மணிமேகலை தமிழ்வாணன்
மணிமேகலை தமிழ்வாணன் (டிசம்பர் 21, 1933 - செப்டம்பர் 14, 1994) எழுத்தாளர், இதழாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
மணிமேகலை தமிழ்வாணன், டிசம்பர் 21, 1933 அன்று, அமாரவதி புதூரில், பிச்சப்பா சுப்பிரமணியன் - அழகம்மை ஆச்சிக்குப் பிறந்தார். கொப்பனாபட்டி கலைமகள் கல்லூரியில் பயின்று 'கலைச்செல்வி' பட்டம் பெற்றார். கணவர் தமிழ்வாணன். மகன்கள்: ரவி தமிழ்வாணன். லேனா தமிழ்வாணன்.
இலக்கிய வாழ்க்கை
மணிமேகலை தமிழ்வாணன், கணவர் தமிழ்வாணனின் எழுத்து, பதிப்புப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். 'அருள்' இதழிலும், 'திருவருள்' மாத இதழிலும் பல்வேறு ஆன்மிகக் கட்டுரைகளை எழுதினார். 'உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர்' என்ற நாவலை எழுதினார்.
இதழியல்
மணிமேகலை தமிழ்வாணனின் தந்தை பிச்சப்பா சுப்பிரமணியன், 'இந்து மதாபிமான சங்கம்', 'தனவைசிய ஊழியன் சங்கம்', 'மகளிர் இல்லம்' போன்ற அமைப்புக்களை உருவாக்குவதிலும், நிர்வகிப்பதிலும், சொ. முருகப்பாவிற்கு உறுதுணையாக இருந்தார். அவர் மூலம் மணிமேகலை இலக்கிய ஆர்வம் பெற்றார். கணவர் தமிழ்வாணன் நடத்திவந்த கல்கண்டு இதழ் மூலம் இதழியல் அனுபவம் பெற்றார். 1964-ல் தொடங்கப்பட்டு 1969 வரை வெளிவந்த 'அருள்' மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1970 முதல் 1974 வரை வெளிவந்த 'திருவருள்' மாத இதழின் ஆசிரியராகச் செயல்பட்டார்.
பதிப்பு
கணவர் தமிழ்வாணன், மனைவி மணிமேகலை பெயரில், 'மணிமேகலை பிரசுரம்' என்ற பதிப்பகத்தை 1954-ல் தொடங்கி நடத்தினார்.
மறைவு
மணிமேகலை தமிழ்வாணன், செப்டம்பர் 14, 1994 அன்று காலமானார்.
மதிப்பீடு
நகரத்தார்களில் பலரும் நூல் பதிப்பு மற்றும் இதழியல் பணிகளில் ஈடுபட்டனர். அவர்களுள் குறிப்பிடத்தகுந்த பெண் இதழாளராகவும், எழுத்தாளராகவும் மணிமேகலை தமிழ்வாணன் அறியப்படுகிறார்.
நூல்
- உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர் (நாவல்)
உசாத்துணை
- நகரத்தார் கலைக்களஞ்சியம்: பதிப்பாசிரியர் ச. மெய்யப்பன்; இணையாசிரியர்கள் கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம். முதல் பதிப்பு: 1998.
✅Finalised Page
