under review

கா.அப்பாத்துரை

From Tamil Wiki
Revision as of 19:17, 17 February 2022 by Madhusaml (talk | contribs) (category & stage updated)
கா.அப்பாத்துரை

கா. அப்பாத்துரை (24 ஜூன்1907 - 26 மே 1989) தமிழறிஞர். தமிழ் வரலாற்றாய்வாளர். மொழிபெயர்ப்பாளர். பன்மொழிப்புலவர் என அழைக்கப்பட்டவர். தமிழ், மலையாளம், சம்ஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் பயிற்சி உடைவர்.

பிறப்பு, கல்வி

கா.அப்பாத்துரை குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் 24 ஜூன்1907 ல் பிறந்தார். ஆரல்வாய்மொழியில் ஆரம்பக்கல்வி கற்றபின் நாகர்கோயிலில் பள்ளியிறுதிக் கல்வி முடித்து திருவனந்தபுரம் பல்கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். இந்தி மொழியில் ‘விசாரத்' தேர்வு எழுதி தேர்ச்சியடைந்தார்.  திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தனிவழியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டதாரியானார்.  சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து எல்.டி.பட்டம் பெற்றார்.

கா அப்பாத்துரை மலர்

தனிவாழ்க்கை

கா.அப்பாத்துரை தன் உறவினரான அலமேலு அம்மையாரை மணந்துகொண்டார். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.

அப்பாத்துரை பல்வேறு கல்விநிலையங்களில் பணியாற்றியிருக்கிறார்.

  • கா.அப்பாத்துரை திருநெல்வேலி, ம.தி.தா. இந்துக் கல்லூரியில் 1937 முதல் 1939 முடிய இந்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார். 
  • காரைக்குடி, ‘அமராவதிப் புதூர்’-குருகுலப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது கண்ணதாசன் இவரிடம் பயின்றார்.  
  • சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
  • மத்திய அரசின் செய்தித் தொடர்புத் துறையில் 1947 முதல் 1949 முடிய பணியாற்றினார்.  அப்பொழுது, ‘இந்தியாவின் மொழிச்சிக்கல்’ என்ற ஆங்கில நூலை எழுதியதால் தேச ஒற்றுமைக்கு எதிராகப் பணியாற்றியதாகக் குற்றம்சாட்டப்பட்டு பணியை இழந்தார்.
  • சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதித் தயாரிப்பில் 1959 முதல் 1965 முடிய ஆசிரியராகப் பணி செய்தார். 
  • தமிழக வரலாற்றுக்குழு உறுப்பினராக 1975 முதல் 1979 வரை இருந்துள்ளார்

இலக்கிய வாழ்க்கை

கா.அப்பாத்துரையின் அறிவியக்கப் பணியை நான்கு வகைகளில் தொகுக்கலாம். இதழியல் எழுத்துக்கள், இலக்கிய ஆய்வுகள், இலக்கியம் சார்ந்த வரலாற்றாய்வுகள் மற்றும் மொழியாக்கங்கள்.

இதழியல் எழுத்துக்கள்

கா.அப்பாத்துரை ஈ.வெ.ராமசாமி பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவாளர். திராவிடன், ஜஸ்டிஸ், இந்தியா, பாரததேவி, சினிமா உலகம், லிபரேட்டர், விடுதலை, லோகோபகாரி, தாருல் இஸ்லாம், குமரன், தென்றல் உள்ளிட்ட பல இதழ்களில் எழுதி வந்தார். இவ்வெழுத்துக்களில் ஏராளமான வாழ்க்கைவரலாற்று குறிப்புகள், அரசியல் கட்டுரைகள், இலக்கிய ஆய்வுக்குறிப்புகள் அடங்கும். ஜ.நா.வரலாறு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன.

இலக்கிய ஆய்வுகள்

கா.அப்பாத்துரை எழுதிய காற்றும் மழையும் என்னும் நாடகம் சிலம்பு நாடக மன்றத்தால் சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் அண்ணாதுரை தலைமையில் 22-4-56ஆம் நாள் அரங்கேற்றப்பட்டது. தென்மொழி, திருக்குறள் மணி விளக்க உரை (6 தொகுதிகள்)

வரலாற்றாய்வுகள்

கா.அப்பாத்துரை இலக்கியத்திலுள்ள அகச்சான்றுகளைக் கொண்டு பெரும்பாலும் ஊகங்களின் அடிப்படையில் வரலாற்று வரைவுகளை எழுதியவர். அவருடைய வரலாற்று நூல்களை வரலாற்றாசிரியர்கள் முதன்மைநூல்களாகக் கொள்வதில்லை. ’குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு’ என்னும் தலைப்பில் தமிழிலக்கியச் சான்றுகளை கொண்டும் கூடுதலாக தியோசஃபிகல் சொசைட்டியினரின் மறைஞான ஊகங்களை ஆதாரமாகக் கொண்டும் அவர் குமரிக்கண்டம் அல்லது லெமூரியா என்னும் கடலில் மூழ்கிய மாபெரும் நிலப்பகுதியைப் பற்றி உருவகமாக எழுதினார். இலக்கியச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதிய ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ தமிழக வரலாற்றுநிகழ்வுகளை விரித்தெழுதிய நூல் என்னும் வகையில் குறிப்பிடப்படுகிறது.

மொழியாக்கங்கள்

அலெக்சாண்டர், சந்திரகுப்தர், சாணக்கியர் ஆகியோர் பற்றிய மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜப்பானிய நூலான The Tale of Genji இவர் மொழியாக்கத்தில் செஞ்சி கதை என்னும் நூலாக வந்துள்ளது. மலையாளத்தில் இருந்து முதல்நாவல்களான இந்துலேகா, மார்த்தாண்டவர்மா ஆகியவற்றை மொழியாக்கம் செய்திருக்கிறார். இவர் மொழியாக்கத்தில் முதன்மையான ஆக்கம் வி.கனகசபைப் பிள்ளை எழுதிய The Tamils Eighteen Hundred Years Ago என்னும் நூல் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் .என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

நூல்கள்

வரலாற்று ஆய்வுகள்
  • குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு
  • தென்னாட்டுப் போர்க்களங்கள்
  • சரித்திரம் பேசுகிறது
  • மருதூர் மாணிக்கம்
  • தென்னாடு
  • கிருஷ்ணதேவ ராயர்
  • வெற்றித் திருநகர்
  • சென்னை வரலாறு
  • கொங்குத் தமிழக வரலாறு
  • திராவிடப் பண்பு
  • திராவிட நாகரிகம்
  • சங்க காலப் புலவர் வரலாறு
  • அரியநாத முதலியார்
பொதுக்கட்டுரைகள்
  • ஜ.நா.வரலாறு
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
  • ‘டேவிட் லிவிங்ஸ்டன்
  • கலையுலக மன்னன் இரவிவர்மா
  • வின்ஸ்டன் சர்ச்சில்
  • அறிவியல் முனைவர் ஐன்ஸ்டீன்
  • அறிவுலக மேலை பெர்னாட்ஷா
  • கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர்அலி
  • ஆங்கிலப் புலவர் வரலாறு
  • அறிவியலாளர் பெஞ்சமின் ஃபிராங்கிளின்
இலக்கிய ஆய்வுகள்
  • இந்தியாவின் மொழிச்சிக்கல்
  • தென்மொழி
  • திருக்குறள் மணி விளக்க உரை (6 தொகுதிகள்)
மொழியாக்கங்கள்
  • ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் (The Tamils Eighteen Hundred Years Ago)
  • செஞ்சிகதை (The Tale of Genji )
  • இந்துலேகா (ஓ.சந்துமேனன். மலையாளம்)
  • மார்த்தாண்ட வர்மா ( சி.வி.ராமன் பிள்ளைமலையாளம்)
  • அலெக்ஸாண்டர் (ஏ.எஸ்.பி. ஐயர்
  • சந்திரகுப்தர் (ஏ.எஸ்.பி. ஐயர்)
  • சாணக்கியர்(ஏ.எஸ்.பி. ஐயர்)
நாடகம்
  • காற்றும் மழையும் .

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.