அழகரசன்
அழகரசன் (நன்செய் புகழூர் அழகரசன்; சுந்தர்ராஜன்) (பிறப்பு: ஜனவரி 01, 1941), கவிஞர், எழுத்தாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
சுந்தர்ராஜன் என்னும் இயற்பெயரை உடைய அழகரசன், ஜனவரி 01, 1941 அன்று, தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில், கோபால் சொர்ணம் - ராசம்மாள் இணையருக்குப் பிறந்தார். 6 வயதில் தந்தையை இழந்தார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய தாயால் வளர்க்கப்பட்டார். குளித்தலை, நாகையநல்லூர் பள்ளிகளில் பள்ளிக்கல்வி கற்றார். 1960-ல் மாயனூர் அரசு ஆதாரப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து இளநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார்.
தனி வாழ்க்கை
அழகரசன், 1962 முதல் நன்செய் புகழூர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1967-ல் குசலகுமாரியை மணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பாவேந்தன், பகுத்தறிவு, இரணியன் என மூன்று பிள்ளைகள். அழகரசன், 1998-ல் பணி ஓய்வு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
தமிழ் மீது கொண்ட பற்றால் சுந்தர்ராஜன் என்னும் தன் பெயரை 'அழகரசன்' என மாற்றிக் கொண்டார். கவிஞர் கருவூர் பாரி மூலம் கவிதை ஆர்வம் கைவரப் பெற்று பல பாட்டரங்குகளில் கலந்துகொண்டு பாடினார். இலக்கிய அமைப்புகளின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கவியரங்குகளில் பல்வேறு தலைப்புகளில் கவிதை வாசித்தார். 'ஆசிரியர் துணைவன்', 'முரசொலி', 'தினகரன்', 'கவிக்கொண்டல்' ஆகிய ஏடுகளில் தமிழின உணர்வு மிக்க பாடல்களை எழுதினார்.
வே. ஆனைமுத்து தொகுத்த, தி சிந்தனையாளர் கழகம் வெளியிட்ட 'பெரியாரின் சிந்தனைகள்' எனும் நூல் தொகுப்புப் பணியில் ஈடுபட்டார். அழகரசனின் முதல் படைப்பு, 'வேர்ப்பலா' எனும் குறும்பாவியம். தொடர்ந்து பல்வேறு கவிதை, கட்டுரை நூல்களை எழுதினார். பாவலர் க. மீனாட்சி சுந்தரத்தின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்து மூன்று நூல்களை எழுதினார். பொது வாசிப்புக்குரிய படைப்புகளை எழுதினார்.
அமைப்புச் செயல்பாடுகள்
அழகரசன், சமூக நலப் பணிகள் பலவற்றில் பங்கேற்றுச் செயல்பட்டார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் வளர்ச்சிக்காக உழைத்தார். 1985-ல், ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றிணைந்து கண்ட அறப்போரில் அரசாணையை எரித்ததால் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இம்மன்றம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றார்.
நன்செய் புகழூர் தமிழ்ச் சங்கம், கரூர்த் தமிழ்ச் சங்கம். உலகத் திருக்குறள் பேரவை ஆகியவற்றில் இணைந்து பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுப் பணியாற்றினார்.
விருதுகள்
- குழந்தைக் கவிஞர்
- புனற்களிவேந்தன் பட்டம்
- சிறந்த படைப்பாளர் விருது
- மொழிக்காவலர்
- பாக்கொண்டல்
- தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது
மதிப்பீடு
அழகரசன், கல்வியாளர், களச் செயல்பாட்டாளர். பல்வேறு இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து தமிழ்ப் பணிகளை முன்னெடுத்தார். அழகரசனின் படைப்புகள் வாசிக்க மிக எளிமையானவை. பொது வாசிப்புக்கு உரியவை. கவிஞர், எழுத்தாளர், இலக்கியச் செயல்பாட்டாளர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- பெண்ணுரிமை
- சுய மரியாதை தீர்மானங்கள்
- செந்தமிழே! உயிரே! (நாவல்)
- கலைஞர் 81
- அண்ணா நூறு
- பெருந்தலைவர் காமராசர் நூறு
- பெரியார் நூறு
- வள்ளல் நல்லி நூறு
- முத்துவிழா வாழ்த்துப் பாமாலை
- இலக்கியக்கருவூலம்
- இனக்காவலர்
- கவிமாமணி க.மீ. பாவியம்
- பாவலர் க.மீ. புகழ் நூறு
உசாத்துணை
- 324 தமிழறிஞர்கள், தொகுப்பாசிரியர்: சூரியசந்திரன், வெளியீடு: கலைஞன் பதிப்பகம், தி.நகர், சென்னை - 17; முதல் பதிப்பு: 2023.
✅Finalised Page