சரோஜா பாண்டியன்

From Tamil Wiki
Revision as of 19:57, 26 March 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Images Added; Interlink Created; External Link Created;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எழுத்தாளர் சரோஜா பாண்டியன்

சரோஜா பாண்டியன் (அக்டோபர் 6, 1932 - டிசம்பர் 9, 2009) தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இந்தி மற்றும் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதினார். இந்தியிலிருந்து சில சிறுகதைகளை மொழிபெயர்த்தார்.

பிறப்பு, கல்வி

சரோஜா பாண்டியன், அக்டோபர் 6, 1932 அன்று, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்போது என்னும் கிராமத்தில், துரைராஜ் பாண்டியன் - சீனியம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். ஹிந்தியில் நான்கு அடிப்படைத் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற்றார். திருமணத்திற்குப் பின் இந்தியில் மேலும் இரு தேர்வுகள் எழுதித் தேர்ச்சி பெற்றார். சென்னையில் உள்ள தென்னிந்திய ஹிந்தி பிரச்சார் சபையில் ‘பிரச்சார்’ பயிற்சி பெற்றார். புதுமுக வகுப்புப் பயின்றார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்தியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். பணி ஓய்வுக்குப் பின் காந்திய சிந்தனையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.  மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் காந்திய சிந்தனையில் ஆய்வியல்நிறைஞர் பட்டம் பெற்றார். தனது 72-ம் வயதில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், ‘உலகத் திருமறைகள் காட்டும் குடும்ப வாழ்க்கை’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சரோஜா பாண்டியன், 1947-ல், விருதுநகர் பத்திரப் பதிவுத் துறையில் சில மாதங்கள் பணியாற்றினார். விருதுநகரில் உள்ள தங்கம்மாள் பெரியசாமி நாடார் அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்தி மொழி ஆசிரியராகப் பணிபுரிந்தார். விருதுநகர் ஷத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாண்டுகள் இந்தி ஆசிரியராகப் பணியாற்றினார். இடைநிலை ஆசிரியராகப் பத்தாண்டுகளும் தமிழாசிரியராகப் பத்தாண்டுகளும் பணியாற்றி ஓய்வு பெற்றார். கணவர்: பி. சங்கரலிங்கம். பிள்ளைகள் முனைவர் ச. கண்மணி; மருத்துவர் ச. புகழேந்தி பாண்டியன்; பேராசிரியர் ச. வளர்மதி.

முனைவர் எழுத்தாளர் சரோஜா பாண்டியன் நூல்

இலக்கிய வாழ்க்கை

சரோஜா பாண்டியன், இளம் வயதிலேயே திருக்குறள் விளக்கக் கதைகள் சிலவற்றை எழுதினார். அவை விருதுநகரில் இருந்து வெளிவந்த ‘மகிழ்ச்சி’ இதழில் வெளியாகின. திருமணத்திற்குப் பின் பணி மற்றும் குடும்பச் சூழல்களால் அதிகம் எழுத்துப் பணியில் ஈடுபடவில்லை. ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் மீண்டும் எழுதினார்.

விருதுகள்

சரோஜா பாண்டியன்  எழுதிய ‘ஒரு தொடர்கதை முற்றுப் பெறுகிறது’ எனும் நூல், 1997-ல், தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான மூன்றாம் பரிசு பெற்றது.

ஊடகம்

சரோஜா பாண்டியனின், ‘நான் சீதை இல்லை’ சிறுகதையை, இயக்குநர் பாலுமகேந்திரா, கதை நேரம் தொடருக்காகக் குறும்படமாகத் தயாரித்தார். இத்தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

மறைவு

சரோஜா பாண்டியன், டிசம்பர் 9, 2009 அன்று காலமானார்.

நினைவு

சரோஜா பாண்டியனின் நினைவாக, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்கட்டளையின் வழியாக ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று நிகழ்த்தப்படும் நிகழ்வில் வெற்றிபெறுவோர்க்கு, சரோஜா பாண்டியனின் நூல்கள் பரிசாக வழங்கப்படுகின்றன.

இலக்கிய இடம்

சரோஜா பாண்டியன், பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதினார். தான் கண்ட, கேட்ட அனுபவங்களைப் புனைவாக்கினார். பெண்ணியப் பிரச்சனைகளைப் பேசும் படைப்புகளையும், சமுதாயப் பிரச்சனைகளுக்கான காரணங்களையும் தீர்வுகளையும் முன்வைக்கும் படைப்புகளையும் எழுதினார். இந்தியப் பண்பாட்டை யும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் படைப்புகளை எழுதினார்.

சரோஜா பாண்டியன் தனது ‘உலகத் திருமறைகள் காட்டும் குடும்ப வாழ்க்கை' என்னும் நூலில், இந்து சமயம், சமண சமயம், யூத சமயம் தொடங்கி பல்வேறு சமயங்களின் தோற்றம் வளர்ச்சி குறித்தும், அச்சமயங்கள் கூறும் குடும்ப வாழ்க்கை முறை, வாழ்வியல் கொள்கைகள் குறித்தும் பல்வேறு தலைப்புகளில் விரிவாக ஆராய்ந்தார்.

சரோஜா பாண்டியன் சிறுகதைத் தொகுப்பு

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • திருக்குறள் விளக்கக் கதைகள்
  • ஒரு தொடர்கதை முற்றுப் பெறுகிறது
  • டிசம்பர் 6
  • நான் சீதை இல்லை
  • காயம் பூசிக் கொண்ட மனங்கள்
நாவல்கள்
  • ஊரான் பிள்ளை (குறுநாவல்)
  • அழியாத கோபுரங்கள்
  • துணைதேடும் சுமை தாங்கிகள்
  • புரையோடிய பொன்
  • தொடரும் மகாபாரதம்
மொழிபெயர்ப்பு
  • பல்சுவைக் கதைகள் (இந்தியிலிருந்து தமிழுக்கு)
ஆய்வு நூல்
  • உலகத் திருமறைகள் காட்டும் குடும்ப வாழ்க்கை
  • புறநானூற்றில் அகிம்சை வளங்களும் வன்முறை வழிகளும்
  • திருமறைகளும், பொதுமறையும் வலியுறுத்தும் அறநெறிகள்

உசாத்துணை