under review

சீதக்காதி

From Tamil Wiki

சீதக்காதி (செய்கு அப்துல் காதிறு மரக்காயர்) (ஷெய்க் அப்துல் காதர்) (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) தமிழகத்தைச் சேர்ந்த வள்ளல். தமிழ்ப் புலவர்களை ஆதரித்தார். உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல். ராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதியின் நெருங்கிய நண்பர், மதியுரை அமைச்சர். சதக்கத்துல்லா அப்பா இவரின் நண்பர் மற்றும் குரு.

வாழ்க்கைக் குறிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 'கறுப்பாறு காவலர்' என்ற பெயரில் கடல் பகுதி வர்த்தகத்துக்கு ஆறு தலைமுறைகளப் பொறுப்பாளர்களாக இருந்த தென்தமிழகத்தின் செல்வாக்கு மிக்க, கடல் வாணிபக் குடும்பத்தைச் சேர்ந்தவரான பெரிய தம்பி மரைக்காரின் மகனாகப் பிறந்தவர் சீதக்காதி. தாய் முஹம்மது பாத்திமா நாச்சியார். அண்ணன் பட்டத்து மரக்காயர் என்ற முகம்மது அப்துல் காதிறு, தம்பி ஷைகு இப்றாகீம் மரக்காயர்.

ஊர்

சீதக்காதி பிறந்து வளர்ந்து வாழ்ந்தது கீழக்கரை என்றும், காயல்பட்டினம் என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. காயல் என்ற பெயரில் பழையகாயல், புன்னைக்காயல், கீழக்கரை, காயல்பட்டினம் என்ற நான்கு ஊர்கள் உண்டு. அவற்றுள் கீழக்கரை என்பதே சீதக்காதியின் ஊர் என்றுஆய்வாளர்கள் கருதுகின்றனர். கீழக்கரைக்குத் தென்காயல், பௌத்திரமாணிக்கம், அனுத்தொகைமங்கலம், செம்பிநாடு, நினைத்தது முடித்தான் பட்டினம், வகுதை, வச்சிரநாடு முதலிய பெயர்களும் உண்டு என்பர் ஆய்வாளர்.

முன்னோர்

சீதக்காதியின் முன்னோர்கள் மரக்கலராயர் மரபைச் சேர்ந்தவர்கள். கப்பலில் வெளிநாடு சென்று கடல் வாணிகம் செய்தவர்கள், செல்வம் மிக்கவர்கள், ஊரின் தலைமைக்காரராக விளங்கியவர்கள். சீதக்காதியின் தாயைப் பெற்ற பாட்டனார் 'வாவலி மரக்காயர்'.

சீதக்காதி வள்ளலின் முன்னோர்கள் பொ.யு.12-ம் நூற்றாண்டில் கீழக்கரை பகுதி பாண்டியர்களின் வசம் இருந்த காலம் தொட்டு மன்னார் வளைகுடா பகுதியின் நீர்வழிப் போக்குவரத்து, கடல் வாணிபக் கட்டுப்பாடு, கடலோர மற்றும் கடல்வளப் பாதுகாப்புக்கான அதிகாரத்தைப் பெற்றனர். 'மலிக்', 'கறுப்பாறு காவலர்கள்', 'சோனக சமந்தர்கள்' என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். பாண்டிய மன்னர்களால் தங்களுக்கு 12-ம் நூற்றாண்டிலேயே வழங்கபட்ட 'கறுப்பாறு காவலர்கள்' என்ற அந்தஸ்துடனும். 15-ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்க அரசர் அளித்த 'பெரியதம்பி' என்ற பட்டத்துடனும் அன்னிய ஆட்சியில் ரீஜண்ட்களாகவும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தனர். இந்தச் செய்தி எட்டயபுரம் உமறு கத்தாப் புலவர் இயற்றிய சீதக்காதி திருமண வாழ்த்துப் பாடலின் வாயிலாகத் தெரிகிறது.

பொ.யு. 1650-ல் கீழக்கரை பகுதியில் போர்த்துக்கீசியர்கள் மரைக்காயர் வணிகர்களை அச்சுறுத்தினர். இந்தக் காலத்தில் சேகுகண்டு மரைக்காயரின் பேரரும், சீதக்காதி மரைக்கயரின் பாட்டனாருமான மாமு நெய்னா என்ற மஹ்மூது நெய்னா மரைக்காயர் மற்றும் சீதக்காதி மரைக்காயரின் தாயைப் பெற்ற பாட்டனார் பாவா அலி என்ற வாவாலி மரைக்காயர் போன்றவர்களிடம் கடல்வழி வர்த்தகப் பொறுப்பு இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பொ.யு. 1687-ம் ஆண்டு வள்ளல் சீதக்காதி மரைக்காயரின் மூத்த சகோதரர் மலிக் சேய்ஹ் இப்ராஹீம் மரைக்காயர், கிழவன் சேதுபதி அரசரின் படைத் தளபதியாக, பாம்பன் கால்வாய் நீர் வழி கண்காணிப்புப் பொறுப்பில் இருந்தபோது போர்த்துக்கீசியர்களுடன் நடைபெற்ற போரில் குடல் சரிந்து வீர மரணம் அடைந்தார்.

சந்ததியினர்

சீதக்காதி மரைக்காயரின் வாரிசுகளில் 10, 11 மற்றும் 12-ம் தலைமுறையினர் கீழக்கரை நடுத்தெருவில் வாழ்ந்தனர். நெருக்கமான குடியிருப்பாக மாறிப்போன கல்லூட்டு முடுக்கு என்றழைக்கப்படும் கல்வீட்டுத் தெரு, அதையொட்டிய மரைக்காயர் அப்பா குடும்பத்தினருக்கு சேர்ந்த காணிகள், அதற்கு எதிரில் இருக்கும் குத்பா பள்ளி வளாகம், மையவாடி அனைத்தும் சீதக்காதி மன்னருக்குச் சொந்தமான நிலமாக இருக்கலாம் என்றும், காலப்போக்கில் அது அவரது வாரிசுகளால் விற்கப்பட்டிருக்கலாம் என்றும், பெரிய குத்பா பள்ளி வளாகம் முழுதும் வள்ளல் சீதக்காதி மரைக்காயர் குடும்பத்தாரின் பண்டக சாலை இருந்த இடம் என்றும் கருதப்படுகிறது. நடுத்தெரு, கல்வீட்டுப் பகுதியில் இருந்த வள்ளல் சீதக்காதி மரைக்காயரின் மாளிகைக்கு முன்பு ஒரு பெரிய ஆசாரம் (சதுக்கம்) இருந்ததாகவும், பார்வையாளர்கள் சீதக்காதி மரைக்காயரை சந்திக்க இந்த ஆசாரத்தில் அமர்ந்து காத்திருப்பார்கள் என்றும் சீதக்காதி நொண்டி நாடகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சீதக்காதி மரைக்காயரின் சகோதரரான பட்டத்து மரைக்காயரின் (முஹம்மது அப்துல் காதிறு மரைக்காயர்) மகன் அபூபக்கர் மரைக்காயர், சதக்கத்துல்லா அப்பாவின் மகள் சாரா உம்மாவை மணம் முடித்ததாகவும், இவர்களின் புதல்வர்களான வள்ளல் லெப்பை நெய்னா மரைக்காயர் மற்றும் அவ்வாகாறு என்ற அப்துல் காதிறு மரைக்காயர் ஆகியோர் தமது மூதாதையர் என்றும் வரலாற்று ஆய்வாளர் எம். இத்ரீஸ் மரைக்காயர் தனது 'கீர்த்திமிகும் கீழக்கரை' நூலில் குறிப்பிட்டார். சீதக்காதியின் இளவல் செய்யது லெவ்வை நெய்னா என்ற பட்டத்து மரைக்காயர் என்றும், அவர்களின் வாரிசு குறித்த செய்திகள் எதுவும் கிட்டவில்லை எனவும் கவிஞர் ச.சி.நெ. அப்துல் ஹக்கீம், ச.சி.நெ.அப்துற் ரஸாக் ஆகியோர் எழுதிய சேது நாட்டு பெரியதம்பி நூலின் மூலம் அறியலாம். சீதக்காதி நொண்டி நாடகத்தில் வரும் மாமு நெய்னா பிள்ளை என்பவர் சீதக்காதி மரைக்காயரின் சிறிய தகப்பனார் மீராப்பிள்ளையின் மகன் என்றும், வள்ளலின் மகள் முத்து மீரா நாச்சியை மணம் முடித்தவர் என்றும் தகவல்கள் உள்ளன.

அரசியல்

ராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி சீதக்காதியின் நெருங்கிய நண்பர். இவர் 1692-ல் மதுரையின் கீழ் உள்ள தொடர்பை அறுத்துக்கொண்டு தனியாட்சி நடத்தத் தொடங்கினார். அப்பொழுது பாதுகாப்பிற்காக இராமநாதபுரம் கோட்டையும் அரண்மனையும் புதிதாக விரிவாக்கிப் பெரும் பாதுகாப்புடன் கட்டப்பட்டன. அதற்குப் பொன்னும் பொருளும் கொடுத்து உதவியவர் சீதக்காதி. கிழவன் சேதுபதி, சீதக்காதி மரைக்காயருக்கு இந்தப்பகுதியில் வர்த்தக வரி வசூல், முத்துக் குளித்தல், கடல் வழி பண்டமாற்று, கடல்வணிகக் கட்டுப்பாடு, கடலோர எல்லைகளைக் கண்காணித்துப் பாதுகாப்பது போன்ற பொறுப்புகளை வழங்கி, 'விஜய இரகுநாத பெரியதம்பி' என்ற பட்டத்தையும் வழங்கினார். போர்த்துக்கீசிய ஆவணங்களில் கீழக்கரை துறைமுகப் பொறுப்பில் இருந்த மரைக்காயர்கள் அனைவரையுமே முதலாம், இரண்டாம், மூன்றாம் பெரியதம்பி என்று குறிப்பிட்டு வள்ளல் சீதக்காதி இன்னாரெனக் குறிப்பிடப்படாமல் உள்ளது.

சதக்கத்துல்லா அப்பாவை வங்காளத்திற்கு கவர்னராக நியமிக்க ஆற்காடு நவாப் மூலம் ஒளரங்கசீப் வேண்டியபோது தனக்கு அந்தப் பதவி ஒத்துவராது என்றும், வள்ளல் சீதக்காதி மரைக்காயர்தான் சரியான தேர்வு என்றும் ஆற்காடு நவாபிடம் சதக்கத்துல்லா அப்பா பரிந்துரை செய்தார். சீதக்காதி அச்சமயம் தனது வர்த்தகத் தொடர்பை கல்கத்தா வரை விரிவுபடுத்தி இருந்தமையால் அந்த கவர்னர் பொறுப்பினை ஏற்று கல்கத்தா சென்று சிறிது காலம் கவர்னர் பதவியில் இருந்து பின் ஊர் திரும்பியதாக நம்பப்படுகிறது.

பணி

சீதக்காதி பரம்பரையாகப் பெரும் செல்வமிக்க வணிகக்குடும்பத்தில் தோன்றியவர். இவரே கப்பல் வணிகம் செய்து பெரும்பொருளீட்டினார். அக்காலத்தில் இங்கு வணிகம் செய்யவந்த ஆங்கிலக் கம்பெனிகளுக்கு சீதக்காதி எழுதிய கடிதக்குறிப்புக்கள் உள்ளன. அவற்றின்படி மிளகுவணிகம் முழுவதும் இவர்மூலமாகவே நடந்து வந்தது எனக் கருத இடமுள்ளதாக ஆய்வறிஞர்கள் குறிப்பிட்டனர்.

கொடை

சீதக்காதி 1675 முதல் 1682 வரை ஏழு வருடங்களாகத் தொடர்ந்து சேது சீமையில் ஏற்பட்ட கடும் பஞ்ச காலத்தில் தனது தானியக் களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை மக்களுக்கு அளித்தார். கடல் வாணிபத்தில் தாம் ஈட்டிய செல்வத்தையும் மக்களுக்கு அளித்தார். 'செத்துங் கொடுத்தான் சீதக்காதி' என்ற முதுமொழி இன்றும் தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ளது.

படிக்காசுப்புலவர் பாடிய பாடல் ஒன்று

ஓர்தட்டிலே பொன்னும் ஓர்தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்
கார்தட்டிய பஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர்
ஆர்தட்டினும் தட்டு வராமலே அன்ன தானத்துக்கு
மார்தட்டிய துரை மால் சீதக்காதி வரோதயனே

இலக்கியச் செயல்பாடு

சீதக்காதி மன்னர் தலைமலைக் கண்ட தேவர், அழகிய சிற்றம்பலக் கவிராயர், படிக்காசுத் தம்பிரான் முதலான தமிழ்ப் புலவர்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

சீறாவின் கொடை நாயகரான பரங்கிப்பேட்டையைச் சார்ந்த அபுல்காசிம் மரைக்காயர் என்பவர் சீதக்காதி வள்ளலின் நண்பராகவோ, நிதி மற்றும் நிர்வாகத்துக்கான பொறுப்பாளராகவோ அல்லது வள்ளல் குடும்பத்தின் பொக்கிஷதாரராகவோ இருக்கலாம் அல்லது வள்ளலின் வணிகக் கூட்டாளியாகக் கூட இருக்கலாம் என வெவ்வேறு கருத்துகள் உள்ளன. அவர் கீழக்கரையை சார்ந்தவர்தான் என்ற கருத்துக்கு ஆதாரமாக சீறாபுராணத்தில் உமறுப்புலவர் வகுதை அபுல்காசீம் மரைக்காயர் என பலமுறை குறிப்பிட்டார். வைகையம்பதிக்கு வேந்தன் என்றும் குறிப்பிடுவதால் வகுதை மற்றும் வைகயம்பதி என்பதும் கீழக்கரையை குறிக்கும் சொல்லாக உறுதியானதாலும், சீறாபுராணம் பொ.யு. 1665-ஆம் ஆண்டு கீழக்கரையில் சீதக்காதி மரைக்காயரின் அமைச்சரான அபுல்காசீம் மரைக்காயர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டதாகவும் கா.சு. பிள்ளை தனது தமிழ் இலக்கிய வரலாறு -2-ம் பாகத்தில் குறிப்பிட்டார்.

சீதக்காதி மீது பல சிற்றிலக்கியங்களும், தனிப்பாடல்களும் எழுதப்பட்டன. 'சீதக்காதி நொண்டிநாடகம்', 'சீதக்காதி மரக்காயர் திருமணவாழ்த்து' ஆகியவற்றை உமறுப்புலவர் பாடினார். சீதக்காதி பேரில் தனிப்பாடல்கலை படிக்காசுப்புலவர், நமச்சிவாயப்புலவர் முதலியோர் பாடினார். சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்கி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தமிழில் உமறுப்புலவரால் சீறாப்புராணம் என்ற காப்பியமாக இயற்றப்பட்டது. ஆனால் சீறாப்புராணத்தில் இவர் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. அபுல்காசிம் என்பவர் பற்றிய குறிப்புண்டு. மார்க்கப் பேரறிஞர் சதக்கத்துல்லா வலி பற்றிய குறிப்புண்டு. வள்ளல் சீதக்காதியை ஏன் அவர் சுட்டவில்லை என்பது குறித்துத் தமிழ் இலக்கிய உலகில் பல்வேறு விவாதங்கள் உள்ளன.

பிற செயல்பாடுகள்

  • சதக்கத்துல்லா அப்பாவின் ஆலோசனையின் பேரில் திராவிட தொன்கலை நயத்துடன் நடுத்தெரு ஜும்ஆ பள்ளியை நிர்மாணித்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
  • மாதிஹ் ரசூல் இமாம் சதக்கத்துல்லா அப்பாவின் வழிகாட்டுதலின்படி பெரிய குத்பா பள்ளியை வள்ளல் சீதக்காதி கட்டத் துவங்கினார். கீழக்கரை பெரிய குத்பா பள்ளியை நிர்மாணிக்க சீதக்காதி மரைக்காயரின் தந்தையாரான பெரியதம்பி மரைக்காயர் காலத்தில் இமாம் மஹ்தூம் சின்னீனா லெப்பை ஆலிம் அவர்களின் வேண்டுகோள்படி திட்டமிடப்பட்டதாகவும் சில வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • சீதக்காதி கீழக்கரையில் ஆற்றங்கரையோரம் கொடிக்கால்கள் நிறைந்த செவ்வல் என்ற செம்மணல் பகுதியில் சிங்காரத்தோப்பை உருவாக்கினார். கீழக்கரை புறநகரில் இருக்கும் சிங்காரத்தோப்பு தற்பொழுது பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை மற்றும் குடியிருப்புப் பகுதியாக உள்ளது.

சிறப்புகள்

  • கிழவன் சேதுபதி சீதக்காதியை உரிமை பாராட்டி அவருக்கு 'விசயரகுநாதப் பெரியதம்பி' எனத் தன்பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.
  • டில்லியை ஆண்ட முகலாயப்பேரரசர் ஒளரங்கசீப் சீதக்காதியின்பால் பெருமதிப்புக் கொண்டவர்.

மறைவு

சீதக்காதி மரைக்காயர் தனது 48-வது வயதில் பொ.யு. 1698-ல் மறைந்தார். இவரின் உடல் நடுத்தெரு குத்பா பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டது.

நினைவு

  • ராமநாதபுரத்தில் அமைந்துஉள்ள அரசு விளையாட்டு அரங்கத்திற்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கம் என தமிழக அரசு பெயர் சூட்டியுள்ளது.

நூல் பட்டியல்

இவரைப் பற்றிய நூல்கள்
  • சீதக்காதி நொண்டி நாடகம்
  • சீதக்காதி திருமண வாழ்த்து
  • படிக்காசு தம்பிரான் புலவர் எழுதிய சரம கவிகள்
வாழ்க்கை வரலாறு
  • சீதக்காதி வள்ளல் (ஹூசைன் நைனார்)
  • வள்ளல் சீதக்காதி வரலாறு (கா.மு. ஷரீஃப்)
  • வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும் (கேப்ட்டன் அமீர் அலி)
  • செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (எஸ்.எம். கமால்)
  • செந்தமிழ் வள்ளல் சீதக்காதி அகப்பொருள் கோவை (பாவலர் உசேன்)
  • சீதக்காதி பிள்ளைத் தமிழ் (எஸ்.எம்.ஏ. காதர்)
  • சேது நாட்டு பெரியதம்பி வள்ளல் சீதக்காதி (ச.சி.நெ.அப்துர் ரஸாக், ச.சி.நெ.அப்துல் ஹக்கீம்)

இணைப்புகள்


‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Nov-2024, 21:43:14 IST