‘கல்வத்’ எனப்படும் தனிமைத் தவத்தில் ஈடுபட்டார். இதன் பின்னர் அறந்தாங்கி நகருக்கு அருகில் உள்ள கலகம் என்ற ஊரில் ஆறு மாதங்கள் தங்கி தவமியற்றினார். தொண்டியில் தன் தாய்மாமனின் ஊராகிய வாழைத்தோப்பில் நான்கு மாதங்கள் தங்கி தவம் புரிந்தார்.

இதனைத் தொடர்ந்து சதுரகிரி, புறாமலை, நாகமலை, ஆனைமலை போன்ற மலைகளிலும், காடுகளிலும், நதிக்கரைகளிலும் அலைந்து திரிந்து தவ வாழ்க்கை மேற்கொண்டார். உலகப்பற்றை அறவே நீக்கி பல ஊர்களுக்கு நாடோடியாக அலைந்தார். இஸ்லாமிய இறைப் பித்தரானார். மஸ்த் என்ற பாரசீகச் சொல்லுக்கு போதைவெறி என்று பொருள். இறைகாதல் போதையில் வெறி பிடித்த ஞானியரை 'மஸ்தான்' என அழைப்பது மரபு.

ஏழு ஆண்டுகள் இவ்வாறிருந்து, வடஇந்தியா சென்று பலருக்கு ஞானோபதேசம் செய்தார். பின்னர் வடசென்னையில் இராயபுரத்தில் பாவா லெப்பை என்ற இஸ்லாமியருக்குச் சொந்தமான லெப்பைக் காடு என்ற பகுதியில் தங்கினார். பாவா லெப்பை இவருக்கு ‘தைக்கா’ (ஆஸ்ரமம்) அமைத்துக் கொடுத்திருக்கிறார். அங்கே தவவாழ்க்கை மேற்கொண்டார்.

குணங்குடியார் இஸ்லாமியச் சூஃபி ஞானியாக இருந்தபோதிலும் அவரது சமரச நோக்கின் காரணமாக அவர் சீடர்களாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் இருந்தனர். பன்னிரண்டு ஆண்டுகள் சென்னையில் வாழ்ந்த குணங்குடியாரை, இஸ்லாமியர் ஆரிபுபில்லா (இறை ஞானி), ஒலியுல்லா (இறையன்பர்) எனவும், இந்துக்கள் ‘சுவாமி’ என்றும் அழைத்திருக்கிறார்கள்.தொண்டியைச் சேர்ந்தவர் என்பதால் மக்கள் அவரைத் தொண்டியார் என்று அழைத்தத்தால் அவர் வாழ்ந்த இடம் தொண்டியார் பேட்டை – பின்னர் தண்டையார் பேட்டை ஆயிற்று.[1]

இந்திய தமிழ் இஸ்லாம் மரபு

இந்தியாவில் இருந்து உருவான சமணம், பௌத்தம், சீக்கியம் போன்ற எல்லா மதங்களையும் ஒரே பண்பாட்டு வெளியைச் சேர்ந்தவையாக அணுகமுடியும். இம்மதங்களின் தொன்மங்கள், அடிப்படை நம்பிக்கைகள், குறியீடுகள் போன்றவை இந்துப்பண்பாடு என அடையாளப்படுத்தக்கூடிய ஒரு பொதுத் தொகுப்பில் இருந்து வந்தவை. குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களின் குறியீடுகள், தொன்மங்கள் போன்றவை இந்த பண்பாட்டுத்தொகுப்பில் இருந்து வந்தவையே.[2]

தமிழகத்தில் இஸ்லாமிய ஆன்மீகத்தைப் பதினாறாம் நூற்றாண்டில் சதக்கத்துல்லா அப்பா மறுவரையறை செய்தார். அவர் முன்வைத்ததைத் தமிழ் இஸ்லாம் மரபு என்று சொல்லலாம். தமிழகத்தின் பொதுப்பண்பாட்டின் இருந்த பிற ஆன்மீக அம்சங்களுடன் ஆக்கபூர்வமான உரையாடலை மேற்கொண்டு அது உருவானது.குணங்குடிமஸ்தான் அந்த தமிழ் இஸ்லாமின் வழி வந்தவர்.

இலக்கியப் பணி

தமிழ் இஸ்லாமிய இலக்கியத்தில் குணங்குடியாரின் பாடல்கள் எளிமையான அழகிய கவித்துவம் கொண்டாவை. மஸ்தான் சாகிபு நாயகி நாயக பாவங்களில் அல்லாவைப்பற்றிப் பாடியிருக்கிறார். தன் மனதின் மணியாகிய அல்லாவை ‘மனோன்மணியே’ என்றழைத்து, பெண்ணாக உருவகித்து தன்னை பெருங்காதலனாக வைத்து எழுதப்பட்ட அவரது பாடல்கள் புகழ்பெற்றவை.

குணங்குடியார் இயற்றிய பராபரக்கண்ணி மொத்தம் நூறு பாடல்களைக் கொண்டது. இரண்டு இரண்டடிகள் கொண்டது. தாயுமானவர் பாடல்கள் போல் செய்யுள் அமைப்பும் தத்துவக் கொள்கையும் கொண்டவை. குணங்குடி மஸ்தான் சாகிப் 24 கீர்த்தனைகள் உட்பட பல பாடல்கள் எழுதியிருக்கிறார். முகமது நபி பற்றிய பாடல்கள் கொண்ட முகியத்தீன்சதகம் 100 பாடல்களைக் கொண்டது. இதேபோல அகத்தீசன் சதகமும் 100 பாடல்களைக் கொண்டது.

அவரது பாடல்களில் அரபுச் சொற்கள், உருதுச் சொற்கள், பாரசீகச் சொற்கள் நிறைய இடம்பெற்றிருந்தன.

அழகியல்

சூஃபி மரபு இஸ்லாமியின் முக்கியமான ஆன்மிக சாரம். தமிழின் சூஃபி மரபு அப்போது இருந்த பக்தி இயக்கத்தின் அழகியலை உள்வாங்கிக் கொண்டு உருவானது. குணங்குடி மஸ்தான் சாயுபுவின் மொழிநடை, செய்யுள் வடிவம், உணர்வெழுச்சி ஆகியவை அப்படியே பக்தி இயக்கத்தின் மரபை பின்பற்றுபவை. அதனால் இவரது பாடல்கள் மத எல்லைகளைக் கடந்து பக்தி இயக்கத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் உவப்பானவையாக ஆயின.

சூஃபி மெய்ஞானம் நுண்மையானது, அருவமானது. அதைச் சொல்ல வெறுமே மொழியழகினால் மட்டுமே நிலைகொள்ளும் கவித்துவம் தேவை. பொருளின்மையைக்கூடச் சென்று தொடும் அழகாக அது இருக்கவேண்டும். குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களில் பல இடங்களில் எளிமையான சொல்லடுக்கில் அது நிகழ்கிறது.

மறைவு

குணங்குடி மஸ்தான் சாகிபு 1838 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1254, ஜமாதுல் அவ்வல் 14ம் நாள் திங்கட்கிழமை வைகறை நேரம்) தன்னுடைய நாற்பத்து ஏழாவது வயதில் இறந்தார். இவர் தங்கியிருந்த சென்னை பழைய வண்ணாரப்பேட்டையிலேயே இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

படைப்புகள்

குணங்குடி மஸ்தான் எழுதிய நூல்களில் சில:

  • அகத்தீசர் சதகம் – 100 பாடல்கள்
  • ஆனந்தக் களிப்பு – 38 பாடல்கள்
  • நந்தீசர் சதகம் – 51 பாடல்கள்
  • நிராமயக்கண்ணி – 100 பாடல்கள்
  • பராபரக்கண்ணி – 100 பாடல்கள்
  • மனோன்மணிக்கண்ணி -100 பாடல்கள்

உசாத்துணைகள்

தமிழ் இலக்கிய வரலாறு – மு. வரதராசன்

  1. குணங்குடியார் பாடற்கோவை – நாஞ்சில் நாடன் கட்டுரை
  2. https://www.jeyamohan.in/27843/