under review

பாரததேவி

From Tamil Wiki
Revision as of 17:57, 15 April 2026 by Jayashree (talk | contribs)
பாரததேவி

பாரததேவி (பிறப்பு: ஜனவரி 30, 1948) தமிழில் எழுதி வரும் எழுத்தாளர், கதைசொல்லி. நாவல்கள், சிறுகதைகள், சிறார் கதைகள் எழுதினார். கி. ராஜநாரயணன் தொகுத்த நாட்டுப்புறக் கதைக் களஞ்சியப் பணியில் அவருடன் இணைந்து நாட்டுப்புறக் கதைகள், சொலவடைகள் மற்றும் பண்பாட்டுக்கூறுபாடுகளைத் தொகுத்துப் பதிவு செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

Bharathadevi.jpeg

பாரததேவி தமிழ் நாட்டின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகிலுள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தில் சங்கையா கோனார், ராக்கம்மாள் இணையருக்கு ஜனவரி 30, 1948-ல் பிறந்தார். தந்தை காவல்துறையில் பணியில் இருந்தவர். கோவில்பட்டியிலும் மீனாட்சிபுரத்திலும் ஆரம்பக் கல்வி கற்றார். தந்தையின் இறப்பிற்குப் பின் மீண்டும் பிறந்த ஊருக்கு வந்தார். வறுமை காரணமாக ஐந்தாம் வகுப்பிற்குப் பிறகு பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை.

தனி வாழ்க்கை

பாரததேவி ராஜு என்பவரை மணந்தார். மகன் அருண் சதீஷ் குமார்.

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்

பாரததேவி சாகித்திய அகாடமி வெளியீடான 'நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்' தொகுப்பிற்காக கி. ராஜநாராயணன் தலைமையில் அவரது அழைப்பின் பேரில் இணைந்து பணியாற்றினார். இவருடன் காவ்யா சண்முகசுந்தரம், கழனியூரான் ஆகியோர் பணியாற்றினர். நாட்டுப்புறக் கதைகள், சொலவடைகள் மற்றும் பண்பாட்டுக்கூறுபாடுகளைத் தொகுத்துப் பதிவு செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

பாரததேவி தன்முனைப்பால் வாசிக்கத் தொடங்கி எழுத்தாளரானார். கி. ராஜநாராயணனைத் தன் எழுத்துலகத் தந்தையாக வரித்துக் கொண்டார். கிராமத்து வாழ்க்கையைப் பதிவுசெய்யும் பல சிறுகதைகள், நாவல்களை எழுதினார். "பெண்மனம்" இரண்டு பாகங்கள், "நாட்டுப் புறத்துப் பெண்கள்" ஆகியவை வெளிவந்தன. 'நிலாக்கள் தூர தூரமாக' என்ற தன்வரலாற்று நூலையும் எழுதியுள்ளார்.

"கரிசல் காட்டுக் காதல் கதைகள்' என்ற தொடரை அவள் விகடனில் எழுதினார். தினகரன் வசந்தத்தில் "சுமைதாங்கிக் கற்கள்' என்ற தொடரை எழுதினார்.

இவருடைய நூல்கள் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கான கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

விருதுகள்

  • கிராம இலக்கியச் செல்வி விருது - மணிமேகலை மன்றம் - 2015
  • செந்நாப்புலவர் ஆ. கார்மேகக்கோனார் விருது - யாம் விருதுகள் - 2020
  • பாரதிதாசன் நினைவு மூத்த படைப்பாளர் விருது - தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை (2023)
  • Storyteller of the year - Global Women Icon Award - VV Entertainments - 2025
  • நாட்டுப்புறப் படைப்பாக்கம் - வாழ்நாள் சாதனையாளர் - காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் - 2025

மதிப்பீடு

"நிலாக்கள் தூரதூரமாக என்கிற நாவல் முழுக்க பெண்களின் வைராக்கியம், வாழ்க்கையை, எதிர் கொண்டு முன் நகர்கிற பெண்களின் தொகுப்பாகத் தான் அமைந்திருக்கிறது. புனைவிலக்கியப் பகுதிக்குத் தான் முன் தீர்மானங்களை கலைத்துப் போடும் ஆற்றல் உண்டு. ஆழமான தத்துவ விவாதங்களையும் கூட தன் எளிய கதைகளால் கடந்து சென்ற எழுத்து பாரத தேவியினுடையது." என ம.மணிமாறன் கீற்று இதழில் "பெண் எழுதிச் செல்லும் காலம்" என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

  • நிலாக்கள் தூர தூரமாக
  • மேகங்களே நிலாவை நகர்த்துகின்றன
  • அவள் ஏன் மௌனமானாள்?
  • பூவாசம்
  • பூவெல்லாம் மாலைகளுக்காக
  • அன்பே அமுதா
  • விடை கிடைத்துவிட்டது
  • காதல் என்பது தேய்பிறை
  • அம்புலிகள் வளர்வதில்லை
  • இருட்டாய் போன வெளிச்சங்கள்
  • ஒரு இரவின் மொழிபெயர்ப்பு
  • சந்தர்ப்பம்
  • மூன்றாம் கோழி
  • அன்றொரு நாள் இதே நிலவில்
  • வண்டடைந்த பூக்கள்
  • நிறம் மாறும் நிலங்கள்
  • பாவங்களும், பாவைகளும்
  • செங்காத்து பூமியிலே
  • என் பிருந்தாவனம்
  • தெரு வியாபாரிகள்
  • வெட்டவெளிக் காற்று
  • பாட்டி சொன்ன கதைகள் (சிறார் கதைகள்)
  • கள்ளிக் காட்டுக் காதல் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)
  • நெல்லுச்சோறு (சிறுகதைத் தொகுப்பு)
  • எங்க ஊரு வாசம் (கட்டுரைகள்)
நாட்டார்
  • பெண்மனம் (கி.ரா.வுடன் இணைந்து)
  • காதில் விழுந்த கதைகள்
  • கதைகளுக்குள் கதைகளும், கதைகளுக்குள் கதையும்

இணைப்புகள்


✅Finalised Page