under review

திரிசடை

From Tamil Wiki
Revision as of 14:44, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
திரிசடை (நன்றி: கனலி)

திரிசடை (சாந்தா சுவாமிநாதன்) (நவம்பர் 26, 1928 - அக்டோபர் 12, 1996) தமிழ்க்கவிஞர், எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

திரிசடையின் இயற்பெயர் சாந்தா சுவாமிநாதன். எழுத்தாளர் நகுலனின் சகோதரி. திரிசடை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பார்வதி, கிருஷ்ணையர் இணையருக்கு நவம்பர் 26, 1928-ல் பிறந்தார். திரிசடை கேரள கலாசாலையில் ஆங்கில இலக்கியம் முதுகலைப்பட்டம் 1949-ல் பெற்றார்.

தனி வாழ்க்கை

திரிசடை 1957-ல் சுவாமிநாதனை மணந்தார். திருமணமாகி கொழும்பில் குடியேறினார். சுவாமிநாதன் பன்னாட்டு நிதி நிறுவனத்தில் பணிபுரிய அமெரிக்காவின் வாஷிங்டன் சென்றபோது அவருடன் வசித்தார். 1980-1981-ல் புற்று நோய்க்கு ஆளாகி குணமடைந்தார். 1996-ல் மீண்டும் புற்றுநோய் தாக்கியது. மகன்கள் சங்கர்(மருத்துவர்), கோபால்(வழக்கறிஞர்).

இலக்கிய வாழ்க்கை

திரிசடை தன் அமெரிக்க அனுபவங்களை 'பனியில் பட்ட பத்துமரங்கள்’ என்ற நூலாக எழுதினார். திரிசடையின் கவிதைகளை அ. வெண்ணிலா ‘திரிசடை கவிதைகள்’ என்ற தொகுப்பு நூலாக 1999-ல் வெளியிட்டார்.

இலக்கிய இடம்

திரிசடையின் 'பனியில் பட்ட பத்துமரங்கள்’ நூலுக்கு நகுலன் எழுதிய முன்னுரையில் “இக்கவிதைகளைப் பற்றி எழுதுகையில் க.நா.சு. இலக்கியத்திற்கு - நாம் படைக்கும் இலக்கியத்திற்கு - ஒரு இந்திய உருவம் வேண்டும் என்று சொன்னது நினைவில் வருகிறது. இக்கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தவை, அமெரிக்காவின் இயற்கைச் சூழ்நிலை பற்றியவை. இத்துடன் - இது ஒரு சிறந்த அம்சம் என்பது - இக்கவிதைகள் மரபு பிறழாதவை - மரபைப் பல விதமான சூழ்நிலைகளில் நிறுத்தி அதன் விவிதாம்சங்களை ஒரு நுணுக்கத்துடனும் ஆழத்துடனும் வெளிக் காண்பிப்பவை." என குறிப்பிடுகிறார். "திரிசடையின் கவிதைகளில் வீடு, பெண்ணின் உறவுகளுக்கும் பெண் கற்புக்குமான மரபுக் கதையாடல்களுக்கான இடமாக உள்ளது. ஆனால், புறவெளியோ தனிமனிதச் சுயத்தைக் கலைக்கும் இடமாக, அதற்கு மேம்பட்ட இடமாகக் கட்டப்படுகிறது. இத்தகைய புறவெளி இந்து சமயப் பண்பாட்டுக் குறியீடுகளோடு, அல்லது அபூர்வமாக பிற சமய மரபுகளோடு விவரிக்கப்பட்டாலும், தேசிய எல்லைகளுக்கு அப்பாலான ஒன்றாகவும், மனிதர்களைத் பாண்டிய பல்லுயிர்களுக்குமான பொதுவெளியாகவும் இருக்கிறது. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வது முக்கியம்." என பெருந்தேவி மதிப்பிடுகிறார்.

மறைவு

திரிசடை அக்டோபர் 12, 1996-ல் புற்றுநோய் தாக்குதலின் காரணமாக காலமானார்.

நூல்கள்

  • பனியில் பட்ட பத்துமரங்கள் (1978)
  • திரிசடை கவிதைகள் (1999)

இணைப்புகள்


✅Finalised Page