பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம்
சிவபெருமான் பாண்டியர்களின் தலைநகரான மதுரையில் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார். இத்திருவிளையாடல்களைத் தொகுத்து ‘திருவிளையாடற் புராணம்’ என்ற தலைப்பில் ‘பெரும்பற்றப் புலியூர் நம்பி’ மற்றும் ‘பரஞ்சோதி முனிவர்’ ஆகியோர் நூல்களாக இயற்றினர்.
நூல் வரலாறு
பரஞ்சோதி முனிவர், வேதாரண்யத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே துறவியானார். இவரது தந்தை மீனாட்சி சுந்தர தேசிகரே இவருக்குக் குருவாக இருந்தார். அவரிடமிருந்து வடமொழி, திருமுறைகள், சித்தார்ந்த சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்றார். தல யாத்திரை செய்து வந்த பரஞ்சோதி முனிவர் சொக்கநாதரை வழிபடுவதற்காக மதுரைக்கு வந்தார். இவரது கனவில் தோன்றிய அன்னை மீனாட்சி, சிவபெருமானின் திருவிளையாடல்களைத் தமிழில் பாடும்படிக் கூறி மறைந்தார்.
அன்னையின் ஆணையை ஏற்ற பரஞ்சோதி முனிவர், வடமொழி நூலான ஸ்காந்த புராணத்தின் ஒரு பகுதியான, ‘ஹாலாஸ்ய மகாத்மியத்’தில் காணப்படும் சிவபெருமானின் திருவிளையாடல்களை அடிப்படையாகக் கொண்டு தமிழில் ‘திருவிளையாடற் புராணம்’ நூலை இயற்றினார். இந்நூல் ‘பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்நூல் மதுரையின் தலபுராணமாகக் கருதப்படுகிறது. இதன் காலம் 16-ம் நூற்றாண்டு.
பரஞ்சோதி முனிவர், ’திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா’, ‘மதுரை பதிற்றுப்பத்தந்தாதி’, ‘வேதாரண்ய புராணம்’ போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
நூல் அமைப்பு
’திருவிளையாடல் புராணம்’, 3363 செய்யுள்களால் ஆனது. மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருஆலவாய்காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் காண்டமான மதுரைக் காண்டம் தொடங்குவதற்கு முன்பே, 343 செய்யுள்களில், கீழ்காணும் தலைப்புகளில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன
- காப்பு
- வாழ்த்து
- நூற்பயன்
- கடவுள் வாழ்த்து
- பாயிரம்
- அவையடக்கம்
- திருநாட்டுச்சிறப்பு
- திருநகரச்சிறப்பு
- திருக்கையிலாயச்சிறப்பு
- புராணவரலாறு
- தலச் சிறப்பு
- தீர்த்தச் சிறப்பு
- மூர்த்திச் சிறப்பு
- பதிகம்
344-வது செய்யுள் முதல் தான், சிவபெருமானின் திருவிளையாடல்கள் தொடங்குகின்றன.
மூன்று காண்டங்கள்
மதுரைக்காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய்காண்டத்தில் 16 படலங்களும் என 64 படலங்கள் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது.
மதுரைக் காண்டம்
- இந்திரன் பழி தீர்த்த படலம்
- வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்
- திருநகரங்கண்ட படலம்
- தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்
- தடாதகையாரின் திருமணப் படலம்
- வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்
- குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்
- அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்
- ஏழுகடல் அழைத்த படலம்
- மலயத்துவசனை அழைத்த படலம்
- உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம்
- உக்கிர குமாரனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்
- கடல் சுவற வேல்விட்ட படலம்
- இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்
- மேருவைச் செண்டாலடித்த படலம்
- வேதத்துக்குப் பொருள்அருளிச் செய்த படலம்
- மாணிக்கம் விற்ற படலம்
- வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்
கூடற் காண்டம்
- நான் மாடக்கூடலான படலம்
- எல்லாம் வல்ல சித்தரான படலம்
- கல் யானைக்குக் கரும்பு தந்த படலம்
- யானை எய்த படலம்
- விருத்த குமார பாலரான படலம்
- கால் மாறி ஆடிய படலம்
- பழியஞ்சின படலம்
- மாபாதகம் தீர்த்த படலம்
- அங்கம் வெட்டின படலம்
- நாகமேய்த படலம்
- மாயப்பசுவை வதைத்த படலம்
- மெய் காட்டிட்ட படலம்
- உலவாக்கிழி அருளிய படலம்
- வளையல் விற்ற படலம்
- அட்டமாசித்தி உபதேசித்த படலம்
- விடையிலச்சினை இட்ட படலம்
- தண்ணீர்ப் பந்தல் வைத்த படலம்
- இரசவாதம் செய்த படலம்
- சோழனை மடுவில் வீட்டிய படலம்
- உலவாக் கோட்டை அருளிய படலம்
- மாமனாக வந்து வழக்குரைத்த படலம்
- வரகுணனுக்கு சிவலோகம் காட்டிய படலம்
- விறகு விற்ற படலம்
- திருமுகம் கொடுத்த படலம்
- பலகை இட்ட படலம்
- இசைவாது வென்ற படலம்
- பன்றிக் குட்டிக்கு முலை கொடுத்த படலம்
- பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்கிய படலம்
- கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்
- நாரைக்கு முத்தி கொடுத்த படலம்
திருஆலவாய்க் காண்டம்
- திருவாலவாயான் படலம்
- சுந்தரப்பேரம் செய்த படலம்
- சங்கப்பலகை கொடுத்த படலம்
- தருமிக்குப் பொற்கிழியளித்த படலம்
- கீரனைக் கரையேற்றிய படலம்
- கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்
- சங்கத்தார் கலகந்தீர்த்த படலம்
- இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்
- வலை வீசின படலம்
- வாதவூர் அடிகளுக்கு உபதேசித்த படலம்
- நரி பரியாக்கிய படலம்
- பரி நரியாக்கிய படலம்
- மண் சுமந்த படலம்
- பாண்டியன் சுரம் தீர்த்த படலம்
- சமணரைக் கழுவேற்றிய படலம்
- வன்னியும் கிணறும் லிங்கமும் அழைத்த படலம்
பாடல்கள் மூலம் அறிய வரும் வரலாற்றுச் செய்திகள்
பரஞ்சோதி முனவரின் ‘திருவிளையாடல் புராணம்’ மூலம் பாண்டிய மன்னர்கள் பற்றிய பல்வேறு வரலாற்றுச் செய்திகளையும், மாணிக்க வாசகரது வாழ்க்கை நிகழ்வுகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
