under review

சென்னை சிவனடியார் திருக்கூட்டம்

From Tamil Wiki
Revision as of 20:13, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சைவச் சான்றோரான இருக்கம் ஆதிமூல முதலியார், தனது நண்பர்களுடன் இணைந்து, 'சென்னைச் சிவனடியார்த் திருக்கூட்டம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம் 'சைவம்’ என்ற சமய இதழும் தொடங்கப்பட்டது. சைவம் சார்ந்து பல சமூக மற்றும் சமயப் பணிகளை இவ்வமைப்பினர் முன்னெடுத்தனர்.

சென்னைச் சிவனடியார் திருக்கூட்டம்

சென்னைச் சிவனடியார் திருக்கூட்டம்

'சென்னைச் சிவனடியார்த் திருக்கூட்டம்' என்னும் இவ்வமைப்பு, தனது நண்பர்களுடன் இணைந்து சைவச் சான்றோரான இருக்கம் ஆதிமூல முதலியாரால், டிசம்பர் 25, 1898-ல் தோற்றுவிக்கப்பட்டது. சிவனடியார்களை ஒருங்கிணைத்தல், சைவத்தைப் பரப்புதல், சிவாலயங்களில் சைவத்தை ஓங்கச் செய்தல், சிறுவர்களையும் சைவத்தின் பெருமையை உணரச் செய்தல் போன்றவை இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களாகும்.

இவ்வமைப்பினர், மாதம்தோறும் பாடல் பெற்ற தலங்களுக்குச் சென்று வழிபடுவது, சிவாலயங்களில் பிரதோஷ வழிபாட்டைச் செவ்வனே ஆற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

சைவம் இதழ்

சைவம் இதழ்

சைவம் தழைக்கவும், சைவ சமய நெறிகளை மக்கள் அனைவரும் தெளிவுற உணர்ந்துகொள்ளவும் சென்னைச் சிவனடியார் திருக்கூட்டத்தினரின் சார்பாக, ’சைவம்’ என்ற இதழ், 1914-ல், ஆரம்பிக்கப்பட்டது. இருக்கம் ஆதிமூல முதலியார் அதன் ஆசிரியராக இருந்தார். சைவத்தின் உயர்வு, சைவ சமயத்தின் உண்மை, அதனைப் பரப்பச் செய்ய வேண்டியது பற்றிய கட்டுரைகள் வெளியாகின. காரைக்குடி சொக்கலிங்கையா, சிவபாத சுந்தரம் பிள்ளை, சூளை சோமசுந்தர நாயக்கர், தஞ்சை கே.எஸ். சீநிவாசப் பிள்ளை உள்ளிட்ட பலர் இவ்விதழில் கட்டுரைகள் எழுதி வந்தனர். கயப்பாக்கம் சதாசிவச் செட்டியார், ஈக்காடு இராசரத்தின முதலியார், காட்டூர் வேங்கடாசல முதலியார் போன்றோர் சைவப் பணிகளை ஊக்குவித்தனர்.

சைவப் பணிகள்

சிறார்களிடையே சைவப் பணிகளை வளர்க்கும் பொருட்டு, சிவாகமப் பள்ளிக்கூடம் ஒன்று கொண்டித்தோப்பில் ஆரம்பிகப்பட்டது. மாணவர்களுக்கு இங்கு வாழ்க்கைக் கல்வியோடு சைவம் சார்ந்த கல்வியும் அளிக்கப்பட்டது. இத்திருக்கூட்டத்தார் ஆலயங்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். பிப்ரவரி 03, 1901-ல், இவர்கள் ஒன்றிணைந்து திருவொற்றியூர் ஆலயக் குடமுழுக்குப் பணிகளை மேற்கொண்டனர். அதனால் வண்ணாரப் பிள்ளையார் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பு இவர்களுக்குக் கிடைத்தது. அதனைச் சிறப்புறச் செய்தனர். கோயிலுக்கென்று இருந்த காலி நிலத்தில் திருக்கூட்ட வழிபாட்டு மண்டபத்தை நிர்மாணித்தனர். மேல் மண்டபம் தமிழ் வேத பாராயணத்துக்கும் சாஸ்திர, தோத்திர விரிவுரைகளுக்கும் பயன்பட்டது.

சென்னைச் சிவனடியார் திருக்கூட்டம், நிர்வாக சபை.

சென்னையில் சைவ சித்தாந்த மகா சமாஜம் தோற்றுவிக்கப்பட்டபோது, அதன் செயல்பாடுகளுக்கு சென்னைச் சிவனடியார் திருக்கூட்டத்தினர் உறுதுணையாக இருந்தனர். ஆண்டுதோறும் கூட்டத்தினரின் வரவு செலவுக் கணக்குகளை விரிவாக விளக்கி சைவம் இதழில் ஆவணப்படுத்தினர். இன்று சிவனடியார் திருக்கூட்டத்தினர் உலகமெங்கும் பரவியுள்ளனர். சிவத்தொண்டு ஆற்றி வருகின்றனர்.

சென்னைச் சிவனடியார் திருக்கூட்டம் வெளியிட்டுள்ள சில நூல்கள்...

நூல்கள்

சென்னைச் சிவனடியார் திருக்கூட்டத்தினர், சைவம் வளர்க்கும் பொருட்டு சைவ சமயம் சார்ந்த பல்வேறு நூல்களை அச்சிட்டு வெளியிட்டனர்.

  • ஞானப்பிரகாச சம்பாஷணை
  • ஞானானந்த சம்பாஷணை
  • ஆஸ்திக நாஸ்திக சம்வாதம்
  • விவாக விதியும் கலியுக தருமம்
  • சைவ சமயிகளின் கடமை
  • கோபப் பிரசாத உரை
  • சிவநின்மாலிய மான்மியம்
  • திருமுறைப் பெருமை

உசாத்துணை


✅Finalised Page