பி.கே.பாலகிருஷ்ணன்

From Tamil Wiki
Revision as of 00:13, 23 June 2023 by Jeyamohan (talk | contribs)
பி.கே.பாலகிருஷ்ணன்
பி.கே.பாலகிருஷ்ணன்

பி.கே.பாலகிருஷ்ணன் (2 மார்ச் 1925- 3 ஏப்ரல் 1991) பணிக்கச்சேரி கேசவன் பாலகிருஷ்ணன். மலையாள நாவலாசிரியர், இதழாளர், சுதந்திரப்போராளி, இலக்கிய விமர்சகர், வரலாற்றாசிரியர்.

பிறப்பு, கல்வி

கேரளத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் வைப்பின் தீவில் எடவனக்காடு என்ற ஊரில் 2 மார்ச் 1925ல் கேசவன் - மணி அம்மை இணையருக்கு பிறந்தார். எடவனக்காடு தொடக்கப்பள்ளியில் பயின்றார். செறாயி ராமவர்மா யூனியன் உயர்நிலைப் பள்ளியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். முழு கல்வி உதவித்தொகையுடன் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் பட்டப்படிப்புக்கு சேர்ந்த பாலகிருஷ்ணன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டு சிறைசென்றார். 1944ல் சிறை மீண்டார். மீண்டும் கல்வியை தொடங்கிய பி.கே.பாலகிருஷ்ணன் கொச்சிமண்டல பிரஜா சோஷலிஸ்டு கட்சியில் முழுநேர ஊழியரானார்.

அரசியல்

பி.கே.பாலகிருஷ்ணன் சுதந்திரப்போராட்ட வீரர். 1942ல் தன் 16 வயதில் காங்கிரஸ் ஊழியராக வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றார். அங்கே அவருடன் கம்யூனிஸ்டு தலைவர் சி.அச்சுதமேனனும் சிறையில் இருந்தார். பின்னர் சோஷலிச கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு பிரஜா சோஷலிஸ்டு கட்சியிலும் அதில் இருந்து பிரிந்த கொச்சி ராஜ்ய பிரஜா சோஷலிஸ்டு கட்சியிலும் முழுநேர ஊழியரான பி.கே.பாலகிருஷ்ணன் அதன் தலைவரான மத்தாயி மாத்தூரான் தலைமையில் அதன் இதழ்களில் பணியாற்றினார். வைக்கம் முகமது பஷீர், எம்.கே.ஸானு ஆகியோர் அன்று அக்கட்சியில் அவருடன் பணியாற்றினர்.

இதழியல்

பிரஜா சோஷலிஸ்டுக் கட்சியின் ஆஸாத் என்னும் இதழில் உதவியாசிரியராகப் பணியாற்றிய பி.கே.பாலகிருஷ்ணன் தினப்பிரபா என்னும் நாளிதழின் ஆசிரியராக ஆனார். கோழிக்கோடு நகரத்தில் ஓர் ஆலயத்தில் இருந்த சாதி ஆசாரங்களைப் பற்றி ஆற்றிய உரை சர்ச்சைக்கிடமானபோது அந்த பணியை துறந்தார். அதன்பின் கேரள பூஷ்ணம், கேரள கௌமுதி ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். இறுதிக்காலத்தில் மாத்யமம் நாளிதழின் ஆசிரியராக இருந்தார்

இலக்கிய வாழ்க்கை

வாழ்க்கை வரலாறு

பி.கே.பாலகிருஷ்ணனின் முதல்நூல் 1954ல் வெளிவந்த ‘நாராயணகுரு தொகைநூல்’ நாராயணகுரு பற்றிய ஆவணங்கள், வெவ்வேறு ஆளுமைகளின் கட்டுரைகள், வாழ்க்கைவரலாற்று குறிப்புகள் ஆகியவை அடங்கியது.

பி.கே.பாலகிருஷ்ணன் தன் இலக்கிய நண்பர்களான சி.ஜே.தாமஸ், ஜோசப் முண்டசேரி, குட்டிக்கிருஷ்ண மாரார் ஆகியோரைப்பற்றி எழுதிய நினைவுச்சித்தரிப்புகளான ‘மாயாத்த சந்த்யகள்’ மலையாளத்தில் முக்கியமான இலக்கியப்படைப்பாக கருதப்படுகிறது. சி.ஜே.தாமஸின் சாயலில் சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலின் ஆக்கத்தில் இந்நூலுக்கு பங்களிப்புண்டு.

இலக்கியவிமர்சனம்

பி.கே.பாலகிருஷ்ணன் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளாக எழுதியதில்லை. முழுமையான நூல்களாகவே விமர்சனங்களை எழுதி வெளியிட்ட்டார். மலையாளத்தின் முதல் நாவலாசிரியரான ஓ.சந்துமேனன் பற்றிய சந்துமேனன் ஒரு படனம் அவருடைய முதல் இலக்கிய விமர்சன் நூல். அது 1957ல் வெளிவந்தது.

மலையாளத்தின் முதன்மைக் கவிஞரான குமாரன் ஆசானைப் பற்றிய ‘காவியகலை குமாரனாசானிலூடே’ ஐரோப்பிய நாவலாசிரியர்களைப் பற்றிய ‘நாவல் ஸித்தியும் சாதனையும்’ போன்றவை புகழ்பெற்ற இலக்கிய விமர்சனநூல்கள்

நாவல்கள்

பி.கே.பாலகிருஷ்ணனின் முதல் நாவல் 1963ல் வெளிவந்த புளூட்டோ பிரியப்பெட்ட புளூட்டோ. அது ஒரு நாயைப் பற்றிய நாவல். நீண்ட இடைவேளைக்குப்பின் மகாபாரதத்தின் கர்ணனை கதைநாயகனாக்கி 1973ல் அவர் எழுதிய நாவல் இனி ஞான் உறங்ஙட்டே (தமிழில் இனி நான் உறங்கட்டும்) அந்நாவல் மலையாளத்தின் இலக்கியசாதனையாகக் கருதப்படுகிறது.

அரசியல் கட்டுரைகள்

பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய அரசியல் கட்டுரைகள் நான்கு தொகுதிகளாக வெளிவந்தன. இரு தொகுதிகள் அவருடைய மறைவுக்குப்பின்னர் அவர் மகள் பி.கே.ஜெயலட்சுமியால் வெளியிடப்பட்டன.

வரலாற்றாய்வு

பி.கே.பாலகிருஷ்ணன் இரண்டு வரலாற்றாய்வு நூல்களை எழுதினார். 1959ல் வெளிவந்த திப்பு சுல்தான் என்னும் நூலில் ஆவணங்கள் வழியாக திப்பு சுல்தானின் ஆளுமையையும், ஆட்சியையும் விரிவாக பதிவு செய்தார். கேரள வரலாற்றாசிரியர்களால் மதவெறியர் என்றும் ஆக்ரமிப்பாளர் என்றும் சித்தரிக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் பற்றிய ஒரு மறுசித்திரம் அந்நூலில் அளிக்கப்பட்டது

கேரள வரலாற்றை ஐரோப்பிய ஆவணங்களின் அடிப்படையில் ஆராயும் வரலாற்றுநூல் ஜாதி வியவஸ்தையும் கேரள சரித்ரவும். தொல்லியல் தடையங்கள், தொன்மங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கேரள சரித்திர உருவகத்தை விரிவாக மறுக்கும் பி.கே.பாலகிருஷ்ணன் கேரள சமூக அமைப்பு, உற்பத்தி முறை, சாலைகள் மற்றும் சந்தைகள் பற்றிய செய்திகளின் அடிப்படையில் ஒரு மக்கள் வரலாற்றை எழுதினார்.

விருதுகள்

  • 1974 கேரள சாகித்ய அக்காதமி விருது (இனி ஞான் உறங்ஙட்டே)
  • 1978 வயலார் விருது (இனி ஞான் உறங்ஙட்டே)
  • கேரள வரலாற்றுக் கழக விருது (சாதி வியஸ்தயும் கேரள சரித்ரவும்)
  • கேஸரி பாலகிருஷ்ணபிள்ளை விருது

மறைவு

பி.கே.பாலகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் 3 ஏப்ரல் 1991 ல் மறைந்தார்

இலக்கிய இடம்

பி.கே.பாலகிருஷ்ணன் தொடர் விவாதங்களை உருவாக்கிய சிந்தனையாளராகவும் இதழாளராகவும் திகழ்ந்தார். இலக்கியவிமர்சனம், வரலாற்றாய்வு ஆகியவற்றில் தனித்துவம்கொண்ட புதிய பார்வைகளை உருவாக்கிய முன்னோடியாக கருதப்படுகிறார். அவருடைய இனி நான் உறங்கட்டும் நாவல் புகழ்பெற்ற படைப்பு.

நூல்கள்

நாவல்
  • ப்ளூட்டோ பிரியப்பெட்ட ப்ளூட்டோ 1963
  • இனி ஞான் உறங்ஙட்டே 1973
இலக்கிய விமர்சனம்
  • சந்துமேனன் ஒரு படனம் 1957
  • நோவல் ஸித்தியும் சாதனயும் 1965
  • காவ்ய கல குமாரனாசானிலூடே 1970
  • எழுத்தச்சனின் கலை 1982
கட்டுரைகள்
  • பி.கே.பாலகிருஷ்ணன் கட்டுரைகள் 2004
  • கேரளீயதையும் மற்றும் 2004
  • வேறிட்ட சிந்தனைகள் 2011
  • ஒரு வீர புளகத்தின்றே கத 2014
வாழ்க்கை வரலாறு
  • நாராயணகுரு தொகைநூல் 1954
  • மாயாத்த சந்த்யகள்
வரலாற்றாய்வு
  • திப்புசுல்தான் 1959
  • ஜாதி வியவஸ்தயும் கேரள சரித்ரவும் 1983

உசாத்துணை