அபி

From Tamil Wiki
Revision as of 00:35, 21 January 2022 by Jeyamohan (talk | contribs)
கவிஞர் அபி.jpg

அபி (ஹபிபுல்லா) (22-01-1942) தமிழின் நவீனக் கவிஞர்களுள் ஒருவர். அரூப கவிதையை தமிழில் எழுதிய முன்னோடிப் படைப்பாளி. அன்றாட வாழ்க்கை சாராத உருவகங்கள் மற்றும் படிமங்கள் வழியாக காலம், வெளி, மனித இருப்பு ஆகியவற்றைப்பற்றிய அடிப்படையான தத்துவக் கேள்விகளை கவிதையில் எழுப்பிக்கொண்டவர்.

தனி வாழ்க்கை

அபி அவர்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் பகுதியாக இருந்த போடிநாயக்கனூரில் (தற்போது தேனி மாவட்டம்) 22 ஜனவரி 1942 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை அ.கா. பீர்முகம்மது போடிநாயக்கனூரில் பலசரக்கு வியாபாரம் செய்தார். தாயார் பாத்திமா பீபி. அபியுடன் பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர். அபியின் சித்தப்பா தோப்புகளை குத்தகை எடுத்து விவசாயம் நடத்தினார். கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த அபி மிக இளமைக் காலத்திலேயே தன் சித்தப்பாவுடன் வயலுக்கு செல்வதில் ஆர்வம் காட்டினார். இது தான் பின்னாளில் எழுதிய அரூப கவிதைக்கு தூண்டுகோளாக அமைந்தது என்கிறார் அபி.

விக்டோரியா நினைவு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர். பள்ளி நாட்களிலேயே வெண்பா எழுதுவதிலும், சங்க இலக்கியம், இலக்கணம் பயில்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். காரைக்குடியில் இருக்கும் அழகப்பா கல்லூரியில் இளங்கலை (1963) தமிழ் இலக்கியமும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுகலை (1966) தமிழ் இலக்கியமும் பயின்றார். அபி தனது முனைவர் பட்டத்தை (1981) பகுதி நேரக்கல்வியில் எழுத்தாளர் லா.ச.ராவின் உரைநடையில் மேற்கொண்டார்.

அபி திருமதி பாரிசா அவர்களை (23-05-1971) அன்று திருமணம் செய்து கொண்டார். குழந்தைகள் பர்வின், பாத்திமா இரு மகள்கள், அஷ்ரப் அலி, ரியாஸ் அஹமது இரு மகன்கள். அபி அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

கர்நாடக சங்கீதத்திலும், ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் நாட்டம் கொண்டவர்.

இலக்கிய வாழ்க்கை

அபி எழுதிய முதல் கவிதையான “இன்னொரு நான்” 1967 இல் எழுதப்பட்டது. அபி கேட்டுக் கொண்டதன் பேரில் அவரின் முதல் கவிதை தொகுப்பான “மௌனத்தின் நாவுகள்” தொகுதியை கொண்டு வரும் முயற்சியில் கவிஞர் மீராவும், கவிஞர் அப்துல் ரகுமானும் ஈடுப்பட்டனர். அவர்கள் தொடர்பு கொண்ட பதிப்பகங்கள் அனைத்தும் புது கவிஞர் என்ற காரணத்தினால் அந்த தொகுப்பை வெளியிட மறுத்தன.

அதுவரை எந்த இதழிலும் வெளி வராத அபியின் கவிதைகள் அப்போது மீராவின் முயற்சியால் வெளிவந்தன. அபியை பற்றிய அறிமுகம் ஒன்று தேவை என்று அபியின் நீலாம்பரி என்னும் கவிதையை மீரா கண்ணதாசன் இதழில் வெளிவரச் செய்தார். அதன்பின்னும் பதிப்பகம் எதுவும் சரிவர பதிலளிக்காத காரணத்தினால் மீரா தானே ஒரு பதிப்பகம் தொடங்க முடிவு செய்தார். அன்னம் பதிப்பகம் கவிஞர் மீரா, அப்துல் ரகுமான் மற்றும் பிற நண்பர்கள் பணத்தால் தொடங்கப்பட்டது. அதன் முதல் புத்தகமாக அபியின் ’மௌனத்தின் நாவுகள்’ 1974 ஆம் ஆண்டு வெளிவந்தது.

லா.ச.ராவுடன் அபி

அபியின் பிற தொகுதிகளான அந்தர நடை 1979 ஆம் ஆண்டு அன்னம் பதிப்பகத்தின் வெளீயிடாக வந்தது. மூன்றாம் தொகுதி ‘என்ற ஒன்று’ 1988 இல் அன்னம் பதிப்பகத்தின் வெளீயிடாக வந்தது. இது அன்னம் பதிப்பகத்தின் நூறாவது புத்தகமாகும்.

அபியின் ஆரம்பகாலக் கவிதைகளில் கலீல் ஜிப்ரான், தாகூர் பாதிப்பு இருந்தது. தமிழில் தன் இயல்பிற்கு பொருந்திய அக நோக்கிற்கு முன்னோடியாக இருந்தவர்கள் லா.ச.ரா மற்றும் மௌனி என்கிறார்.பின்னர் ஐரோப்பா கவிஞர்களில் வாஸ்கோ போபா, பால் செலான் விரும்பி படித்தார். பின்னால் உள்ள கவிதை தொகுப்புகளில் அதன் பாதிப்பும் இருக்கலாம் என்கிறார் அபி.

இலக்கிய இடம்

தமிழிலில் அரூப கவிதைகளை தனி அழகியலாக முன்னெடுத்து புதிய வழிகளை தமிழ்க் கவிதைச் சூழலில் உருவாக்கிய முன்னோடி அபி. எழுத்தாளர் ஜெயமோகன் தன் ‘உள்ளுணர்வின் தடத்தில்’ என்னும் விமர்சனக் கட்டுரை நூலில் அபியை பற்றி, “தன் அதிகபட்சத்தை படைப்பியக்கத்தில் திரட்டி முன்வைத்த தமிழ் ஆளுமைகள் மிகவும் குறைவு. நிகழ்ந்த குறுகிய காலத்தில் பாரதி அதை சாதித்தார். புதுமைப் பித்தனும் சரி பிரமிளும் சரி, அவர்கள் செல்லச் சாத்தியமான தொலைவுக்கு மிகக் குறைவாகவே சென்றவர்கள் என்றே அவர்களுடைய படைப்புக்கள் காட்டுகின்றன. புதுமைப்பித்தனுக்கு நோயும் பிரமிளுக்கு மிதமிஞ்சிய தன்முனைப்பும் தடைகளாயின. தமிழில் அதிகமாக கவனிக்கப்படாவிடினும் அபி தன் மெளனம் மிக்க சிறு உலகினுள், தன் ஆளுமையின் பெரும்பாலானவற்றை கவிதைகளில் நிகழ்த்துவதில் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே படுகிறது. குறுகிய, சிறியக் கவியுலகினுள் தமிழ்க் கவியுலைகின் மிகச் சிறந்த பல கவிதைகள் உள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றி ஒரு தமிழ்ச் சாதனையே” என்கிறார்.

அபி பி.ஏ. பட்டமளிப்பு விழா - 1963

விருதுகள்

  • கவிக்கோ விருது (2004)
  • கவிக்கணம் விருது (2004)
  • கவிஞர் தேவமகன் அறக்கட்டளை விருது (2008)
  • சிற்பி அறக்கட்டளை விருது (2011)
  • விஷ்ணுபுரம் இலக்கிய விருது (2019)
  • பொற்கிழி விருது (2021)

நூல்பட்டியல்

  • மௌனத்தின் நாவுகள் (1974 - அன்னம் பதிப்பகம்)
  • அந்தர நடை (1979 - அன்னம் பதிப்பகம்)
  • என்ற ஒன்று (1988 - அன்னம் பதிப்பகம்)
  • மாலை மற்றும் சில கவிதைகள் என்னும் தொகுப்பை உள்ளடக்கிய ‘அபி கவிதைகள்’ (2003 - கலைஞன் பதிப்பகம்)

விமர்சன நூல்கள்

  • இரவிலி நெடுயுகம் - 2019 விஷ்ணுபுரம் விருது அபிக்கு வழங்கப்பட்டதை ஒட்டி எழுத்தாளர் ஜெயமோகனும் அபியின் வாசகர்களும் அபியை பற்றி எழுதிய விமர்சன நூல்.

பிற நூல்கள்

  • லா.ச.ரா படைப்புலகம் - பதிப்பாசிரியர் (கலைஞன் பதிப்பகம்)

அரசியல் செயல்பாடுகள்

  • 1965 இல் கல்லூரி மாணவனாக இருந்த போது மதுரையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்
  • கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய போது ஆசிரியர் இயக்க போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றிருக்கிறார்.

உசாத்துணை