பொன்னூர் ஆதிநாதர் கோயில்

From Tamil Wiki
Revision as of 17:30, 23 February 2022 by Ramya (talk | contribs) (Created page with "பொன்னூர் ஆதிநாதர் கோயில் (பொ.யு. 12ஆம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்த சமணக் கோயில். == இடம் == வட ஆர்க்காடு மாவட்டத்தில் பொன்னூர் எனும் கிர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பொன்னூர் ஆதிநாதர் கோயில் (பொ.யு. 12ஆம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்த சமணக் கோயில்.

இடம்

வட ஆர்க்காடு மாவட்டத்தில் பொன்னூர் எனும் கிராமத்தில் அமைந்த ஆதிநாதர் கோயில். இலங்காட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள இவ்வூர் ஹேமகிராமம் சுவர்ணபுரம், பொன்னூர் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

வரலாறு

இத்தலத்தில் பொ.யு. 7-ஆம் நூற்றாண்டிற்கு முன்பே சமண சமயம் வேரூன்றியிருந்ததென்றும், அக்காலத்திலேயே இங்கு சமணப்பள்ளி ஒன்று கட்டப் பெற்றிருந்ததென்றும் செவி வழிச்செய்தி நிலவுகிறது. ஆனால் இதனை மெய்ப்பிக்கும் வகையில் சான்றுகள் எவையும் கிடைக்கவில்லை. தற்போது இங்குள்ள கோயில் பொ.யு. 12-ஆம் நூற்றாண்டுக் கலைப்பாணியைத்தான் கொண்டு விளங்குகிறது.

அமைப்பு

இங்குள்ள அதிக உயரமில்லாத குன்றின் மீதுதான் முதலாவது தீர்த்தங்கரராகிய ஆதிநாதருக்குக் கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. இக்குன்று கனககிரி எனவும், இங்குள்ள ஆதிநாதர் கனகமலை ஆழ்வார் எனவும் அழைக்கப்படுகிறார். பொன்னூரிலுள்ள கோயில் கிழக்கு நோக்கியவாறு கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், யக்ஷி, கருவறை ஆகிய பகுதிகளைக்கொண்டது. கோயிலைச் சுற்றி திருச்சுற்று மதிலும், அதன் வடக்குப் புறத்தில் நுழைவாயிலும் உள்ளது.

கோயிலின் அடித்தளம் அதிக உயரமின்றி எளிமையாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றின் வெளிச்சுவர்களில் அரைத் தூண்களும், அவற்றிற்கு இடைப்பட்ட பகுதிகளில் தேவகோட்டங்களும் உள்ளன. ஆனால் இந்த தேவகோட்டங்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் எவையும் காணப்படவில்லை. கருவறைக்கு மேலுள்ள கொடுங்கையில் கூடு அமைப்புகளும், அவற்றில் மனிதத் தலைவடிவங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன. கொடுங்கையின் மேற்புறம் யாளி வரிசையும் இடம் பெற்றிருக்கிறது. இந்த யாளி வரிசைக்கு மேலுள்ள விமானப் பகுதி செங்கல், சுதை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட தாகும். ஒரு தளம் உடைய இந்த விமானத்தில் கூடம், சாலை எனப்படும். சிறிய வடிவக் கோயில் அமைப்புகளும், அவற்றிற்கிடையில் தீர்த்தங்கரர்களது சுதை வடிவங்களும் காணப்படுகின்றன. தளத்திற்கு மேலாக உருண்டை வடிவ சிகரமும், ஒற்றைக் கலசமும் இடம் பெற்றிருக்கின்றன. செங்கல், சுதை ஆகியவற்றால் கட்டப்பட்டிருக்கும் விமானப் பகுதி அண்மைக் காலத்தைச் சார்ந்ததாகும். அர்த்தமண்டபத்தில் உருண்டையான நான்கு தூண்கள் உள்ளன இவற்றின் மேற்பகுதியில் நீள் சதுர வடிவ போதிகையும், அதன் வெளிப்பகுதியில் முக்கோண வடிவமும் அமைக்கப்பட்டிருக்கிறது. கருவறை, அர்த்தமண்டபம் அதிலுள்ள தூண்கள் ஆகியவற்றின் அமைப்பும், கலைப்பாணியும் பொ.யு. 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்திருப்பதால், தற்போதைய அமைப்பிலுள்ள கருவறையும், அர்த்தமண்டபமும் பொ.யு. 12ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது. ஆனால் மகாமண்டபம் பொ.யு. 13 ஆம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டிருக்கிறது இதிலுள்ள தூண்கள் சதுர எண்கோண வடிவங்களை பெற்றிருத்தலைக் காணலாம். சதுரப்பகுதிகளில் தாமரைமலர் வடிவங்கள் தீட்டப்பெற்றிருக்கின்றன. தூண்களிலுள்ள போதிகையும் பெரியதாகயின்றி பூமுனை வடிவத்தினை கொண்டிருக்கிறது. மேலும் இந்த மண்டபத்தின் அடித்தளத்திலுள்ள கல்வெட்டும் பொ.யு. 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். எனவே பொ.யு. 13 ஆம் நூற்றாண்டில், முன்பிருந்த கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றை ஒட்டி மகாமண்டபம் எழுப்பப்பட்டிருக்கிறது, இந்த மண்டபத்தின் தென்பகுதியில் சிறிய அளவிலான ஜுவாலமாலினியம் மன் கருவறை 1960ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. இதே ஆண்டில் தான் கோயில் பழுதுபார்க்கப்பட்டு நன்முறையில் கொணரப்பட்டதாக அறிய வருகிறோம்.

சிற்பங்கள், உலோகத் திருமேனிகள்

பொன்னூர் கோயிலில் அதிகமாக கல்சிற்பங்கள் இல்லாவிடினும், ஏராளமான செப்புத்திருமேனிகள் இருப்பதைக் காணலாம். கருவறையில் அழகுமிக்க ஆதிநாதர் சிற்பம் நிறுவப்பட்டிருக்கிறது இப்பெருமான் கருணை வடிவான முகப்பொலிவையும், தசைபிடிப்பற்ற உடலையும் பெற்று தவக்கோலத்தில் காட்சியளிக்கிறார். சிறிய சுருள்களாலான தலைமுடி, மெல்ல மூடிய கண்கள், முறுவல் தவழுவதைக் குறிக்கும் குவிந்த உதடுகள் எடுப்பான மூக்கு. அசைவின்றி தியானத்தில் மூழ்கியிருக்கும் தன்மையாவும் இச்சிற்பத்திற்கு உயிரோட்டம் அளிப்பவையாக திகழ்கின்றன. தீர்த்தங்கரரது தலைக்குப் பின்புறம் நெருப்புச்சுவாலையுடள் கூடிய பிரபை அதற்கு மேலாக முக்குடை ஆகியவை திறம்படத் தீட்டப்பட்டிருக்கின்றன. இத்தேவரின் இரண்டு பக்கங்களிலும் சாமரம் வீசுவோர் சற்று ஒருபுறம் சாய்ந்தவாறு நிற்கின்றனர். இந்த அரிய கலைச்செல்வம் கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததென்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆகவே கோயில் பிற்காலத்தில் புதுப்பிக்கப்பட்டபோதிலும், மூலவர் சிற்பம் எந்தவித மாற்றமும் பெறவில்லை என்பது தெள்ளிதின் விளங்கும். மகாமண்டபத்தை ஒட்டியுள்ள யக்ஷி கருவறையில் சரஸ்வதிதேவியார் சிற்பம் மேடையொன்றில் வைக்கப்பட்டிருக்கிறது. 19ஆம் நூற்றாண்டிற்குரிய இத்திருவுருவம் பொன்னூரில் மண் தேரண்டும்போது வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இதனை இவ்வூர் மக்கள் இந்த கோயிலுக்கு கொண்டு வந்து வழிபடுவதற்கேற்ற வகையில் நிறுவியிருக்கின்றனர். ஜுவால மாலினிக்கென ஏற்படுந்தப்பட்ட இந்த சிறிய கருவறையில் இந்த யக்ஷியின் உலோகத்திருவுருவம் மட்டும் உள்ளதேயன்றி கல்சிற்பம் எதுவும் இல்லை. உலோகத்தினால் வார்க்கப்பட்ட படிமங்கள் பெரியவையாக சிறியவையாகவும் ஏராளமாக இங்கு இடம் பெற்றிருத்தலைக் காணலாம். ரிஷப நாதர், சுபார்சுவநாதர், சந்திரபிரபா, புஷ்ப தந்தர். சாந்தி நாதர், மல்லி நாதர், பார்சுவ நாதர், முதலிய தீர்த்தங்கரர்களது திருவுருவம், ஜுவாலமாலினி, தருமதேவி, சர்வான யக்ஷன் முதலிய சாசனதேவதை படிமங்களும், சர்வதோபத்திரம், மேரு, அஷ்டமங்கலச் சின்னங்கள் முதலியவையும், இவற்றுள் அடங்கும். இந்த உலோகத் திருமேனிகளுள் ரிஷபநாதர். பார்சுவநாதர், ஜுவாலமாலினி ஆகியோரைக் குறிப்பிடுபவை கி.பி. 18ஆம் நூற்றாண்டையும், ஏனையவை இதற்கு பிற்பட்ட காலத்தையும் சார்ந்தவையாகும்.

பார்சுவதாதர். ரிஷபநாதர் ஆகியோரைக் குறிக்கும் செப்புத் திருவங்கள் ஒரு அடி உயரம் உடையவையாகும். தாமரை மலராலானபீடமொன்றில் நின்றகோலத்தில் இவர்கள் காட்சியளிக்கின்றனர். இவற்றில் செம்பு அதிகம் கலந்து வார்க்கப்பட்டிருப்பதால் செம்மை நிறத்துடன் காணப்படுகின்றன. பார்சுவதேவரின் தலைக்குமேல் ஐந்து தலை நாகம் படம் எடுத்த வண்ணம் உள்ளது இந்த பாம்பு இல்லை எனில் இதற்கும், ரிஷபதேவர் திருவுருவத்திற்கும் வித்தியாசம் தெரியாது. பார்சுவரைச் சுற்றிலும் அலங்கார வேலைப்பாடுடைய திருவாசி காணப்படுகிறது. இதில் பொறிக்கப்பட்டுள்ள சாசனம், இப்பார்சுவதேவரது படிமம் 1733-ஆம் ஆண்டு அனந்தசேனர் என்பவரால் நிறுவப்பட்டதென்று கூறுகிறது. இதுபற்றிய செய்தி பின்னர் விரிவாக அளிக்கப்படுகிறது. கருவறைக்கு முன்புள்ள பீடத்தில் சிறிய அளவிலான ஜுவாலமாலினியம்மன் திருவுருவம் வைக்கப்பட்டிருக்கிறது. இதுவும் பார்சுவ தீர்த்தங்கரர் படிமத்தைப்போன்று பொ.யு. 18ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டதாகும். ஆனால் அண்மைக் காலத்தில் இது மெருகூட்டப்பட்டிருப்பதால், இதன் பழைய கலை யம்சங்கள் மறைந்துள்ளன.

சுவாலாமாலினி வழிபாடு

சமண சமயத்தில் ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் ஒவ்வொரு யக்ஷி படைக்கப்பட்டிருந்த போதிலும், தமிழகத்தில் அம்பிகா, பத்மாவதி, ஜுவாலாமாலினி, சித்தாயிகா ஆகிய யக்ஷிகளே சிறப்புற வழிபடப்பட்டு வந்திருக்கின்றனர். இவர்களுக்குச் சில தலங்களில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதையும் காணலாம் அவ்வகையில் பொன்னூரில் ஜுவாலாமாலினி முதன்மைபெறுகிறாள். எனவேதான் இத்தேவியின் படிமங்கள் தனியாக ஒரு கருவறையிலும், அர்த்தமண்டபத்திலுள்ள பீடத்திலும் நிறுவப்பட்டிருக்கின்றன. இக்கோயிலில் இவ்வன்னைக்குச் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பெறுகின்றன. மேலும் தினமும் நடைபெறும் பூசையின்போதும் இவளுக்குத் தீர்த்தங்கரருக்கு அடுத்தபடியாக ஆராதனை செய்யப்பட்டுவருகிறது. இத்தேவியை விரதமேற்று அனுதினமும் வணங்கி வந்தால் நற்பேறு அளிப்பாள் என்ற நம்பிக்கையும் மக்களிடம் உண்டு, அருளறம் பூண்ட அறவோராகிய ஹேலாச்சாரியார் இவ்வன்னையின் அருளாசி பெற்றவர் என்றும், இதனால் இத்தெய்வ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது மேலும் இந்த யக்ஷி பொன்னூரை அடுத்துள்ள நீலகிரி மலையினைத் தனது உறைவிடமாகக் கொண்டவள் எனவும், அதனால் ஹேலாச்சாரியார் அந்த மலையிலேயே நெடுங்காலம் துறவறம் பூண்டு, இறுதியில் முக்தியடைந்தார் எனவும் கருதப் படுகிறது.

ஹேலாச்சாரியார்

தென்னிந்திய சமண சமய வரலாற்றில் ஹேலாச்சாரியார் என்னும் பெயர் பெற்ற அறவோர் பலர் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.பொ. மு. அல்லது பொ.யு. ஒன்றாம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் கொண குணலா என்னும் ஊரில் பிறந்த குந்த குந்தராகிய ஹேலாச்சாரியார் தான் காலத்தால் முந்திய பேரறிவாளராவார். பிற்காலத்தில் தோன்றிய சமணப் பெருந்தகையோர் சிலரும் ஹேலாச்சாரியார் எனப் பெயர் பூண்டிருந்த போதிலும் இவர்களும் குந்த குந்தரும் ஒருவர் என அறிஞர் பெரு மக்கள் கருதுகின்றனர்.

பொன்னூரிலுள்ள கல்வெட்டு குறிப்பிடும் ஹேலாச்சாரியார் இவ்வூரைச் சார்ந்தவரென்றும், திராவிடகணத்தைச் சார்ந்த துறவி யென்றும் கூறப்படுகிறது. இவர் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார். ஜுவாலாமாலினியம்மன் வழிபாடு சிறப்புற நடைபெறுவதற்கு இவர் காரணமாகத் திகழ்ந்திருக்கிறார். மேலும் இவருடைய போதனைகளைப் பிற்காலத்தில் இந்திர நந்தியோ கிந்திரர் என்பவர் தொகுத்து ஜுவாலமாலினி கல்பம் என்னும் நூலாக உருவாக்கினார் எனவும் அறிஞர்கள் பகருகின்றனர்.

பொன்னூர் மலையும், ஹேலாச்சாரியார் திருவடிகளும்

பொன்னூரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வடமேற்கிலுள்ள நீலகிரி மலையையே தற்காலத்தில் பொன்னூர் மலை. இந்தமலை தான் ஜுவாலமாலினியம்மனது உறைவிடம். இங்கு இத்தேவிக்கு தனிக் கோயிலோ அல்லது பாறைச் சிற்பமோ ஏற்படுத்தப் படவில்லை. இருப்பினும் இந்தமலை ஜுவாலமானியுடன் நெடுங்காலமாகத் தொடர்பு படுத்தப்பட்டு வந்திருப்பதாக அறிய வருகிறோம். இந்த மரபு எக்காலத்திலிருந்து தோன்றியது என்பது பற்றியோ அல்லது என்ன காரணத்தினால் ஏற்பட்டது என்பது உறுதியாகக் கூறுவதற்கில்லை. ஆனால் பொ.யு 18-ஆம் நூற்றாண்டிலேயே இந்த மரபு இருந்துள்ளது.

நீலகிரி மலையில் தவம் புரிந்த ஹேலாச்சாரியார் ஜுவாலா மாலினியம்மன் வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்று முன்பே கண்டோம். இவர் நீலகிரி மலையிலிருந்து அருளறம் போற்றி சமய நற்பணிகளைச் சிறப்புற ஆற்றி வந்திருக்கிறார். இந்த மலையில் உறைபவளாகிய ஜுவாலமாலினி யக்ஷியும் இவருக்கு அருள் பாலித்ததாக ஒரு செவி வழிச் செய்தி நிலவுகிறது. இதனால்தான் பொன்னூர் கோயிலிலும் இத்தேவிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாயிற்று என்றும் கூறுவர். ஹேலாச்சாரியார் தமது வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் கடுந்தவம் புரிந்து பொன்னூர்மலையில் வீடுபேறு அடைந்ததாகவும் அறிய வருகிறோம். இவரது நினைவாக இம்மலையில் திருவடிகள் செதுக்கப் பட்டிருக்கின்றன. இங்கு இன்றளவும் ஹேலாச்சாரியார் திருவடிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருவதை யாவரும் அறிவோம்.

பொன்னூர் ஆதிநாதர் கோயிலிலுள்ள கல்வெட்டு ஒன்று இந்த பாத வழிபாடு பற்றிய செய்தியினைக் கூறுகிறது. பொ.யு. 1733 ஆம் ஆண்டு சுவர்ணபுரமாகிய பொன்னூரிலுள்ள சைன சமயத் தவர் இந்த ஊருக்கு வடமேற்கிலுள்ள நீலகிரி பர்வதத்தில் (பொன்னூர் மலை) வாரந்தோறும் நடைபெறும் ஹேலாச்சாரியார் வழிபாட்டிற்கு (திருவடி வழிபாடு). ஆதிநாதர் கோயிலிலுள்ள பார்சுவநாதர், ஜுவாலமாலினியம்மன் ஆகியோரது திருவுருவங்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று வழிபட வேண்டுமென ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் ஹேலாச்சாரியாரது பாதங்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றிருக்கிறதென்றும், அப்போது பார்சுவநாதர், ஜுவாலமாலினி ஆகியோரது உலோகத் திருவுருவங்களை பொன்னூரிலிருந்து அங்கு கொண்டு சென்று, அவற்றின் முன்னிலையில் சமயச் சடங்குகள், பூசைகள் முதலியன நிகழ்த்தப்பட்டிருக்கிறதென்பதும் அறியற் பாலதாகும். இந்த வழிபாட்டின் போது வேறெந்த யக்ஷிகளுமின்றி, ஜுவாலமாலினியைப் பொன்னூர் மலைக்கு எடுத்துச் சென்றிருப்பது ஹேலாச்சாரியாருக்கு இத்தெய்வத்தின் மீதிருந்த ஈடுபாட்டை வலியுறுத்துவதாகும். இந்த திருப்பாத வழிப்பாட்டிற்கெனப் பொன்னூர் மலைக்குக் கொண்டு செல்லப்பட்ட பார்சுவ தீர்த்தங்கரர் உலோகத்திருமேனி யும் பொ.யு. 1773 ஆம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். ஜுவால மாலினி திருவுருவமும் இதே ஆண்டில் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும், எனவே பொ.யு. 1773ஆம் ஆண்டிலிருந்து பார்சுவர் படிமத்தையும், யக்ஷியின் திருவுருவத்தையும், நீலகிரிமலைக்கு எடுத்துச் செல்லும் வழக்கம் தொடங்கியிருக்கிறது என்பது உறுதி யாகிறது. இதற்கு முன்பே ஹேலாச்சாரியார் திருப்பாதங்களுக்கு வழிபாடுகள் தவறாமல் நடைபெற்றிருக்கலாம். ஆனால் தீர்த்தங்கரர், ஜுவாலமாலினி ஆகியோரது திருவுருவங்களின் முன்னிலையில் இச்சமயச் சடங்குகள் நிறைவேற்றப் பெற்றமை பொ.யு. 1733 ஆம் ஆண்டிலிருந்துதான் என்பது தெளிவாகிறது. பொன்னூர் மலையில் சற்று பெரியதாக வடிக்கப்பட்டிருக்கும் ஹேலாச்சாரியாரது திருவடிகள் எப்போது தோற்றுவிக்கப்பட்டவை என்பதனை வரையறை செய்யப் போதிய சான்றுகள் எவையும் கிடைக்கவில்லை . எனவே எக்காலம் முதல் இந்த திருவடிகளுக்கு பூஜை செய்யும் வழக்கம் தொடங்கியது என்பது பற்றிக் கூற இயலவில்ல

கல்வெட்டுச் செய்திகள்

ஆதிநாதர் கோயிலின் மகாமண்டபத்தில் மூன்று கல்வெட்டுகளும், பார்சுவதேவர் படிமத்தைச் சுற்றியுள்ள பிரபையில் ஒரு சாசனமும் பொறிக்கப்பட்டுள்ளது. இவை பாண்டிய, விஜயநகரப்பேரரசர்கள் காலத்திலும் அதற்குப் பின்னரும் எழுதப்பட்டது.

  • பாண்டிய மன்னன் மாறவர்மன் விக்கிரமபாண்டியது ஏழாவது ஆட்சியாண்டில் (பொ.யு. 1256) வந்தவாசி தாலுகாவிலுள்ள மற்றொரு சைனத்தலமாகிய விடால் என்னும் கிராமத்தைச் சார்ந்த சபையோர்கள் பொன்னூரில் ஆதிநாதர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் வீடு கட்டிக் குடியேறுபவர்கள் செலுத்த வேண்டிய வரிகளையெல்லாம் அந்த கோயிலில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுவதற்காகவும் கோயிலில் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்வதற்காகவும் ஒதுக்கியிருக்கின்றனர்.
  • மகாமண்டபத்தின் உத்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ள சாசனம் ஒன்று விஜயநகர அரசனாகிய சாளுவ நரசிம்மனது ஆட்சிக் காலத்தைச் (பொ.யு. 1452 - 1492) சார்ந்தது. இது கோயிலிலுள்ள மூலவரைக் கனகமலையாழ்வார் என்றே குறிப்பிடுகிறது.
  • இம்மண்டபத்தின் மற்றொரு உத்திரத்தில் பொ.யு. 1733 ஆம் ஆண்டில் எழுதப்பெற்ற சாசனம் உள்ளது. பார்சுவநாதர் திருவுருவத்தையும், ஜுவாலமாலினியம்மன் படிமத்தையும் பொன்னூர் மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நீலகிரிபர்வதத்திற்கு எடுத்துச்சென்று ஹேலாச்சாரியார் திருப் பாதங்களுக்கு வழிபாடு செய்ய வேண்டுமென்பதைக் கூறுகிறது.
  • ஆதிநாதர் கோயிலுள்ள பார்சுவநாதர் படிமத்தைச் சுற்றியுள்ள பிரபையில் பொறிக்கப்பட்டிருக்கும் சாசனமும் பொ.யு. 1733ஆம் ஆண்டைச்சார்ந்தது. பார்சுவ நாதர் படிமத்தையும், ஜுவாலா மாலினி திருவுருவத்தையும் பொன்னூர் மலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்ற ஹேலாச்சாரியார் திருவடி வழிபாட்டிற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடாகியிருகும் செய்தியைக் குறிப்பது.
  • பொன்னூரிலுள்ள தெரு ஒன்றில் நட்டு வைக்கப்பட்டிருக்கும் கல்லில் வடமொழியில் எழுதப்பட்ட சாசனம் ஒன்று உள்ளது. இதன் வரி வடிவம் பொ.யு. 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இதில் பார்சுவ தீர்த்தங்கரருக்கு வணக்கம் தெரிவிப்பதாக உள்ள செய்தியும், சில குறியீடுகளும் உள்ளன.

உசாத்துணை

  • தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள் (டாக்டர்.ஏ. ஏகாம்பர நாதன்); 1991