second review completed

இதயகீதன்

From Tamil Wiki
Revision as of 21:34, 19 April 2026 by Jayashree (talk | contribs)
இதயகீதன்

இதயகீதன் (செ.வ. இதயகீதன்; முனைவர் இதயகீதன்) (செ. வனராசா) (ஏப்ரல் 12, 1960 - நவம்பர் 07, 2013) கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், இதழாளர், பதிப்பாளர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க உறுப்பினர். பொது வாசிப்புக்குரிய கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதினார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

வனராசா என்னும் இயற்பெயரை உடைய இதயகீதன், ஏப்ரல் 12, 1960 அன்று, தேனி மாவட்டத்தின் வருஷநாட்டிலுள்ள வாலிப்பாறை என்ற கிராமத்தில், பெ.செல்லாண்டி - செ.வீரம்மாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்விக்குப் பின் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். தொலை நிலைக் கல்வி வழியாக இரண்டு முதுகலைப் பட்டங்கள் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், கந்தர்வனின் படைப்புகளை ஆய்வு செய்து இள முனைவர் பட்டம் பெற்றார். 'வைரமுத்து கவிதைகளில் மார்க்சியத்தாக்கம்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

முத்தனம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழாசிரியராகப் பணியாற்றினார். ஹோமியோபதி மருத்துவம் கற்று ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்றினார். மணமானவர். மனைவி: வன. ரதிகா. பிள்ளைகள்: வ.ர. இளம் பரிதி, வ.ர. புதிய பரிதி.

இலக்கிய வாழ்க்கை

இதயகீதன், தொடர் வாசிப்பாலும், தனது தமிழாசிரியர் செல்லத்துரையாலும் மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டார். 'அக்னிக்குஞ்சு' உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் இதயகீதன், வனராசா, அறிவன், ரதி மணாளன் போன்ற பல பெயர்களில் கவிதை, கட்டுரைகளை, அரசியல் விமர்சனங்களை எழுதினார். தனது இள முனைவர் பட்ட ஆய்வை விரிவாக்கி, 'பழைய சோறும், பாதாம் கீரும்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். 'ஜீவா', 'வைரமுத்து கவிதைகளில் மார்க்சியத் தாக்கம்', 'வைரமுத்து திரைப்பாடல்களில் பொதுவுடைமைத் தாக்கம்' போன்ற நூல்களை எழுதினார்.

இதழியல்

இதயகீதன், 1986 முதல் 'அக்னிக்குஞ்சு' என்ற இலக்கிய இதழை ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். இளம் கவிஞர்கள் பலரது படைப்புகளை வெளியிட்டு ஊக்குவித்தார். பல புதிய படைப்பாளிகளை உருவாக்கினார். கந்தர்வன், ஜெயகாந்தன் போன்ற பல இலக்கிய ஆளுமைகளின் நேர்காணல்களை வெளியிட்டார்.

பதிப்பு

இதயகீதன், தனது தாய் - தந்தையின் முதல் எழுத்துகளை இணைத்து 'செவீ' என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றைத் தொடங்கி நடத்தினார். பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டார். பல இளம் படைப்பாளிகளின் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

அமைப்புச் செயல்பாடுகள்

இதயகீதன், ஆசிரியர் இயக்கத்திலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்திலும் இணைந்து பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். தமிழ்நாடு சிற்றிதழ்கள் சங்கத்தின் மாநில மாநாட்டை தேனி மாவட்டம் கம்பம் நகரில் பொறுபேற்று நடத்தினார். ஜெ.ஜெ. தொலைக்காட்சி தொடங்கப்பட்ட காலத்தில் பெரியார்தாசனை நடுவராகக் கொண்டு உருவாக்கப்பட்ட பேச்சரங்கத்தில், நிகழ்ச்சிகள் சிலவற்றின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். கல்வி வளர்ச்சிப் பாதுகாப்புச் சங்கத்தை உருவாக்கிக் கல்வி வளர்ச்சிக்காகச் செயல்பட்டார்.

'தேனி வையை தமிழ்ச்சங்கம்' உள்ளிட்ட பல்வேறு இலக்கிய அமைப்புகளின் ஆலோசகராகப் பணியாற்றினார். தேனி மாவட்டத்தின் இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைத்து கலை இலக்கியச் செயல்பாடுகளையும், செயல்பாட்டார்களையும் ஊக்குவித்தார். தேனி, மதுரை மாவட்டங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் எண்ணற்ற இளைஞர்களை அடையாளம் கண்டு ஊக்குவித்து எழுத வைத்தார். ஊர் தோறும் எழுத்தாளர்கள் சங்கக் கிளைகளை உருவாக்கினார். தேனி மாவட்டத்தின் தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவராகச் செயல்பட்டார். கலை இரவு நிகழ்ச்சிகளையும், நூல் வெளியீட்டு நிகழ்வுகளையும், கருத்தரங்குகளையும் ஒருங்கிணைத்து நடத்தினார்.

பொறுப்பு

  • தமிழ்நாடு சிற்றிதழ்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கக் கிளைச் செயலாளர்
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர்
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர்
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினர்
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர்
  • பாரதி புத்தகாலயத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

மறைவு

இதயகீதன், நவம்பர் 07, 2013 அன்று வாகன விபத்தால் காலமானார்.

மதிப்பீடு

இதயகீதன் கட்டுரை நூல்களையும், ஆய்வு நூல்களையும் எழுதினார். இதழாசிரியராகச் செயல்பட்டு பல படைப்பாளிகளை உருவாக்கினார். முற்போக்கு இலக்கியம் சார்ந்த எழுத்தாளர், பதிப்பாளர், இதழாளர், இலக்கியச் செயல்பட்டாளர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • நூற்றாண்டிலும் வாழும் ஜீவா
  • பழைய சோறும் பாதாம் கீரும்
  • வைரமுத்து திரைப்பாடல்களில் பொதுவுடைமைத் தாக்கம்
  • வைரமுத்து கவிதைகளில் மார்க்சியத்தாக்கம்
  • மார்க்சியம் - ஓர் அறிமுகம்

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.