under review

எஸ். டி. சுந்தரம்

From Tamil Wiki
Revision as of 00:47, 25 September 2022 by Jeyamohan (talk | contribs)
எஸ்.டி.சுந்தரம்

எஸ். டி. சுந்தரம் (சேலம் துரைசாமி சுந்தரம்; பிறப்பு: ஜூலை, 22, 1921; இறப்பு: மார்ச் 3, 1979) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட வசன ஆசிரியர், திரைப்பாடலாசிரியர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். தமிழ்நாடு சட்டசபையில் மேலவை உறுப்பினராகப் பணி புரிந்தவர்.

பிறப்பு, கல்வி

சேலம் துரைசாமி சுந்தரம் என்னும் எஸ். டி. சுந்தரம், ஜூலை, 22, 1921ல், சேலம் மாவட்டம் ஆத்தூரில் துரைசாமி - பூங்கோதை அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். அடிப்படைக் கல்வி பயின்ற இவர், நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நடத்தி வந்த நாடகக்குழுவில் சேர்ந்தார். பால பார்ட் வேடங்களில் நடித்தார்.

சுந்தரத்திற்கு இருந்த தமிழார்வத்தை அறிந்த ராஜமாணிக்கம் பிள்ளை, திருவையாறு அரசுக் கலைக் கல்லூரியில் சேர்த்து அவரைப் படிக்க வைத்தார். படிக்கும் போதே சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார் சுந்தரம். திருவையாறில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டார். அதனால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து மீண்டு கல்வியைத் தொடர்ந்து ‘வித்வான்’  படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

1948-ல், ஜெயலட்சுமியுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு ஒரு மகள், மூன்று மகன்கள்.

கவியின் கனவு - எஸ். டி. சுந்தரம்

நாடக வாழ்க்கை

எஸ்.டி.சுந்தரம் சிறையில் இருக்கும்போது ‘கவியின் கனவு’ என்ற தலைப்பில் எழுதிய நாடகத்தை ‘சக்தி’ கிருஷ்ணசாமியுடன் இணைந்து ‘சக்தி நாடக சபா’ என்ற நாடகக்குழுவை உருவாக்கி மேடையேற்றினார். அந்நாடகத்தில் சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி. சுப்பையா உள்ளிட்ட பலர் நடித்தனர். தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான முறைகளுக்கும் மேல் இந்நாடகம் மேடையேறியது. ‘கவியின் கனவு ஸ்பெஷல்’ என்று திருச்சியிலிருந்து நாகப்பட்டினம் வரை தனியாக ரயில் விடப்பட்டது.

அரசியல்

எஸ்.டி.சுந்தரம் காங்கிரஸ் ஆதரவாளராக அறியப்பட்டார்

திரைப்பட வாழ்க்கை

நாடக வெற்றியால் எஸ். டி. சுந்தரத்திற்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தன. அவர் எழுதிய திரைப்படங்கள்

  • 1948 மோகினி (வசனம்)
  • 1949 லைலா மஜ்னு ( மொழிமாற்ற வசனம்)
  • 1953 ரோகிணி திரைக்கதை
  • 1953 மனிதனும் மிருகமும் ( தயாரிப்பு, கதை வசனம், இணை’ இயக்கம்)
  • 1953 அவன் (வசனம்)
  • 1954 விப்ரநாராயணா ( மொழிமாற்ற வசனம், பாடல்கள்)
  • 1955 கள்வனின் காதலி (வசனம்)
  • 1958 சாரங்கதரா திரைக்கதை வசனம்
  • 1956 ஒன்றே குலம் (வசனம்)
  • 1958 பொம்மைக் கல்யாணம் (வசனம்)
  • 1958 பாட்டாளியின் சபதம் (வசனம்)
  • 1961 கப்பலோட்டிய தமிழன் (வசனம்)

எஸ். டி.சுந்தரம் புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களை எழுதியிருக்கிறார். ஏராளமான பக்திப் பாடல்களையும் எஸ்.டி.சுந்தரம் எழுதியுள்ளார். அவற்றில் பலவற்றை சீர்காழி கோவிந்தராஜன் பாட, டி.ஆர்.பாப்பா இசையமைத்துள்ளார்.

இலக்கியச் செயல்பாடுகள்

எஸ்.டி.சுந்தரத்தின் கவியின் கனவு நூல்வடிவில் வெளிவந்து புகழ்பெற்றது. திரைப்பட எழுத்தாளர், பாடலாசிரியராகவே எஸ்.டி.சுந்தரம் அறியப்படுகிறார். சீனப்போர்க் காலத்தில் “சிங்கநாதம் கேட்குது சீன நாகம் ஓடுது” என்ற பாடல் தமிழகமெங்கும் பிரபலமானது. பின்னர் அதே தலைப்பில் தனது சொந்தச் செலவில் குறும்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டார். வானமுதம், காந்தியுகம் ஆகிய கவிதை தொகுதிகளை வெளியிட்டார்.

இதழியல்

எஸ், டி.சுந்தரம் ‘உலக நாடகம்’ என்ற மாத இதழைத் தொடங்கிச் சிலகாலம் நடத்தினார்.

பதவிகள்

எஸ்.டி.சுந்தரம் 1964 முதல் 1968வரை தமிழ்நாடு சட்டசபையில் மேலவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றச் செயலாளராகப் பணிபுரிந்தார்.

விருதுகள்

  • சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது
  • சங்கீத நாடக அகாதமி விருது
  • தமிழக அரசின் ‘பாரதிதாசன் விருது’ (மறைவுக்குப் பின் வழங்கப்பட்டது)

மறைவு

எஸ்.டி.சுந்தரம், மார்ச் 3, 1979 அன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார்.

ஆவணம்

இவரது நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியுள்ளது. அவற்றில் சில தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

வரலாற்று இடம்/மதிப்பீடு

எஸ். டி. சுந்தரம் தேசப்பற்று மிக்கவர். அவற்றைத் தனது படைப்புகள் மூலம் வெளிப்படுத்தினார். குறிப்பாக நாடகங்களை அவற்றுக்கான களமாக அவர் பயன்படுத்தினார். “தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த நாடக ஆசிரியர்களில் திரு. எஸ். டி. சுந்தரமும் ஒருவர்” என்று கல்கி தனது ‘கலைச்செல்வம்’ கட்டுரை நூலில் குறிப்பிட்டிருக்கிறார். பேராசிரியர் ரா. ஸ்ரீ. தேசிகன், “அவர் பண்டைய இலக்கியங்களில் வான் நயங்களைப் பருகி, அவற்றில் ஆழ்ந்து திளைத்தவர்” என்று மதிப்பிட்டுள்ளார்.

நூல்கள்

நாடக நூல்கள்
  • கவியின் கனவு
  • நம் தாய்
  • அரவிந்தர்
  • வீர சுதந்திரம்
  • சிரிப்பதிகாரம்
கவிதைத் தொகுப்புகள்
  • வானமுதம்
  • காந்தியுகம்
கட்டுரை நூல்கள்
  • இந்தியா எங்கே?
  • மகா புத்திசாலி
  • கவியின் குரல்’

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.