under review

சுப்ரஜா

From Tamil Wiki
Revision as of 20:13, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
எழுத்தாளர் சுப்ரஜா

சுப்ரஜா (சுப்ரஜா ஸ்ரீதரன்; மயிலை ஸ்ரீதரன்; மயிலை சுவாதி) (செப்டம்பர் 7, 1959 - ஜூன் 6, 2023) ஒரு தமிழக எழுத்தாளர். இதழாளர். பதிப்பாளர், திரைக்கதை வசன ஆசிரியர். பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை, குற்றப் புதினங்களை எழுதினார். சிறார்களுக்காகப் பல நூல்களை எழுதினார். வாதினி பதிப்பகம் என்பதை நிறுவிப் பல நூல்களை வெளியிட்டார்.

பிறப்பு, கல்வி

ஸ்ரீதரன் என்னும் இயற்பெயரை உடைய சுப்ரஜா, செப்டம்பர் 7, 1959 அன்று, மதுரையில், டி.ஏ. ஆராவமுதன் - ஆர்.ஏ. பட்டம்மாள் இணையருக்குப் பிறந்தார். நெய்வேலி கார்ப்பரேஷன் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை படித்தார். மயிலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் மேற்கல்வி பயின்றார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் பயின்று தத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சுப்ரஜா, தனியார் நிறுவனம் ஒன்றில் சில ஆண்டுகள் அலுவலக மேலாளர் ஆகப் பணியாற்றினார். பின் சுதந்திர எழுத்தாளராக, இதழாளராகச் செயல்பட்டார். மனைவி எஸ். ஷீலா. மகன்கள்: மதுசூதனன், நிதீஷ்.

சுப்ரஜா நூல்

இலக்கிய வாழ்க்கை

சுப்ரஜாவின் முதல் சிறுகதை அணில் சிறார் இதழில் வெளியானது. தொடர்ந்து சாவி இதழில், சுப்ரஜாவின் சிறுகதைகள் ஸ்ரீதரன் என்ற அவரது இயற்பெயரில் வெளியாகின. எழுத்தாளர் சாவி இவருக்கு ‘சுப்ரஜா’ என்ற புனை பெயரைச் சூட்டினார். தொடர்ந்து சுப்ரஜா என்ற பெயரில் குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், கல்கண்டு எனப் பல இதழ்களில் சிறுகதைகள், தொடர்கள் எழுதினார். குற்றப் புதினங்களையும், பொது வாசிப்புக்குரிய நாவல்களையும் எழுதினார்.

சுப்ரஜா ‘மயிலை சுவாதி’, ‘மயிலை ஸ்ரீதரன்’ போன்ற புனை பெயர்களில் எழுதினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 50-க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதினார். தினமணி கதிர் இதழில் சுப்ரஜா எழுதிய ’மவுனிகா’ தொடர், தமிழில் எழுதப்பட்ட முதல் வெர்ச்சுவல் ரியாலிட்டி நாவலாகக் கருதப்படுகிறது. அத்தொடரை சுஜாதா பாராட்டி ஊக்குவித்தார். சுப்ரஜாவின் படைப்புகள் பல நூல்களாக வெளிவந்தன.

வாதினி வார இதழ்

இதழியல்

சுப்ரஜா, கல்லூரியில் படித்துக் கொண்டே ‘சாவி’ இதழில் சுதந்திர இதழாளராகப் பணியாற்றினார். குங்குமம், குமுதம் போன்ற இதழ்களுக்காகவும் சுதந்திரப் பத்திரிகையாளராகச் செயல்பட்டார். 'வாதினி’ என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்தினார்.

வாதினி டிஜிடல் தீபாவளி மலர்

பதிப்பகம்

சுப்ரஜா, வாதினி பதிப்பகம் என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். அதன் மூலம் தனது நூல்களையும் பிற எழுத்தாளர்களது நூல்களையும் அச்சிட்டு வெளியிட்டார். ‘டிஜிடல் மலர்’ என்ற தலைப்பில் சிறார்களுக்காகவும், பெரியோர்களுக்காகவும் பல்வேறு சிறப்பு மலர்களை வெளியிட்டார்.

ஊடகம்

சுப்ரஜா, சன் தொலைக்காட்சியில் ஜேடி-ஜெர்ரி இயக்கிய தொடருக்குக் கதை வசனம் எழுதினார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கோகிலா எங்கே போகிறாள்', 'ஜலக்கீரிடை' தொடர்களுக்குக் கதை, வசனம் எழுதினார். பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தோஷம் தொடருக்குக் கதை, வசனம் எழுதினார்.

திரை வாழ்க்கை

சுப்ரஜா, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ என்ற படத்திற்கு வசனம் எழுதினார். பல திரைப்படக் கதை விவாதங்களில் கலந்துகொண்டார்.

விருதுகள்

சுப்ரஜா எழுதி, ஆனந்த விகடனில் வெளியான ‘வீடென்று எதைச் சொல்வார்?’ என்னும் சிறுகதைக்கு, இலக்கியச் சிந்தனையின் மாதாந்திரச் சிறந்த சிறுகதைக்கான பரிசு கிடைத்தது.

மறைவு

சுப்ரஜா, ஜூன் 6, 2023 அன்று உடல் நலக் குறைவால் காலமானார்.

இலக்கிய இடம்

சுப்ரஜா, பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். வித்தியாசமான கதைக் களங்களில், விறுவிறுப்பான நடையில் எழுதினார். அதிகக் குற்றப் புதினங்களை எழுதிய ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் வரிசையில் சுப்ரஜா இடம்பெறுகிறார். இலக்கியப் புரிதலுடன் எழுதிய சுப்ரஜாவின் எழுத்து குறித்து லா.ச. ராமாமிர்தம், “மனித உணர்வுகளை எழுதும்போது ஆன்மாவைக் கட்டிப்போடும் ’சொல் கொடுக்கு’ சுப்ரஜாவின் எழுத்தில் இருப்பது அம்பாளின் வரம்” என்று குறிப்பிட்டார்.

எழுத்தாளர் சுப்ரஜா நூல்கள்

நூல்கள்

நாவல்கள்
  • ஆசையடி ஆசை
  • ஆகாய வெண்ணிலாவே
  • யாதுமாகி நின்றாள்
  • சூரிய நிலா
  • ரகசியமாய்
  • காலம்
  • எங்கே அந்த வெண்ணிலா
  • காக்க காக்க கனகவேல் காக்க!
  • எதிர்பாராதது
  • வெண்ணிற இரவுகள்
  • துளித்துளியாய்
  • விழியோரம்
  • மவுனிகா
  • அவள் கங்கை ஆகாயம்
  • வான் மீதிலே
  • தொடரும் கொலைகள்
  • திருப்புமுனை
  • விபரீத ஆட்டம்
  • நிழல் மனிதன்
  • 60 கிலோ மர்மம்
  • மாயக் காதல்
  • மழை வருமோ மதுவந்தி
  • விபரீத விளையாட்டு
  • கண்மணி அன்போடு
  • தந்திர பூமி
  • ரம்யா லீ நோவாட்ணி
  • பாசிடிவ் பாயிண்ட்
  • கொலை தூரத்தில்
  • ஆயிரத்தோர் இரவுகள்
  • ஜாதிமல்லிப் பூச்சரமே
  • பனியில் ஒரு நிலவு
  • ஏழாம் நம்பர் வீடு
  • வாழ்க்கை ஒரு வானவில்
  • பொட்டு வைத்த வட்ட நிலா
  • ராஜ்யம்
  • புன்னகையில் வென்ற நிலா
  • வெள்ளைப் புறா ஒன்று
  • ஜன்னல் நிலா
  • நிலவொன்று கண்டேன்
  • காதல் மந்திரம்
  • ஹிட் லிஸ்ட்
சிறுகதைத் தொகுப்புகள்
  • ட்விஸ்ட் சிறுகதைகள்
  • பஞ்சதந்திரக் கதைகள்
  • மலாய் தேசத்து நாடோடிக் கதைகள்
  • சுப்ரஜா சிறுகதைகள்
கட்டுரை நூல்கள்
  • கணிப்பொறி அகராதி
  • எளிய தமிழில் A to Z கம்ப்யூட்டர்
  • கம்ப்யூட்டர் கலைச்சொற்கள்
  • படிக்கக்கூடாத ஜோக்ஸ்
  • Computer Vocabulary (ஆங்கில நூல்)
  • ஸௌந்தர்யலஹரி (கவிதை விளக்க உரை நூல்)

உசாத்துணை


✅Finalised Page