சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார்
சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார் (ராஜகோபாலன்; ராஜன்; ராஜாஜி; ராஜகோபாலாசாரியார்; சி.ஆர்; மூதறிஞர் ராஜாஜி. இராஜாஜி;) (டிசம்பர் 10, 1878-டிசம்பர்-25, 1972) வழக்குரைஞர். சுதந்திரப் போராட்ட வீரர். சமூக சீர்த்திருத்தவாதி, அரசியல் கட்சித் தலைவர். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றினார். சென்னை மாகாண முதல்வர்; மேற்கு வங்க ஆளுநர் எனப் பல பொறுப்புகள் வகித்தார். பாரத ரத்னா விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
ராஜாஜி என்று அழைக்கப்படும் ராஜகோபாலாசாரியார், ஓசுர் அருகே உள்ள தொரப்பள்ளி என்ற கிராமத்தில், சக்கரவர்த்தி ஐயங்கார்-சிங்காரம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 10, 1878-ல் பிறந்தார். இயற்பெயர் ராஜகோபாலன். தந்தை கிராம முன்சீஃப் ஆகப் பணியாற்றினார். ஆரம்பக் கல்வி வீட்டிலேயே போதிக்கப்பட்டது. உயர்நிலைக் கல்வியை ஓசூரிலும், மேல்நிலைக் கல்வியை பெங்களூர் லண்டன் மிஷன் பள்ளியிலும் கற்றார். பெங்களூரில் உள்ள மத்திய இந்துக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். பின் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்துத் தேர்ந்தார்.
தனி வாழ்க்கை
சட்டம் பயின்ற ராஜாஜி, சேலத்தில் வழக்குரைஞராகத் தொழில் செய்தார். நுணுக்கமாகப் பல வழக்குகளில் வாதாடி நற்பெயர் பெற்றார். மனைவி அலர்மேலு மங்கை. இவர்களுக்கு மூன்று ஆண், இரண்டு பெண்பிள்ளைகள். மகன் சி. ஆர். நரசிம்மன் இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். ராஜாஜியின் மகள் லட்சுமி, மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியை மணந்தார். ராஜாஜி, இளம் வயதிலேயே மனைவியை இழந்தார். மறுமணம் செய்துகொள்ளவில்லை.
சமூக வாழ்க்கை
சேலத்தில் மூத்த வழக்குரைஞர் சேலம் விஜயராகவாசாரியாரின் நட்பைப் பெற்றார் ராஜாஜி. சமூக சேவைகள் பலவற்றில் பங்கெடுத்தார். சேலம் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீண்டாமை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, மது ஒழிப்பு போன்றவற்றில் மிகுந்த அக்கறை செலுத்தினார்.
தெருக்கள் தோறும் குழாய் மூலம் தண்ணீர் விநியோக ஏற்பாட்டை முன் நின்று செய்தார்.
அரசியல் வாழ்க்கை
மூத்த வழக்குரைஞர் சேலம் விஜயராகவாச்சாரியால் அரசியல் நோக்கி ஈர்க்கப்பட்டார் ராஜாஜி. சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். திலகரது செயல்பாடுகளை ஆதரித்தார். பாரதியார், வ.உ. சிதம்பரம் பிள்ளை போன்றோருக்கு நண்பராக இருந்து உதவினார். அன்னிபெஸண்ட் அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கத்தில் பங்குகொண்டார். தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய காந்தி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ராஜாஜி, தானும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட விருப்பம் கொண்டார். சேலம் நகராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ’தி இந்து’ இதழின் ஆசிரியர் ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்காரின் வலியுறுத்தலினால் சென்னைக்கு வந்தார். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிக் கொண்டே அரசியல் பணிகளில் ஈடுபட்டார்.
சென்னைக்கு வந்த காந்தி ராஜாஜியின் ’திலகர் பவனம்’ இல்லத்தில் தங்கினார். அந்தச் சந்திப்பு ராஜாஜியின் வாழ்வில் திருப்பு முனை ஆனது. இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாயினர். ராஜாஜி, காந்தியின் மனசாட்சி என்று காந்தியடிகளாலேயே போற்றப்பட்டார்.
காந்தியின் வேண்டுகோளை ஏற்று பலர் தமது தொழிலை, வேலையை உதறி விட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜாஜியும் தனது வழக்குரைஞர் தொழிலில் இருந்து விலகி தேச சேவையில் ஈடுபட்டார். காங்கிரசில் சேர்ந்து ரௌலட் சட்டத்திற்கு எதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் கலந்துகொண்டார். அதனால் சிறையில் அடைக்கப்பட்டார்.
காந்தி ஆச்ரமம்
காந்தியின் மீது கொண்ட பற்றால், 1924-ல், திருச்செங்கோட்டை அடுத்த புதுப்பாளையத்தில் காந்தி ஆச்ரமத்தை நிறுவினார். குடும்பத்துடன் அங்கு ஒரு குடிசையில் தங்கிக் கொண்டு, சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டார். கதர் உற்பத்தி, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு போன்றவற்றை வலியுறுத்திப் பிரசாரம் செய்தார்.
உப்பு சத்தியாக்கிரகம்
1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி, வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்திற்கு, ராஜாஜி தலைமை வகித்தார். தொண்டர்கள் பலருடன் கைதானார். சிறையிலிருந்து வெளிவந்ததும் மீண்டும் தனது அரசியல் சமூகப் பணிகளைத் தொடர்ந்தார்.
காந்தியுடன் முரண்பாடு
ஆகஸ்ட் 1942-ல், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை காந்தி தொடங்கியபோது ராஜாஜி அதனை ஆதரிக்கவில்லை. காந்தியுடன் அவர் முரண்பட்டார்.
நண்பர்கள்
சகஜானந்தர், சேலம் எஸ். விஜயராகவாச்சாரியார், கஸ்தூரிரங்க ஐயங்கார், பாரதியார், வ.வே.சு. ஐயர், எஸ். சத்தியமூர்த்தி, டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு, டி.எஸ்.எஸ். ராஜன், சிங்காரவேலு செட்டியார், ஈ.வெ. ராமசாமி நாயக்கர், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் உள்ளிட்ட பலருக்கு ராஜாஜி நண்பராக இருந்தார்.
சர்ச்சைகள்
ராஜாஜி , 1934- நடந்த தேர்தலின் போது, சேலத்தில் ஆர்.கே. சண்முகம் செட்டியாருக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் வேட்பாளரை நிறுத்தி தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். அதனால் ‘குல்லூகப் பட்டர்’ என்று வசைபாடப்பட்டார். (குல்லூகப் பட்டர் என்பவர் மனு தர்ம சாஸ்திரத்திற்கு முற்காலத்தில் உரை எழுதியவர். ராஜாஜி, காந்தி மற்றும் காங்கிரஸின் தத்துவங்களுக்கு புதுவகையில் விளக்கம் கூறி வந்ததால் அவ்வாறு வசை பாடப்பட்டார்)
காந்தியுடன் சில விஷயங்களில் முரண்பாடு, நேருவுடன் கருத்து வேறுபாடு என்று தொடங்கி காமராஜ் உடன் சச்சரவு, திராவிட மற்றும் திராவிட முன்னேற்ற இயக்கத்தினரின் எதிர்ப்புகள், பெரியாரின் திருமணத்தால் விளைந்த சங்கடங்கள் என்று தன் வாழ்நாளில் தொடர்ந்து பல சர்ச்சைகளை எதிர்கொண்டார் ராஜாஜி.
சென்னை மாகாண முதலமைச்சர்
ராஜாஜி, 1937ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் முதன் மந்திரியாக பொறுப்பேற்றார். 1940 வரை பதவி வகித்தார். அக்காலகட்டத்தில் கிராம மக்கள் குடிநீர் வசதித் திட்டம், விவசாயிகள் கடன் உதவித் திட்டம், விவசாயிகள் கடன் நிவாரணச் சட்டம், மதுவிலக்கு, ஆலயப் பிரவேசப் பாதுகாப்புச் சட்டம், சுகாதாரச் சட்டம் போனறவற்றை அமல்படுத்தினார். இந்தி மொழி கட்டாயப் பாடத் திட்டத்தை அறிவித்தார்.
1938-ல், ஹரிஜன சேவா சங்கத் தலைவர் ஏ. வைத்தியநாத ஐயர் தலைமையில் நடந்த ஆலயப் பிரவேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தியை கட்டாயப் பாடமாக்கியதற்கும், ஹரிஜன ஆலயப் பிரவேசப் பாதுகாப்புச் சட்டத்திற்கும் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார் ராஜாஜி. அரசு நிர்வாகச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக அவர் அறிமுகப்படுத்திய புதிய விற்பனை வரிக்கும், புகையிலை வரிக்கும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. பல எதிர்ப்புகளை, போராட்டங்களைச் சந்தித்தார்.
சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார். அப்போது, மாணவர்களது பள்ளிக் கல்வியில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார். பள்ளிக் கல்வி நேரம் நாளொன்று மூன்று மணி நேரமாகவும், மீதி நேரத்தில் அவர்கள் தந்தை அல்லது குடும்பத் தொழில்களைக் கற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. இக்கல்வித் திட்டம் ‘குலக்கல்வித் திட்டம்’ என்று தி.மு.க. போன்ற எதிர்க்கட்சிகளால் பெயர் சூட்டப்பட்டு கடும் எதிர்ப்புக்கு உள்ளானது.
தனது ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளை நிறுவினார்.
பொறுப்புகள்
1937-ல், சென்னை ராஜதானியின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
1946 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியாவில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுநராகப் பணிபுரிந்தார்.
1948 முதல் 1950 வரை சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பு வகித்தார்.
1951 முதல் 1952 வரை மத்திய உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
1952 முதல் 1953 வரை சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகப் பணிபுரிந்தார்.
சுதந்திரா கட்சி
காங்கிரஸ் மீது கொண்ட கருத்து மாறுபாட்டால் அதிலிருந்து விலகி, 1959-ல், சுதந்திரா கட்சியை நிறுவினார் ராஜாஜி. அதன் மூலம் தனது அரசியல் பணிகளைத் தொடர்ந்தார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967-ல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது.
அணு ஆயுத எதிர்ப்பு
அணு ஆயுதச் செயல்பாடுகளை, அழிவுக்கான அதன் பயன்பாடுகளை எதிர்த்தார். 1962-ல், இதற்காகத் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். அமெரிக்கா சென்று கென்னடியைச் சந்தித்து ஆணு ஆயுதப் பயன்பாடுகளைத் தவிர்க்கும்படி வேண்டிக் கொண்டார். தீவிர அரசியலிலிருந்து விலகி இலக்கிய, சமூகப் பணிகளை முன்னெடுத்தார்.
இதழியல் வாழ்க்கை
ராஜாஜி, சேலத்தில் தான் தோற்றுவித்த ’தமிழ் சாஸ்திர பரிபாஷைச் சங்கம்’ மூலம் இதழ் ஒன்றை நடத்தினார். ஆனால், வரவேற்பு இல்லாததால் அந்த இதழ் சில மாதங்களோடு நின்று போனது.
மதுவிலக்குப் பிரசாரத்தை முன்னெடுக்கும் வகையில், திருச்செங்கோடு காந்தி ஆச்ரமம் மூலம் ‘விமோசனம்’ என்ற இதழைத் தொடங்கினார். கல்கி அதன் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். மதுவின் தீமையைக் கருவாகக் கொண்ட பல சிறுகதைகளையும் கட்டுரைகளையும் அதில் இருவரும் இணைந்து எழுதினர்.
திருச்செங்கோடு காந்தி ஆச்ரமம் மூலம் ‘குடி கெடுகும் கள்’ உள்ளிட்ட சில நூல்களை அச்சிட்டு வெளியிட்டார் ராஜாஜி.
காந்தியின் ’யங் இந்தியா’ இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணிபுரிந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ராஜாஜி சேலத்தில் வாழ்ந்தபோது, இலக்கிய வளர்ச்சிக்காக சேலம் இலக்கியச் சங்கத்தை நிறுவிக் கூட்டங்கள் பலவற்றை நடத்தினார். தமிழில் கலைச்சொற்களை உருவாக்க ‘தமிழ் சாஸ்திர பரிபாஷைச் சங்கம் ' (Tamil Scientific Terms Society) என்ற அமைப்பை நிறுவி, பல துறைகளில் தமிழில் கலைச் சொற்கள் உருவாக்கும் முயற்சியை முன்னெடுத்தார்.
கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சி. ஆகியோரோடு குற்றாலத்தில் நடந்த ‘வட்டத்தொட்டி’ இலக்கிய ஆய்வுகளில் கலந்துகொண்டார்.
தமிழில் ‘கல்கி’யிலும் ‘யங் இந்தியா’, ‘சுயராஜ்யா’ போன்ற ஆங்கில இதழ்களிலும் புகழ்பெற்ற ஆங்கில நாளிதழ்களிலும் கதைகள், கட்டுரைகளை எழுதினார். ‘ஸோக்ரதர்’ (சாக்ரடீஸின் வாழ்க்கை) என்பதே ராஜாஜி முதன் முதலில் எழுதிய நூல். 1921-ல் சிறையில் இருந்தபோது, தனது சிறைச்சாலை அனுபவங்களை தினந்தோறும் நாட்குறிப்பாக எழுதி வந்தார். அதுவே பின்னர், ’சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜகோபாலாசாரியாரின் சிறைவாசம்’ என்ற தலைப்பில் நூலானது.
இந்தியாவின் இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் ராஜாஜியை மிகவும் கவர்ந்தன. ராமாயணத்தை எளிய தமிழில் 'சக்கரவர்த்தித் திருமகன்' என்ற நூலாக எழுதினார். மகாபாரதத்தை பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் 'வியாஸர் விருந்து' என்ற பெயரில் அளித்தார். பகவத் கீதை 'கண்ணன் காட்டிய வழி' ஆனது. இவை தவிர 'சோக்ரதர்', 'திருமூலர் தவமொழி', 'துறவி லாரென்ஸ்' எனப் பல நூல்களைப் படைத்தார். ‘உபநிஷதப் பலகணி’, 'கண்ணன் காட்டிய வழி', ‘ஆத்ம சிந்தனை’ எனும் மூன்று நூல்கள் தொகுக்கப்பட்டு ‘அற நூல்கள்’ என்ற தலைப்பில் வெளியானது. கல்கியில், ராஜாஜி எழுதிய ’ராமகிருஷ்ண பரமஹம்சர்’ பற்றிய தொடர் தொகுக்கப்பட்டு ‘ராமகிருஷ்ண உபநிஷதம்’ என்ற தலைப்பில் வெளியானது.
ராஜாஜி, திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஜி.யு. போப்பால் அந்த மொழிபெயர்ப்பு பாராட்டப்பட்டது.
ராஜாஜி, சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் எனப் பொதுவாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். இவர் எழுதிய 'திக்கற்ற பார்வதி' திரைப்படமாகிப் புகழ் பெற்றது இசைப் பாடல்கள் சிலவற்றையும் எழுதினார். எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிப் பிரபலமான, ‘குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா’ பாடலை எழுதியது ராஜாஜிதான். ஆங்கிலத்தில் 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.