first review completed

வடமவண்ணக்கன் பேரிசாத்தன்

From Tamil Wiki
Revision as of 08:16, 31 October 2022 by Logamadevi (talk | contribs)

வடமவண்ணக்கன் பேரிசாத்தன் சங்க காலப் புலவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் அகநானூறு மற்றும் புறநானூற்றில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

வட நாட்டிலிருந்து தமிழகம் வந்து நாணய ஆய்வாளர் தொழில் மேற்கொண்டார். சங்க காலப் புலவர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளிதுஞ்சிய நன்மாறனின் காலத்தவர்.

இலக்கிய வாழ்க்கை

வடமவண்ணக்கன் பேரிசாத்தன் புறநானூறு, அகநானூற்றில் இரண்டு பாடல்கள் பாடினார். இவர் பாடிய புறநானூற்றின் 198-ஆவது பாடல் பாடாண் திணைப்பாடலாகவும், பரிசில் கடாநிலை துறையாகவும் அமைந்துள்ளது. இப்பாடலில் பாண்டியன் இலவந்திகைப் பள்ளிதுஞ்சிய நன்மாறனைப் பாடியுள்ளார். அகநானூற்றின் 268-ஆவது பாடல் குறிஞ்சித்திணைப்பாடலாக அமைந்துள்ளது. தலைமகனின் நட்பினைப் பெறுவதற்கு தோழியின் துணை வேண்டி தலைவி கூறுவதாக பாடல் உள்ளது.

பாடல் வழி அறிய வரும் செய்திகள்

பள்ளிதுஞ்சிய நன்மாறன்
  • அருவி இறங்கும் மலை போல முத்தாரத்துடன் கூடிய அகன்ற மார்பினை உடையவன்.
  • சேயிழை அணிந்த மனைவியையும், கிண்கிணி அணிந்த கால்களை உடைய புதல்வர்களையும் பெற்றவன்.
  • சிவபெருமான் போல செல்வம் படைத்தவன்.
  • வேண்டுமளவு நீரை நிறைக்கவும், போக்கவும் வல்ல வாவியைச் சூழ்ந்த சோலையை உடையவன்.
  • செல்வம் அமையப்பெற்றவனாயினும் புலவர்களுக்கு அளிக்கும் கொடைத்தன்மையில்லாதவன். அக்குறையை வடமவண்ணக்கன் பேரிசாத்தன் சுட்டுகிறார்.

பாடல் நடை

  • புறநானூறு 198

நீடு வாழிய! நெடுந்தகை; யானும்
கேளில் சேஎய் நாட்டின், எந் நாளும்,
துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கி, நின்
அடிநிழல் பழகிய வடியுறை;
கடுமான் மாற! மறவா தீமே.

  • அகநானூறு 268

அறியாய் வாழி, தோழி! பொறி வரிப்
பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த
குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும்
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய
காமம் கலந்த காதல் உண்டுஎனின்,
நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி;
நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்,
யான் அலது இல்லை, இவ் உலகத்தானே
இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது,
முளை அணி மூங்கிலின், கிளையொடு பொலிந்த
பெரும் பெயர் எந்தை அருங் கடி நீவி,
செய்து பின் இரங்கா வினையொடு
மெய் அல் பெரும் பழி எய்தினென் யானே!

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.