being created

எம். எல். வசந்தகுமாரி

From Tamil Wiki
Revision as of 00:02, 23 March 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Images Added;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எம். எல். வசந்தகுமாரி

எம். எல். வசந்தகுமாரி (மதராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி; எம்.எல்.வி; ஜூலை 3, 1928-அக்டோபர் 31, 1990) கர்நாடக இசைக் கலைஞர். பல மொழிகளில் கீர்த்தனைகள், பாடல்களைப் பாடினார். புதிய பல வர்ண மெட்டுக்களை அமைத்தார். இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றார். தந்தையின் பெயரையே முதல் எழுத்தாகப் பயன்படுத்தி வந்த காலத்தில் அதற்கு, மாறாகத் தன் தாயின் பெயரை முதலெழுத்தாக வைத்துக் கொண்டார்.

எம்.எல். வி. இள வயதுப் படம் (நன்றி : The Hindu)

பிறப்பு, கல்வி

எம். எல். வசந்தகுமாரி, ஜூலை 3, 1928 அன்று, இசைக்கலைஞர்கள் கூத்தனுர் அய்யாசாமி-லலிதாங்கி இணையருக்குப் பிறந்தார். சென்னையில் பள்ளிக் கல்வி கற்றார்.  

தனி வாழ்க்கை

எம். எல். வசந்தகுமாரி, இசைக் கலைஞராக வாழ்ந்தார். விகடம் கிருஷ்ணமூர்த்தியை மணம் செய்துகொண்டார். மகன்: சங்கரராமன். மகள்: ஸ்ரீவித்யா, திரைப்பட நடிகை.

இசை வாழ்க்கை

எம். எல். வசந்தகுமாரி பெற்றோரிடம் இசை கற்றார். தாயின் கச்சேரிகளுக்குப் பின் பாட்டு பாடினார். இசை மேதை ஜி.என். பாலசுப்ரமணியத்திடம் இசை கற்றார். 1940-ஆம் ஆண்டில் சிம்லாவில் தன் தாயாருடன் சேர்ந்து கச்சேரி செய்தார். பெங்களூரில் நடந்த ஒரு கச்சேரியில் தனியாகக் கச்சேரி செய்தார். வசந்தகுமாரி பாடிய இசைத்தட்டு ஒன்றும் வெளியானது. ஜி.என்.பி.யின் சிஷ்யையாக இருந்தாலும் தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டு கச்சேரிகள் செய்தார். அழகான குரல், தெளிவான உச்சரிப்பு, பாவம், சங்கதிகள் என்று கூட்டமைந்த அவரது கச்சேரிகளுக்கு வரவேற்புக் கிடைத்தது.

அபாரமான கற்பனை வளம், ஒருமுறை பாடிய பாட்டை மறுமுறை பாடும்போது புதிது புதிதாகச் சங்கதிகள் சேர்த்துப் பாடுவது, தேவைப்பட்டால் மட்டுமே பிருகாக்களைப் பயன்படுத்துவது போன்ற நுட்பங்களை எம்.எல். வசந்தகுமாரி கையாண்டார். சபைகளில் அதிகம் பாடப்படாத ராகங்களின் மீது கவனம் செலுத்தினார். ஆலாபனையின் போது விஸ்தாரமான கல்பனா ஸ்வரங்கள் மூலம் அந்த ராகத்தையும், அதற்கும் பிற ராகங்களுக்கும் உள்ள வேறுபாட்டையும் கேட்போருக்குப் புரிய வைப்பதைக் கச்சேரிகளில் தன் வழக்கமாகக் கொண்டிருந்தார். தமிழ் கீர்த்தனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை.

வசந்தகுமாரியின் சமகாலத்தவர்களாய் எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள் ஆகியோர் இருந்தனர். எம்.எஸ்., எம்.எல்.வி., டி.கே.பி. என்ற மூவரையும் இசையரசிகள் என்றும், முப்பெரும்தேவியர் என்றும் இசையுலகம் அழைத்தது. பிரபல மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் உட்படப் பல பிரபல கலைஞர்கள் எம்.எல்விக்கு பக்கவாத்தியம் வாசித்தனர்.

சீடர்கள்

  • சுதா ரகுநாதன்
  • ஏ. கன்யாகுமரி
  • சாருமதி ராமச்சந்திரன்
  • யோகம் சந்தானம்
  • சுபா கணேசன்
  • ஜெயந்தி மோகன்
  • ஜெயந்தி சுப்ரமணியம்
  • வனஜா நாராயணன்
  • டி.எம். பிரபாவதி
  • மீனா மோகன்
  • ரோஸ் முரளி கிருஷ்ணன்
  • பாமா விஸ்வேஸ்வரன்
  • ஸ்ரீவித்யா


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.