விழி பா. இதயவேந்தன்

From Tamil Wiki
Revision as of 23:50, 28 March 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; ImagesAdded; Interlink Created; External Link Created;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
விழி பா. இதயவேந்தன்
இதயவேந்தன்

பா. அண்ணாதுரய் (பா. இதயவேந்தன்; விழி பா. இதயவேந்தன்; ஜூன் 16-1962-நவம்பர் 07, 2022) தமிழக எழுத்தாளர், கவிஞர். தலித் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளிகளுள் ஒருவர். பல்வேறு சமூக, இலக்கிய இயக்கங்களுடன் தொடர்புகொண்டு செயல்பட்டார். வருவாய் ஆய்வாளராக பணியாற்றினார். தமிழக அரசின் குறள்பீட விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

அண்ணாதுரை என்னும் இயற்பெயரை உடைய விழி பா. இதயவேந்தன், ஜூன் 16-1962 அன்று, விழுப்புரத்தில், கோ. பாவாடை-பா. பாக்கியம் இணையருக்குப் பிறந்தார். வழுதரெட்டிக் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் ஆரம்பக்கல்வி தொடங்கி மேல்நிலைக் கல்வி வரை படித்தார். விழுப்புரம் அரசுக் கலைக் கல்லூரியில் பயின்று வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், அஞ்சல் வழிக் கல்வி மூலம் முதுநிலை வணிகவியல் பட்டம் பெற்றார். ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். சட்டம் பயின்று வழக்குரைஞர் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக அஞ்சல் வழிக் கல்வி மூலம் முதுகலை சமூகவியல் பட்டமும், வணிகவியல் சார்ந்த பட்டயமும் பெற்றார்.

தனி வாழ்க்கை

இதயவேந்தன், 1989 முதல் 2004 வரை விழுப்புரம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றினார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். மனைவி அ. விசயலட்சுமி. மகள்கள்: அஜிதாபாரதி, சாருமதி. மகன்: சூரியதீபன்.

இதயவேந்தன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

பேராசிரியர் பழமலயின் மாணவரான இதயவேந்தன், அவரது எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். பா. செயப்பிரகாசத்தின் படைப்புகள் எழுத்தாளராகும் ஆர்வத்தைத் தந்தன. பழமலயின் ‘நெம்புகோல்’ கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கத்தில் கலந்துகொண்டு கவிதைகள் வாசித்தார். ‘பழமலய்’ என்ற பெயரின் தாக்கத்தால்  ‘அண்ணாதுரய்’  என தனது பெயரை மாற்றிக் கொண்டார். பேராசிரியர் கல்யாணி இதயவேந்தனை எழுத ஊக்குவித்தார். ‘விழி பா. இதயவேந்தன்’ என்ற புனை பெயரைச் சூட்டிக் கொண்டார். இதயவேந்தனின் ‘சங்கடம்’ என்ற முதல் சிறுகதை ஜுன், 1984-ல் கணையாழியில் வெளிவந்தது. தொடர்ந்து ‘ஒரு விதவைப் பிரசவம்' என்னும் தலைப்பிலான இரண்டாவது சிறுகதை, மே 1985 கணையாழி இதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதினார். இவரது படைப்புகள் கவிதாசரண், வல்லினம்,  தலித்முரசு, புதிய கோடாங்கி, புதிய பார்வை, கணையாழி, செம்மலர், தாமரை, இந்தியாடுடே, தினகரன், தினமணிசுடர், தினமணி கதிர் போன்ற இதழ்களிலும் திண்ணை, மின்னம்பலம், கீற்று போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகின.

இதயவேந்தனின் முதல் சிறுகதைத் தொகுதி, ‘நந்தனார் தெரு’ 1991-ல் வெளிவந்தது. தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகள், குறும் புதினங்கள், கவிதைகள், வீதி நாடகங்கள் என்று இலக்கியத்தின் பல களங்களில் செயல்பட்டார். இவரது ‘வதைபடும் வாழ்வு’ என்னும் சிறுகதைத் தொகுப்பு நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. மேலும் சில படைப்புகள் ஆங்கிலம், மலையாளம் போன்ற மொழிகளில் பெயர்க்கப்பட்டன. இவரது படைப்புகளை ஆராய்ந்து மாணவர்கள் சிலர் எம்.பில், பிஹெச்.டி பட்டம் பெற்றனர். இவரது ‘உயிரிழை’ சிறுகதைத் தொகுப்பு பெங்களுர் பல்கலைக் கழகத்திலும், சென்னை பெண்கள் கிறித்தவக் கல்லூரியிலும் பாடநூலாக வைக்கப்பட்டது.

இதழியல்

  • இதயவேந்தன் ‘நெம்புகோல்' என்னும் கையெழுத்து இதழைத் தொடங்கி நடத்தினார்.
  • ‘மன ஓசை’ என்ற மாணவர் இதழுக்கு ஆசிரியராக இருந்தார்.
  • ‘தோழமை’ என்னும் கலை இலக்கிய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராகச் செயல்பட்டார்.
  • 'தலித் முரசு' இதழில் இணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

நாடகம்

இதயவேந்தன், பேராசிரியர் மு. இராமசாமியிடம் வீதி நாடகப் பயிற்சி பெற்று, பல நாடகங்களில் நடித்தார்.

அமைப்புச் செயல்பாடுகள்

இதயவேந்தன், நெம்புகோல் மக்கள் கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார்.

பேராசிரியர் கல்யாணி அவர்களுடன் இணைந்து, பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தைத் தொடங்கி நடத்தினார்.

கலை, இலக்கியப் பண்பாட்டிற்காக 1988-ல், ‘ஞாயிறு’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தினார்.

1994 முதல் 1997 வரை ‘வானவில்’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தினார்.

2000-த்தில் ‘தென்பெண்ணை கலை இலக்கியக் கூடல்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்து அதன் மூலம் பல இலக்கிய முயற்சிகளை முன்னெடுத்தார்.

எழுத்தாளர் அன்பாதவனுடன் இணைந்து நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்தார்.

விருதுகள்

  • தந்தை டானியல் ‘தலித் இலக்கிய விருது’
  • பாரதிய தலித் சாகித்ய அகாடமியின் தலித் இலக்கியத்திற்கான தேசிய விருது.
  • டாக்டர் அம்பேத்கர் ஃபெலோஷிப் விருது.
  • தமிழக அரசின் குறள் பீட விருது.

மற்றும் பல விருதுகள்.

மறைவு

விழி பா. இதயவேந்தன், நவம்பர் 07, 2022 அன்று, சிறுநீரகப் பாதிப்பால் காலமானார்.

இலக்கிய இடம்

விழி பா. இதயவேந்தன், தலித் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளைத் தன் படைப்புகளில் எழுதினார். ஒடுக்கப்பட்ட, பாதிக்கபட்ட மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி அடித்தட்டு மக்கள் வாழ்க்கையின் அவலங்களைக் கதையின் கருப்பொருளாக வைத்து எழுதினார். தலித் இலக்கியம், காத்திரமான மொழியோடும், பார்வையோடும், அதற்கென்ற தனித்துவமான அழகியலோடும் உருவாகப் பங்களித்த முன்னோடிப் படைப்பாளியாக விழி பா. இதயவேந்தன் மதிப்பிடப்படுகிறார்.

விழி பா. இதயவேந்தன் நூல்கள்

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • கனவுகள் விரியும்
  • எவரும் அறியாத நாம்
  • முரண் தடை
  • இனி வரும் காலம்
சிறுகதைத் தொகுப்புகள்
  • நந்தனார் தெரு
  • வதைபடும் வாழ்வு
  • தாய்மண்
  • சிநேகிதன்
  • உயிரிழை
  • அம்மாவின் நிழல்
  • இருள் தீ
  • மலரினும் மெல்லிது
  • சகடை
  • புதைந்து எழும் சுவடுகள்
  • அப்பாவின் புகைப்படம்
குறுநாவல்கள்
  • நிலைமை
  • ஏஞ்சலின் மூன்று நண்பர்கள்
  • சுமை
  • தனம் வீட்டுக் கல்யாணம்
  • என்று வருவான் அந்த ராஜகுமாரன்
  • வாழ்வு
கட்டுரை நூல்கள்
  • தலித் அழகியல்
  • தலித் கலை, இலக்கியம்
  • தலித் இலக்கிய அரசியல்

உசாத்துணை