கழறிற்றறிவார் நாயனார்

From Tamil Wiki
Revision as of 23:36, 1 April 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Images Added: Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கழறிற்றறிவார் நாயனார்

கழறிற்றறிவார் நாயனார் , சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சேர நாட்டின், கொடுங்கோளூரில் பிறந்தவர் மாக்கோதையார் என்னும் இயற்பெயர் கொண்ட கழறிற்றறிவார் நாயனார். அரசர் குலத்தில் பிறந்த இவர் அரசை விரும்பாது சிவ பக்தராகத் திகழ்ந்தார். சிவனடியார்களுக்குச் சிவத் தொண்டு புரிந்து வாழ்ந்து வந்தார். திருவஞ்சைக்களத்தில் எழுந்தருளியிருக்கும் அஞ்சைக் களத்தீஸ்வரரை தினமும் வணங்கி வழிபட்டார்.

சேரமானின் திருக்கயிலாயப் பயணம்

சிவனின் ஆடல்

கொடுங்கோளூர் அரசன் செங்கோற் பொறையன், ஆட்சி துறந்து தவம் புரிய காட்டிற்குச் சென்றான். அமைச்சர்களும் அறிஞர்களும் மாக்கோதையாரிடம் வந்து அரசை ஏற்று நடத்துமாறு கூறினர். அரசாட்சியை விரும்பாத மாக்கோதையார், திருவஞ்சைக்களம் ஆலயம் சென்று இறைவனிடம் முறையிட்டார். இறைவனும் அவருக்கு அருள் செய்து, விலங்குகள் பேசும் மொழியை அறிந்து கொள்ளும் ஆற்றலைத் தந்து அரசாட்சி புரிய ஆணையிட்டான். அதுமுதல் சேர நாட்டிற்கு மன்னனாக முடிசூட்டிக் கொண்டு, சேரமான் பெருமாள் என்னும் பெயரில் அவர் ஆட்சி புரிந்தார். விலங்குகள் பேசும் மொழியை உணரும் ஆற்றல் பெற்றதால் அவர் ‘கழறிற்று அறிவார்’ என்று அழைக்கப்பட்டார்.

ஒரு நாள் சேரமான் பெருமாள் நகர்வலம் வந்தபோது, எதிரே சலவைத் தொழிலாளி ஒருவர் வந்தார். அவர், உவர் மண்ணைத் தன் தலையில் சுமந்தவாறு வந்துகொண்டிருந்தார். அது மழையால் அவர் உடல் மேல் வழிந்து, காய்ந்து, திருநீறு பூசியிருக்கும் கோலத்தில் காட்சி தந்தது. அவரைக் கண்ட சேரமான், உடல் முழுதும் நீறு பூசிய சிவனடியார் என்றேண்ணி, உடன் யானையிலிருந்து கீழிறங்கி அவர் பாதம் பணிந்து வணங்கினார்.

உடனே பதறி விலகிய அந்த வண்ணார், ‘அடியேன் அடி வண்ணான்’ என்று சொன்னார். சேரமானும்  ‘அடியேன் அடிச்சேரன். நீங்கள் திருநீற்றுக் கோலத்தை எனக்கு நினைப்பீத்தீர்கள். வருந்தாது செல்லுங்கள்’ என்று சொன்னார். மக்கள் மனம் மகிழும் வகையில் நல்லாட்சி புரிந்த சேரமான் பெருமாள் பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை ஆகிய நூல்களை இயற்றினார். தினந்தோறும் சிவனுக்குப் பூஜை செய்து, பூஜையின் முடிவின் சிவபெருமானின் கால் சிலம்பொலியைக் கேட்டு மகிழ்ந்தார்.

சேரமான் பெருமாள், சிவபெருமானின் அருளால் சுந்தரருக்கு உற்ற தோழர் ஆனார். ஒருநாள் சேரமான் பெருமாள் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில், சுந்தரர் திருவஞ்சைக்களத் திருக்கோயிலையடைந்து, சிவபெருமானை அடையும் தனது விருப்பத்தை எடுத்துக் காட்டும் வகையில் ‘தலைக்குத் தலைமாலை’ என்ற திருப்பதிகத்தைப் பாடினார். அது கேட்டு மகிழ்ந்த சிவபெருமான், சுந்தரரை அழைத்துவருமாறு திருக்கயிலையில் இருந்து வெள்ளையானையுடன் தேவர்களை அனுப்பி வைத்தார். சுந்தரரும் அதன்படி வெள்ளை யானையில் ஏறி கயிலைக்குப் புறப்பட்டார்.

இதனை தமது ஆற்றலால் உணர்ந்து கொண்ட சேரமான் பெருமாள் நாயனார், தமது குதிரையின் மேல் ஏறி திருவஞ்சைக்களத்தை அடைந்தார். சுந்தரர் யானையின் மீதேறி விண்ணில் செல்வதைக் கண்டவர், தமது குதிரையின் காதில் ஐந்தெழுத்தை ஓதினார். உடன் மேலெழுந்த குதிரை வானில் சென்று, யானையை வலம் வந்து, அதற்கு முன்னே சென்றது.

சேரமான் திருக்கயிலையை அடைந்து ‘திருக்கயிலாய ஞான உலா’ பாடி சிவபெருமானைத் துதித்தார். இறைவன் அதைக் கேட்டு மகிழ்ந்து ‘நீ சிவகணத்தோடு ஒருவனாகி இங்கே இருப்பாயாக!’ என்று அருள் பாலித்தார். சேரமான் பெருமாள் நாயனார் eன்னும் கழறிற்றறிவார் நாயனார்  சிவகணங்களுள் ஒருவரானார்.

கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:


சேரமான், சலவைத் தொழிலாளியை சிவனடியாராக நினைத்து வணங்குதல்:

தம்பிரானார் கோயில் வலம் கொண்டு திருமுன் தாழ்ந்து எழுந்து

கும்ப யானை மேல் கொண்டு கொற்றக் குடையும் சாமரையும்

நம்பும் உரிமை யவர் தாங்க நலம் கொள் நகர் சூழ் வலம் கொள்வார்

மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தஓர் வண்ணான் முன்னே வரக் கண்டார்.


மழையில் கரைந்து அங்கு உவர் ஊறி மேனி வெளுத்த வடிவினால்

'உழையில் பொலிந்த திருக்கரத்தார் அடியார் வேடம்' என்று உணர்ந்தே

இழையில் சிறந்த ஓடை நுதல் யானைக் கழுத்தின் நின்று இழிந்து

விழைவில் பெருகும் காதலினால் விரைந்து சென்று கை தொழுதார்.


சேரமான் பெருமாள், கயிலாயத்தில், திருக்கயிலாய ஞான உலா பாடி, கணங்களுக்குத் தலைவரானது:

சேரர் காவலர் பரிவுடன் கேட்பித்த திருஉலாப் புறம் கொண்டு

நாரி பாகரும் நலம் மிகு திரு அருள் நயப்புடன் அருள் செய்வார்

'ஊரன் ஆகிய ஆலால சுந்தரன் உடன் அமர்ந்து இருவீரும்

சார நம்கண நாதர் ஆம் தலைமையில் தங்கும்' என்று அருள் செய்தார்.


அன்ன தன்மையில் இருவரும் பணிந்து எழுந்து அருள் தலை மேல் கொண்டு

மன்னும் வன்தொண்டர் ஆலால சுந்தரர் ஆகித் தாம் வழுவாத

முன்னை நல்வினைத் தொழில் தலை நின்றனர் முதல் சேரர் பெருமானும்

நன்மை சேர் கண நாதராய் அவர் செயும் நயப்பு உறு தொழில் பூண்டார்.

குருபூஜை

சேரமான் பெருமாள் நாயனார் என்னும் கழறிற்றறிவார் நாயனாரின் குருபூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும்,  ஆடி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை